Advertisement

இளஸ்... மனஸ்... (88)

அன்பு சகோதரி ஜெனிபருக்கு, அன்பு சகோதரர் எழுதிக் கொண்டது,
பெயரை சொல்ல விரும்பவில்லை; என் மனதை அழுத்திக் கொண்டிருக்கும் விஷயத்தை, பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அப்போதுதான், தவறு செய்யும் பெற்றோர், கொஞ்சமாவது திருந்துவர்.
என் நண்பர், காவல் துறையில் பெரிய பதவியில் இருக்கிறார். எல்லா அதிகார துஷ்பிரயோகமும் செய்து, கோடி கணக்கில் சொத்து சேர்த்து விட்டார். அவருக்கு, ஒரு மகள், ஒரு மகன்; எப்படியாவது, மகளை மருத்துவராக்க வேண்டும் என்ற வெறி.
எனவே, சுமாராக படிக்கும் மகளை, 'எம்.பி.பி.எஸ்., தான் படிக்க வேண்டும்' என்று, பணம் கொடுத்து, அதிக மதிப்பெண்கள் போடவைத்து, மெடிக்கல், 'சீட்' வாங்கி விட்டார். மிகவும் கஷ்டப்பட்டு படித்தும் அந்த பெண், முதல் ஆண்டில், மூன்று பாடத்தில், 'அரியர்ஸ்' வைத்து விட்டார்.
'பெற்றோர் விரும்பியதை நிறைவேற்ற முடியாதோ' என்ற சந்தேகத்தில் மகள், தற்கொலைக்கு முயற்சி செய்தார்; காப்பாற்றி விட்டனர். அப்போதாவது கஷ்டம் புரிந்து, அவள் விரும்பிய பாடத்தை படிக்க சொல்லியிருக்கலாம்.
அதை விடுத்து, 'நீ டாக்டராகத்தான் வேண்டும்' என்று, கட்டாயப் படுத்தியுள்ளனர். விளைவு, இரண்டாம் ஆண்டிலும், 'அரியர்ஸ்' வந்ததால், வேதனையில் அவள் தற்கொலை செய்து கொண்டாள்.
பெற்றோர் துடியாய் துடிக்கின்றனர். இப்பவும், நண்பர், தவறை உணராமல்,'பாவி மகள், படிக்க முடியவில்லை என்று சொல்லியிருந்தால், வேறு யாரையாவது வைத்து, பரீட்சை எழுத வைத்திருப்பேனே...' என்று சொல்லி, கதறி அழுதார்.
இதைக் கேட்ட உடன், என் மனம் சுக்குநுாறாக உடைந்துவிட்டது; இப்படிபட்டவர்கள் திருந்த, தயவு செய்து புத்திமதி கூறுங்கள், சகோதரி...

அப்பப்பா... என்ன கொடுமை இது! அந்தஸ்து, கவுரவத்திற்காக, உயிராக வளர்த்த மகளையே பலி கொடுத்து விட்டனர். இந்த உலகத்தில், எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும், இறந்தபின், கட்டிய துணியை தவிர, எதையும் எடுத்துச் செல்ல முடியாது.
முறை தவறி பணம் சேர்ப்பவர்கள், வாரிசுகளுக்கு அளவில்லாத செல்வம் சேர்த்து வைக்க விரும்புகின்றனர். பார்த்து... பார்த்து... சொத்து சேர்த்து, முறைகேடாக செலவு செய்தும் என்ன புண்ணியம்; மகளை இழந்து விட்டனர். அநியாயமாக சம்பாதித்த பணத்தில், விரும்பிய எல்லாவற்றையும் சாதித்து விட நினைத்தார் உங்கள் நண்பர். மகள் உயிரை, காப்பாற்ற முடிந்ததா... இதுதான் வாழ்க்கை!
ஏழை மக்கள் வயிற்றில் அடித்து, கோடி கோடியாக, வாரிசுகளுக்கு பணம் சேர்த்து வைக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் யோசிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் இது.
அந்த பணமே, வாரிசுகள் கெட்டு அழிய காரணமாகி விடும். 'படிப்பு வராத மகளை, மருத்துவராக்கினால், எத்தனை உயிர்கள் பலியாகும்' என்று யோசிக்காத நண்பர். அவரது மகள், இன்று உயிருடன் இல்லை. நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதை அறுத்து தான் ஆக வேண்டும்.
உங்கள் விருப்பத்தை, பிள்ளைகள் மீது திணிக்காதீர்கள்.
முதல் முறை, அந்த பிஞ்சு மலர், தற்கொலைக்கு முயன்ற போதே, பெற்றோர் மனம் மாறியிருக்க வேண்டாமா... பிடிவாதக்கார பெற்றோருக்கு, இந்த நிகழ்ச்சி பாடமாக இருக்கட்டும்!
இன்று, இளைய தலைமுறை எந்த பிரச்னையையும் சந்திக்க, தைரியமில்லாமல், எதற்கெடுத்தாலும் தற்கொலை தான் முடிவு என்ற நிலையில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆகவே, எதையும் கட்டாயப்படுத்தாதீர்கள்.
குறுக்கு வழியில் சென்று, சாதித்து, தப்பி விடலாம் என்று கனவு காணாதீர்கள்; எப்படியும் ஒருநாள் மாட்டித்தான் ஆக வேண்டும். நேர்வழியில் சென்றால், பயம் இன்றி, எப்போதும் நிம்மதியாக வாழலாம்.-
- மன பாரத்துடன், ஜெனிபர் பிரேம்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement