Advertisement

சந்திரபாபு (18)

சந்திரபாபுவை சந்தித்த ஒரு பெண்மணி, சந்திரபாபு உச்சரித்த ஒரு ஆங்கில வார்த்தையை திருத்தியதோடு, புகழ் பெற்ற ஓவியர் பற்றி குறிப்பிட்டு, அவரைப் பற்றி தெரியுமா என்று வினவினார்.அந்த ஓவியர் பற்றி தெரியாது என்று சந்திரபாபு கூறியதும், 'இதையெல்லாம் தெரிந்து கொள்ளாத நீங்கள், எப்படி உங்களை, 'கலைஞர்' என்று அழைத்துக் கொள்கிறீர்கள்?' என்றதும், மறுவார்த்தை பேச முடியாமல் திணறிப் போய் விட்டார், சந்திரபாபு.
அதன் பின் ஓவியக் கலை பற்றியும், உலகின் தலைசிறந்த ஓவியர்கள் பற்றியும் சொல்லத் துவங்கினார், அந்தப் பெண்மணி.
'பலதரப்பட்ட விஷயங்களை சிறிது சிறிதாக எனக்கு எடுத்துச் சொல்லி, உலக விஷயங்கள் பலவற்றை தெரிந்து கொள்ளும்படிச் செய்து, எனக்கு ஆசானாக விளங்கிய அந்தப் பெண்மணியை என்னால் மறக்கவே முடியாது. என் வாழ்க்கையில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்த தினம் என்று ஒன்றைச் சொல்வதானால், அந்தப் பெண்மணி எனக்கு அறிமுகமான தினத்தைத் தான் சொல்ல வேண்டும்...' என்று, அப்பெண்மணி பற்றி கூறியுள்ளார், சந்திரபாபு.

சென்னையில் உள்ள பீமண்ண முதலி கார்டன் தெருவிற்கு சந்திரபாபு குடி வந்த புதிதில், அவரது வீட்டின் கீழ்ப்பகுதியில், ஒரு பெரிய மோட்டார் கம்பெனியில் விற்பனைப் பிரிவில் வேலை பார்த்த ஒருவர் குடியிருந்தார்.
அவருக்கு இரண்டு பெண்கள்; பெரிய பெண்ணுக்கு, 11 வயதும், சின்னவளுக்கு, எட்டு வயதும் இருக்கும்.
படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் அவர்களுடன், பொழுது போக்காக எதையாவது பேசி, பாடிக் கொண்டு இருப்பார், சந்திரபாபு.
ஒரு நாள், அவர்கள் தங்கள் வீட்டைக் காலி செய்து, வேறு எங்கோ சென்று விட்டனர்.
ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் அவர்களை சந்தித்தார், சந்திரபாபு.
கடற்கரையில், மின் விளக்கின் கீழ், பியட் கார் ஒன்று நின்றிருந்தது.
அடையாளம் தெரிந்து, வேகமாக அங்கே சென்றார், சந்திரபாபு.
அந்த இரு பெண்களும் நன்றாக வளர்ந்திருந்தனர். அதிலும், பெரியவள், அழகிய குமரியாக மாறியிருந்தாள்.
அவர்களது தந்தையுடன் பேசிக் கொண்டிருந்த சந்திரபாபு, காருக்குள் இருந்த பெரிய பெண்ணிடம், 'ஏம்மா... வண்டியிலேயே உட்கார்ந்திருக்க... கீழே இறங்கி வாயேன்...' என்றார்.
அந்தப் பெண் பதில் ஏதும் பேசவில்லை.
'ஏம்மா வரமாட்டியா...' என்று மறுபடியும் கேட்டதும், அந்தப் பெண்ணின் தந்தை, 'அவ இறங்கி வர மாட்டா. நாங்க பழைய வீட்டைக் காலி செய்துட்டு, புது வீட்டுக்குப் போன கொஞ்ச நாள்ல இவளுக்கு இளம்பிள்ளை வாதம் வந்து, இரண்டு கால்களும் நடக்க முடியாமப் போயிடுச்சு...' என்றார்.
அந்தப் பெண்ணின் மவுனத்துக்குப் பின் மறைந்திருந்த வலி நிறைந்த உண்மையைக் கேட்டவுடன், அழத் துவங்கி விட்டார், சந்திரபாபு.
அவர் அழுவதைக் கண்ட அந்தப் பெண்ணுக்கும் என்னவோ போல் ஆகிவிட்டது. சந்திரபாபுவை, சகஜ நிலைக்குக் கொண்டு வர, 'பாபு மாமா... எங்கே ஒரு பாட்டுப் பாடுங்க; நாங்க கேட்கிறோம்...' என்றாள்.
அன்றைய தினம், பத்திரிகையாளர்கள் சங்கம், ஒரு கதம்ப நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அந்நிகழ்ச்சியில் பாடுவதற்கு ஒப்புக் கொண்டிருந்தார், சந்திரபாபு. ஆனால், மனநிலை சரியில்லாத காரணத்தினால், அங்கே செல்லாமல், கடற்கரைக்கு வந்திருந்தார்.
அந்தப் பெண் பாடச் சொன்னதும், அந்நிகழ்ச்சிக்குப் போக வேண்டும் என்ற எண்ணம், சந்திரபாபுவுக்கு வந்து விட்டது.
'பாடறேம்மா... சாதாரணமா நான் பாடப் போறதில்ல; பின்னணி வாத்தியங்களுடன் பாடிக் காட்டறேன். என் காரை பின்தொடர்ந்து வாங்க...' என்று சொல்லி, திருவல்லிக்கேணி, என்.கே.டி., கலா மண்டபத்துக்கு அவர்களை அழைத்துச் சென்றார். மண்டபத்தின் உள்ளேயும், வெளியேயும் நல்ல கூட்டம்.
கலைஞர்கள் செல்ல பக்கவாட்டில், ஒரு வாசல் அமைத்திருந்தனர். ஆனால், பின் தொடர்ந்து வந்த கார், பிரதான வாயிலுக்குள் சென்றது. அவ்வளவு கூட்டத்துக்கு நடுவே, காரில் இருந்து இறங்கி அந்தப் பெண், நொண்டியபடி வந்தார். அதைக் கண்டு மனம் தாங்காத சந்திரபாபு, தன் காரில் இருந்து இறங்கி ஓடோடிச் சென்று, பக்கத்து நுழைவாயிலின் வழியே மேடைக்கு மிக சமீபத்தில் அவர்கள் கார் வரும்படி ஏற்பாடு செய்தார்.
'நீ காரிலேயே இருந்து, நான் பாடுவதைக் கேள்...' என, அந்தப் பெண்ணிடம் சொல்லி, மேடை ஏறினார்.
அதன் பின் நடந்தது பற்றி, சந்திரபாபுவே கூறியுள்ளது:
நான் பாடினேன்; அந்தப் பெண் காரில் இருந்தபடி அதைக் கேட்டாள். அங்கு கூடியிருந்த யாரும் என் கண்களுக்குத் தெரியவில்லை. என் பாட்டைக் கேட்டு, பரவச நிலையில் இருந்த அந்தப் பெண் தான், அந்த இடத்தையே நிரப்பி, என் இதயத்திலும் நிரம்பி நின்றாள். நிகழ்ச்சி முடிந்தது; அவர்களை வழி அனுப்ப, காருக்கு அருகே சென்று, அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். பலர் எங்களைத் தாண்டி, நாங்கள் பேசுவதைக் கவனித்தபடி சென்று கொண்டிருந்தனர். அதில் ஒரு குரல் மட்டும் என் காதுகளுக்குத் தெளிவாகக் கேட்டது...'சந்திரபாபு யாரையோ தள்ளிட்டு வந்துருக்கான் பாருடா...'
- என்ன அநாயசமான வார்த்தைகள்; எவ்வளவு அசிங்கமான உள்ளத்தில் இருந்து அந்த வார்த்தைகள் வந்திருக்க வேண்டும்... நான் அந்தப் பெண்ணிடம் காட்டிய பரிவு, இரக்கம், கருணை என்ன... அவன் இவ்விதம் சொல்லிப் போனது என்ன!
ஆண்டவனே... மனிதனுக்கு மனிதன், எப்படி எண்ணத்தில் மாறுபடுகிறான்.
கோபுரமும், குப்பை மேடும் எப்படி அருகருகே வருகின்றன.
உண்மையைப் புரிந்து கொள்ளாமல் பேசிய அந்த ஜடத்துக்காக நான் அனுதாபப்பட்டேன்; வேறு என்ன செய்வது!
அரசியலையோ, அரசியல்வாதிகளையோ தேடிப் போனதில்லை, சந்திரபாபு. ஆனால், அவரைத் தேடி வந்தனர், அரசியல்வாதிகள். காரணம், 'சினிமா நடிகர்' என்ற புகழ் ஒளி!
சந்திரபாபுவின் வாழ்வில் அரசியல் காற்று வீசிச் செல்லக் காரணம், மறைந்த, தி.மு.க., தலைவர்களுள் ஒருவரான, ராம.அரங்கண்ணலுடன் அவர் கொண்டிருந்த நட்பு தான். அதை, அரங்கண்ணலின் வார்த்தைகளில் இருந்தே தெரிந்து கொள்வோம்...
'கடந்த, 1947ல், திருவல்லிக்கேணி பைகிராப்ட்ஸ் சாலையில் இருக்கும், 581 எண் வீட்டின், மேல் மாடிக்குக் குடி வந்தேன். அந்த வீட்டுக்கு தற்செயலாக ஒரு நடிகர் நுழைந்தார். தன் பெயர், சந்திரபாபு என்று சொல்லிக் கொண்டார். பேப்பர் படிக்க வந்ததாகவும், முல்லை சத்தியின் நண்பர் என்றும் சொன்னார். என்னோடு ஐக்கியமான அவர், சிறந்த நகைச்சுவை நடிகராக இருந்து மறைந்த, சந்திரபாபு தான்!
அப்போது எனக்கு அவர் தான் ஓய்வு நேர ரேடியோ; நன்றாகப் பாடுவார். அவர் தந்தை, ரோட்ரிக்ஸ், திருவல்லிக்கேணியில் குடியிருந்தார். 581வீட்டுக்கு ஒரு சுமையாகி, எனக்குச் சுவையான நண்பராகவும் ஆனார், சந்திரபாபு. சக்கரம் போன்ற இந்த வாழ்க்கையில், மாதம், 120 ரூபாய் வருமானத்தில், நடிகர் சந்திரபாபு போன்றோரையும் வைத்து, பிற நண்பர்களுக்கும் செலவழித்துக் கொண்டு இருந்தேன்...' என்று குறிப்பிட்டுள்ளார்.
பிற்காலத்தில், சந்திரபாபு நடிகராகப் புகழ் பெற்ற பின், இந்த நட்பு, அரங்கண்ணலுக்கு உதவியது. மேலும், திரைப்படத் தயாரிப்பாளர் என்ற ரீதியிலும் அவர்களின் நட்பு நீடித்தது.
தொடரும்.

நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் சென்னை.
- முகில்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement