Advertisement

இது உங்கள் இடம்!

அடுத்தவரை நோகடிக்காத அறிவிப்பு!
என் நெருங்கிய உறவினர் ஒருவரை, தனியார் மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். சமீபத்தில் நலம் விசாரிக்க சென்றிருந்தேன். அங்கிருந்த ஊழியர்கள், நோயாளிகளிடமும், வெளியாட்களிடமும், தன்மையாகவும், மரியாதையாகவும் நடந்து கொள்ளும் முறை என்னை மிகவும் கவர்ந்தது.
அது மட்டுமில்லாமல் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்புகளும் வித்தியாசமாகவும், சிந்திக்க வைப்பதாகவும் இருந்தன. அவற்றில் என்னை கவர்ந்த இரண்டு அறிவிப்புகள்:
'ஊழியர்களுக்கு சன்மானம் தரவேண்டாம்...' என்று நேரிடையாக சொல்லாமல், 'சன்மானம் வாங்குவது அவமானம் என்று நினைப்பவர்கள் எங்கள் ஊழியர்கள்; தயவுசெய்து சன்மானம் கொடுத்து அவர்களை அவமானப்படுத்த வேண்டாம்...' என்றும், 'உங்கள் பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்...' என்று நேரிடையாக சொல்லாமல், 'உங்கள் பொருட்கள் எதுவாக இருந்தாலும் அவை மிகவும் மதிப்புடையவை; அவற்றை உங்களை விட யாராலும் பத்திரமாக பார்த்துக்கொள்ள முடியாது. எனவே, பொருட்களின் மீது கவனமாக இருங்கள்...' என்றும் எழுதியிருந்தது.
இதுபோன்ற நாகரிகமான, யார் மனதையும் புண்படுத்தாத அறிவிப்புகளை மற்ற மருத்துவமனைகளிலும், ஓட்டல்களிலும், இலவச சேவை நிலையங்களிலும், பொது இடங்களிலும் வைக்க, சம்பந்தப்பட்டோர் நடவடிக்கை எடுத்தால், வீண் மன வருத்தம் ஏற்படாது அல்லவா!
— எஸ்.கே.நாகேந்திரன், மதுரை.

பாட்டியின் தாலாட்டு பாட்டு!
குழந்தை பெற்று மூன்று மாதங்களாகிவிட்ட என் மகளின் தோழியைக் காண, நானும், என் மகளும் சென்றிருந்தோம். குழந்தைக்காக வாங்கிச் சென்ற, 'கிப்ட்'டை கொடுத்த போது, துாக்கத்துக்கு குழந்தை அழவே, குழந்தையை தொட்டிலிட்டு, 'கண்ணும் நீயே... காற்றும் நீயே...' பாடலை, மொபைல் போனில் ஆன் செய்து, தொட்டிலை ஆட்டியபடி எங்களுடன் பேசிக் கொண்டிருந்தாள், என் மகளின் தோழி; ஆனாலும், குழந்தை துாங்காமல், அழுதது. அச்சமயம், ஓர் அறைக்குள் இருந்து வெளிப்பட்ட அவளது பாட்டி, பேத்தியை திட்டி, 'ஆரிராரோ' பாட்டை பாட ஆரம்பித்து, தொட்டிலை ஒரே சீராக ஆட்டத் துவங்கினார். ஆச்சரியமாக, அழுகையை நிறுத்தி, துாங்க ஆரம்பித்தது, குழந்தை.
இந்நிகழ்ச்சி, குடும்பத்தில் முதியோரின் பங்கை எனக்கு உணர்த்தியது. அதிலும், குழந்தை தாயின் குரலை கேட்டபடி தான் துாங்கி, வளர வேண்டும் என்று அறிவுரையும் கூறினார், அந்த பாட்டி.
இளம் தாய்மார்களே... உணருங்கள்!
— சி.மாரீஸ்வரி சந்திரன், காஞ்சிபுரம்.

வேலை கிடைக்கவில்லையா?
கஷ்டப்பட்டு, தன் மகனை இன்ஜினிரிங் படிக்க வைத்தார், உறவினர். அவனும் நன்றாக படித்து தேர்ச்சி பெற்றான்; ஆனால், குறைந்த சம்பளத்தில் வெளியூரில் தான் வேலை கிடைத்தது. அது, தன் செலவுக்கே சரியாகி விடும், வீட்டிற்கு எந்த பண உதவியும் செய்ய முடியாது என்பதால், அவன் போகவில்லை. இந்நிலையில், அவன் வீட்டிற்கு அருகில் இருக்கும் பள்ளி மாணவர்கள், அவனிடம் பாடத்தில் சந்தேகம் கேட்க வருவர், அவனும் பொறுமையாக சொல்லிக் கொடுப்பான்.
இதனால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், தங்களுக்கு, 'டியூஷன்' எடுக்கும்படி வற்புறுத்தி, அதற்குரிய பணம் கொடுப்பதாக கூறினர்.
அதனால், மகிழ்ச்சியுடன் பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தான். அவன் பாடம் நடத்தும் விதம், மாணவர்களுக்கு பிடித்துவிடவே, நிறைய மாணவர்கள் சேர்ந்து விட்டனர்.
இதற்கிடையில், உள்ளூர் கல்லுாரியில், பகுதி நேர ஆசிரியர் வேலையும் கிடைக்கவே, கல்லுாரிக்கு போய் வந்த பின், தன் நண்பனுடன் சேர்ந்து, 'டியூஷன்' எடுக்கிறான்.
வேலை கிடைக்கவில்லையென்று சோர்ந்து போய், வெட்டி பொழுது போக்காமல், கிடைத்த வேலையை இஷ்டப்பட்டு, ஆர்வத்துடன் செய்ததால், இன்று வாழ்க்கையில் முன்னேறி உள்ளான்.
— என்.வஜ்ர மாணிக்கம், மதுரை.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement