Load Image
Advertisement

அந்துமணி பா.கே.ப.,

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு இருக்கும், அந்த வாசகியை சந்தித்து!
ஒல்லியான, உயர்ந்த உருவம், 'பாப்' செய்யப்பட்ட தலை அலங்காரம், 'மிடி' போன்ற, 'மாடர்ன்' உடைகளையே எப்போதும் அணிவார்.
அவர் ஒரு, 'இன்டீரியர் டெக்கரேட்டர்!' அலுவலகங்கள், வீடுகள் மற்றும் கடைகள் போன்றவற்றின் உள் அலங்காரங்களை வடிவமைப்பதில் வல்லுனர்.
தமக்கு ஏற்றவர் என்று ஒருவரைத் திருமணம் செய்து, இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தவர். கணவராக அமைந்தவர் ஊதாரி; பணம் சம்பாதிக்கும் திறமை இருந்தும், தன் ஊதாரி மற்றும் ஏமாளித்தனத்தால் அனைத்தையும் இழப்பவர் என்பதை, காலப் போக்கில் அறிந்து கொண்டார் வாசகி. இருப்பினும், தன் கணவரின் தொழிலுக்கு பணத் தேவை என்று வந்தபோது, தன்னிடமிருந்த நகைகளை எல்லாம் விற்று, கணவரிடம் கொடுத்தார். அதையும், 'கடலில் கரைத்த பெருங்காயமாக்கி' விட்டார், கணவர். அதனால், அதுவரை நிறுத்தி வைத்திருந்த தன் பழைய தொழிலான, 'இன்டீரியர் டெக்கரேஷனி'ல் இறங்கினார்.

ஏற்கனவே, இத்துறையில் நன்கு அறிமுகமானவர் என்பதால், நல்ல வருமானம் வர ஆரம்பித்தது. தன் கணவரின் சம்பாத்தியத்திற்கு நான்கு மடங்கு அதிகம் சம்பாதிக்க ஆரம்பித்ததும், கணவரால் பொறுக்க முடியவில்லை.
ஏற்கனவே இருந்த குடிப்பழக்கம், இதனால் அதிகமாகி, மனைவியை அடிக்கவும் துணிந்து விட்டார். இத்தனைக்கும், அவரது மூத்த மகன் ஒன்பதாம் வகுப்பும், அடுத்தவன் எட்டாம் வகுப்பும் படிக்கும் நிலையில்!
சாம, தான, பேத, தண்டங்களைப் பயன்படுத்தி, கணவரைத் திருத்த முயன்று தோல்வி கண்ட பின், குழந்தைகளை, 'ஹாஸ்டலில்' சேர்த்து, கணவரைப் பிரிந்து, தனி ஒரு வீட்டில், வேலைக்கார ஆயா ஒருவரின் துணையுடன் வாழ ஆரம்பித்தார்.
இந்நிலையில் தான், இவரின் அறிமுகம், எனக்கு கிடைத்தது. மண வாழ்வின் எதிர்காலம் எப்படி இருக்குமோ எனக் குழம்பிய நிலையில், 'நான் இப்போதிருக்கும் சூழ்நிலையில், என் மனதும், உடம்பும் ஆதரவுத் தோள் தேடுகிறது. ஆனால், சுற்றி இருப்பவர்களை நம்ப முடியவில்லை. வழி தவறி சென்று விடுவேனோ என்ற பயமாக இருக்கிறது...' என கூறியபடியே, 555 ஒன்றை பற்ற வைத்து, 'கும்' என இழுத்து, மூக்காலும், வாயாலும் புகையை வெளியேற்றுவார்.
ஆறுதல் மொழியும், தெம்பான வார்த்தைகளும், தைரியமளித்தலும் தானே இது போன்ற குழப்ப நிலையில் உள்ளவர்களை தெளிவடையச் செய்யும். அதையே வழிமுறையாக கடைப்பிடித்தேன் இந்த வாசகியிடம்!
திடுதிப்பென இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒருநாள், அலுவலகம் வந்து, தனக்கேற்ற ஒரு துணை கிடைத்து விட்டதாக கூறினார். இதனிடையே, தன் கணவரை விவாகரத்தும் செய்திருந்தார்.
புதியவர், கம்ப்யூட்டர் துறையில் வல்லுனர் எனவும், அவரும், மண விலக்கு பெற்றவர், முதல் தாரத்தின் மூலம் குழந்தைகள் ஏதும் கிடையாது. வயதான பெற்றோர் மட்டுமே உள்ளனர், விரைவில் பதிவுத் திருமணம் செய்ய இருப்பதாக கூறினார்.
அச்சந்திப்பிற்கு பின் தொடர்பு விட்டுப் போயிற்று!
கடந்த வாரம் அலுவலகத்தில் நுழைந்த எனக்கு ஆச்சர்யம்! அதே வாசகி... கருப்பு மிடி, வெள்ளை டாப்ஸ். 'பாப்' தலை அலங்காரம். உற்சாகமாக, 'ஹவ் ஆர் யூ மணி?' எனக் கேட்டு ஒரு துள்ளல் துள்ளினார்.
பின்னர் பேசிக் கொண்டிருந்தபோது, தன் வாழ்க்கையில் சிக்கலான கட்டங்களில் என் தைரியமூட்டல் எவ்வளவு பலத்தை அவருக்குக் கொடுத்தது என்பது பற்றி கூறி மகிழ்ந்தார். தன் இரு மகன்களும் பெரிய வகுப்புகளுக்கு சென்று விட்டதையும், படிப்பில் அவர்கள் சூட்டிப்பாக இருப்பதையும் ஹாஸ்டலிலேயே அவர்கள் தங்கி விட்டதையும் கூறினார்.
பின், புது கணவர் தன் மீது செலுத்தும் அன்பு குறித்தும், கணவருக்கு உதவும் முகமாக தனக்கு சிறிதும் தொடர்பில்லாத கம்ப்யூட்டர் துறையில் நுழைந்து, கற்று, அவருக்கு உதவுவதையும் குறிப்பிட்டார்.
திருப்தியான வாழ்க்கை வாழ்வதை அவரது முகமே, உறுதிப்படுத்தியது. நீண்ட நேர உரையாடலுக்குப் பின், மற்றொரு, 555 ஒன்று அவரது உதடுகளுக்கு சென்றது. முன்போலவே மூக்கு - மற்றும் வாய் வழியாக புகையை சிந்தியபடி அலுவலகத்தின் வெளியே வந்து, தன் உபயோகத்திற்காக கணவர் அளித்துள்ள புதிய காரை என்னிடம் பெருமையாகக் காட்டினார். பின், லாவகமாக காரில் அமர்ந்து, அன்னப் பறவை செல்வது போல காரை செலுத்தினார்.
- படித்து, வேலையில் உள்ள பெண்களுக்கு எவ்வளவு தான் கஷ்டம், மனச்சோர்வு, அதனால் உடல் தளர்வு ஏற்பட்டாலும், புத்திசாலித்தனமாக அவற்றை சமாளித்து வெளியே வரும் திறமை இருப்பதை அறிய முடிந்தது.
அரசு பஸ் விபத்து ஒன்றில், தன் மகனின் உயிரை பலி கொடுத்த, 65 வயதைத் தாண்டிய முதியவர் ஒருவர், என்னைத் தேடி அலுவலகம் வந்தார்.
'தம்பி, 28 வயசுப் பையன் என் மகன்... எனக்கு, ரெண்டு மகளுங்க. கை நிறைய சம்பாதிச்சு குடும்பத்தைக் காப்பாத்திகினு இருந்தான்... அரசு பஸ் ஒன்றில் பயணம் செய்த போது, பஸ் விபத்துக்குள்ளாகி இறந்து போனான். வருஷம் நாலாச்சு... இன்னும் எந்தவித நஷ்டஈடும் கிடைக்கல்ல...' என்றவர், தொடர்ந்து, 'பஸ் விபத்துக் குறித்தும், அவ்விபத்துகளில் அப்பாவிப் பயணியரும், பொதுமக்களும் மரணமடைவது குறித்தும், தினமும் செய்தித் தாளில் படிக்கிறோம்.
'இவ்வித விபத்துகளுக்கு, 90 சதவீதம் காரணம், அரசு பஸ் ஓட்டுனர்கள் தான். சில விபத்துகளில் அரசு பஸ் ஓட்டுனர்களும் உயிர் இழக்கின்றனர் தான். ஆனால், அவர்களுக்கு ஆயுள் காப்பீட்டு வசதி மற்றும் வாரிசுதாரருக்கு வேலை போன்ற சலுகைகளும், வசதிகளும் இருப்பதால், குடும்பத்திற்கு கஞ்சி ஊற்றுபவரின் இழப்பால், அவரின் குடும்பம் நடுத்தெருவிற்கு வந்துடுறதில்ல. ஆனா, விபத்தில் இறந்து போகும் அல்லது முடமாகிப் போகும், தனியார் நிறுவனத்தில் மாத வருமானம் பெறுவோரோ அல்லது அன்றாடம் காய்ச்சி குடும்பத் தலைவனோ அல்லது தன் வருமானம் மூலம் குடும்பத்திற்கு கஞ்சி ஊற்றும் ஒரு இளைஞனையோ நம்பி உள்ளவர்களை எண்ணிப் பாருங்கள்...
'அண்ணன் இருக்கிறார்... நம் படிப்புச் செலவுகளை கவனித்துக் கொள்வார்' என, நம்பி இருக்கும் தம்பி... 'அப்பா இருக்கிறார்... நம் திருமணத்தை சிறப்புற நடத்தி விடுவார்' என்ற எண்ணத்தில், கல்யாணக் கனவுகளில் மூழ்கியிருக்கும் கன்னிப்பெண்...
'இவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்பதையும், விபத்தினால் முடமாகி, சம்பாதிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட அந்த தகப்பனுக்கோ, அண்ணனுக்கோ என்று, எப்போது நியாயம் கிடைக்கிறது? ஒரு வருடம்... இரண்டு வருடம்... ஐந்து வருடம்... யாராலும் தீர்மானிக்க இயலாத நிலையில், இதற்கான சட்டங்கள் இங்கு உள்ளன.
'அதே நேரம், விபத்துக்கு காரணகர்த்தாவாக இருந்து, உயிர் தப்பிய அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுனருக்கு பணியில் ஏதாவது பாதிப்பு ஏற்படுகிறதா என்றால், இல்லை.
'தப்பு செய்தால் தண்டனை கிடைக்கும்... விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வரை, அரசு போக்குவரத்துக் கழகத்தில் இருந்து வேலை நீக்கம் உண்டு, நிவாரணம் கிட்டும் காலக்கட்டம் வரை, 'டிரைவிங் லைசென்ஸ்' முடக்கப்படும், வேறு எந்த இடத்திலும் ஓட்டுனர் பணி மேற்கொள்ள முடியாத நிலையும் ஏற்படும் என்ற சூழ்நிலை இருக்குமானால், அஜாக்கிரதையாக பஸ்சை ஓட்டுவார்களா... நீங்களாவது இதப்பத்தி எழுதி, நேர்மையான தீர்வு கிடைக்க வழி செய்யுங்க...' என, கண்ணீர் மல்க கூறினார், அப்பெரியவர்.
புத்திர இழப்பு சோகத்தாலும், அதனால் ஏற்பட்டுள்ள குடும்ப ஏழ்மையினாலும் அவரும், அவர் குடும்பதாரும் அடைந்துள்ள பாதிப்பை உணர முடிந்தது.
கடுமையான கட்டுப்பாடுகளையும், விதி முறைகளையும், அரசு பஸ் ஓட்டுனர்களுக்கு விதித்தால், அப்பாவிப் பயணியருக்கு இழைக்கப்படும் கொடுமை, ஓரளவேணும் கட்டுப்படும் எனத் தோன்றுகிறது; உரியவர்கள் கவனத்திற்கு செல்லுமா இக்கோரிக்கை!



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement