Advertisement

ஓர் ஊர்ல ஒரு பாட்டி!

'எனக்கு 10 வயசு இருக்கையில எங்கய்யா தவறிட்டாரு. அதுக்கப்புறம், எங்க ஆச்சி தான் குடும்பத்தை பார்த்துக்கிட்டாக. என்கிட்டே காய்கறிகளை கூறு போட்டு தருவாக! நான் அதை சந்தையில கொண்டு போய் வித்துட்டு வருவேன். அதுதான் நான் பார்த்த முதல் வியாபாரம்.

பிறந்த வீட்ல எப்படி ஆச்சி இருந்தாகளோ அதே மாதிரி புகுந்த வீட்ல என் மாமியாரு! இதே உசிலம்பட்டியில தான் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு மூட்டை நெல்லு வாங்கி, அவிச்சு அரிசியாக்கி, சில்லரை வியாபாரம் பார்த்தோம். உமி நீக்குறது, தவிடு புடைக்கிறது, குருணை நீக்குறதுன்னு எல்லாம் வேலையையும் நாங்க தான் செய்வோம். அந்த உழைப்புல உருவானது தான் மாடர்ன் ரைஸ் மில்!'
ஒரு ராணி தான் அரசாண்ட கதையை தன் வம்சத்திற்கு விவரிப்பது போல, தான் தொழில் செய்த கதையை சொல்லும் குருவம்மாள் ஆச்சிக்கு, 84 வயது.
தன் 10 வயது முதல் குடும்பத்துக்காக உழைத்தவர் இப்போது மகன்களின் அரவணைப்பில் மதுரை உசிலம்பட்டியில் இளைப்பாறுகிறார்.

கூட்டு குடும்பம்
பொம்பளை புள்ளைகளை கட்டி கொடுத்துட்டேன். பசங்க மூணு பேருக்கும் தனித்தனியா வீடு இருந்தாலும், சாப்பாடு மட்டும் ஒரே இடத்துல தான்! நான் இருக்குற மட்டும் இப்படித்தான்யா இருக்கணும்னு கண்டிஷனா சொல்லிட்டேன். மருமக்கமாரும் ஒத்துக்கிட்டாங்க! உறவு தானத்தா ஒரு மனுசனுக்கு பெரிய சொத்து.
பணம், கார், பங்களான்னு எல்லாம் இருந்தும் உறவுன்னு சொல்லிக்க யாரும் இல்லாட்டி, அது என்னத்தா வாழ்க்கை! சந்தோஷமா வாழணும்; வேரையும் மறக்காம இருக்கணும்; இதுக்கு, கூட்டுக்குடும்பம் தான் லாயக்கு!

நாணயம்
நான் அரிசி வியாபாரம் பண்ணின காலத்துல, ஒருத்தர்கிட்டே 20 ரூவா பாக்கி வைச்சிருந்தேன். அது, என் வீட்டுக்காரர் தவறுன நேரம். வீட்ல ரொம்ப பணக்கஷ்டம். அந்த சூழ்நிலையில, 20 ரூபாயை அவர் கேட்டப்போ என்னால திருப்பித் தர முடியலை.
ரொம்ப நாள் கழிச்சு கையில காசு சேர்ந்ததும் முத வேலையா அவரை தேடிப்போய் கொடுத்தேன். அதுக்கப்புறம் தான் என் மனசு ஆறுச்சு. வியாபாரமோ, வாழ்க்கையோ எதுவா இருந்தாலும் நாணயம் ரொம்ப முக்கியம்!

பவுனு பவுனு தான்!
பசங்களோட சந்தோஷமாத் தான் இருக்கேன். எனக்கு ஒரு குறையும் இல்ல. ஆனாலும், பொண்ணுங்க பொண்ணுங்க தான்! மனசுல இருக்கிறது எல்லாத்தையும் அதுககிட்டே தான் பேச முடியும். எல்லா சவுகரியங்களையும் பண்ணி கொடுத்து பசங்க அன்பா பார்த்துக்கிட்டாலும், பெத்த பொண்ணுங்க ஒருநாள் வந்து பார்த்துட்டு போறப்போ தான் மனசு நிறைஞ்சு இருக்கு. நாலைஞ்சு பயலுக இருந்தாலும் வீட்டுக்கு ஒரு பொண்ணு வேணும்; அப்பதான் குடும்பம் துலங்கும்!

குருவம்மா பாட்டியின்
பலம்: கூட்டு குடும்ப வாழ்க்கை
அடையாளம்: உழைப்பால் உயர்ந்தவர்
அறிவுரை: எதையும் விட்டுப் பிடி!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

  • ram - sydney,ஆஸ்திரேலியா

    கூட்டு குடும்பத்துல நிறைய நன்மைகள் இருக்கிறது. ஆனால் அதற்கு தலைமை நன்றாக இருக்க வேண்டும். விட்டு கொடுத்து போகும் எண்ணம் இருக்க வேண்டும் எல்லாருக்கும்..

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

    "நாலைஞ்சு பயலுக இருந்தாலும் வீட்டுக்கு ஒரு பொண்ணு வேணும் அப்பதான் குடும்பம் துலங்கும்", வெளங்கீடும் என்று மருமக்கமாருங்க முணுமுணுக்குறது ஆச்சி காதுக்கு கேக்கல்லையா?

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

    பணம், கார், பங்களான்னு எல்லாம் இருந்தும் உறவுன்னு சொல்லிக்க யாரும் இல்லாட்டி, அது என்னத்தா வாழ்க்கை

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement