Advertisement

அனுபவம்: பிரபலங்களுக்கு பிடித்த 'அம்மா மெஸ்'

'உங்கள் உணவின் ருசி, என் நாவில் இன்னும் இருந்து கொண்டேயிருக்கிறது.... உங்கள் சமையல் வாழ்க...! சொந்த அம்மா போடாத சாப்பாட்டை, இந்த அம்மா தருகிறது என்று மகிழ்கிறேன்!' என்ற வரிகளுடன் ஒரு கடிதம், மதுரை தல்லாகுளம் அழகர்கோவில் சாலையில் இருக்கும் 'அம்மா மெஸ்' உணவகத்திற்கு வருகிறது. பிரித்துப் பார்த்தால், இன்ப அதிர்ச்சி. கடிதம் எழுதியிருந்தவர், கவிப்பேரரசு வைரமுத்து. ஒருமுறை மதுரை வந்திருந்த போது, அம்மா மெஸ் உணவை ருசித்திருக்கிறார். அன்றிலிருந்து இன்று வரையிலும் வைரமுத்துவின் பிடித்தமான உணவகங்களில் ஒன்று 'அம்மா மெஸ்'!


கடந்த, 1992ல் தொடங்கப்பட்ட இந்த உணவகத்திற்கு பெரிய அறிமுகம் தேவையில்லை. மதுரையை சுற்றிப்பார்க்க வரும் பலரின் விருப்பமான அசைவ உணவகம் இது. வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசத்தில் வரும் கள்ளிக்காட்டு கோழிச் சாறு, இந்த உணவகத்தின் ஸ்பெஷல். ஏனெனில் குழந்தை பேற்றுக்குப் பின் பெண்களுக்கும், ஜல்லிக்கட்டில் காளை முட்டி, காயம் ஏற்பட்ட வீரர்களுக்கும், உடல்நலம் தேறுவதற்கு தரப்படுகிறது இந்த கோழிச்சாறு. சளி இருமலுக்கு நண்டு சூப், நண்டு போன்லெஸ். அதுமட்டுமின்றி, அயிரை மீன் குழம்பு, ருசியின் உச்சம். காலை 11 முதல், இரவு 11 வரை உணவகத்தில் கூட்டம் நிறைகிறது.

நண்டு ஆம்லெட், நல்லி ஆம்லெட், கடல்மீன் ஆம்லேட்டுகள் என பலவிதமான ஆம்லெட்டுகள் பரிமாறி அசரடிக்கிறார்கள். படப்பிடிப்புக்காக மதுரைக்குக்கு செல்லும் திரைப் பிரபலங்களுக்கு மதிய, இரவு சாப்பாடுகள் இங்கிருந்துதான் செல்கிறது. 2008ல் சிவாஜி படப்பிடிப்பின் போது, ரஜினியோடு சேர்த்து 300 பேருக்கு சமைத்து அசத்தியிருக்கிறார்கள்.
“என்னுடைய அம்மாவின் பெயர் அம்மாத்தாய். அம்மாவின் பெயரில் 92ல் உணவகத்தை ஆரம்பித்தோம். முதலில் அம்மா தான் சமையல்களைக் கவனித்துக்கொண்டார். அவருக்குப் பிறகு, இப்போது என்னுடைய மனைவி சுமதி கவனிக்கிறார். ஒவ்வொரு வருடமும் புதிது புதிதாக ஒரு உணவை அறிமுகப்படுத்துவோம். வீட்டு ருசியில் சமைத்த மாதிரியே உணவுகளை பரிமாறுகிறோம்,” என்கிறார் உரிமையாளர் எம்.செந்தில்வேல்.

அம்மா மெஸ் உணவை ருசிக்கும் பிரபலங்களுக்கு, இங்கு பிடித்த உணவுகளை பட்டியலிடுகிறார், செந்தில்வேல். ரஜினிகாந்த்
குடல் குழம்பு, நண்டு ஆம்லெட், வாவல் மீன்.
கமல்ஹாசன் அயிரை மீன், காடை ரோஸ்ட்
பிரகாஷ்ராஜ் போன்லெஸ் நண்டு
பாரதிராஜா 'முதல்மரியாதை' மீன் குழம்பு
வைரமுத்து நாட்டுக்கோழி சாப்ஸ், நாட்டுக்கோழி ரோஸ்ட்
ஷங்கர் விரால் மீன் ரோஸ்ட்
சூர்யா கடல் உணவுகளின் பிரியர்

மதுரையை சுற்றிப்பார்க்கும் சுற்றுலாவாசிகளும், மதுரை வழியாக பயணப்படும் பயணியரும் வண்டியை தல்லாகுளம் வழியாக விட்டால், அம்மா மெஸ் உணவகத்தில் ருசிக்க ருசிக்க உணவு ரெடி.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement