Advertisement

இளஸ்... மனஸ்...! (82)

அன்புள்ள ஜெனி சகோதரிக்கு, உங்கள் அன்பு சகோதரி எழுதிக்கொண்டது. தனியார் அலுவலகத்தில் பணிபுரிகிறேன்;
என் பக்கத்து வீட்டில் நடக்கும் கொடுமையை, உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பதினைந்து வயது சிறுமியும், தாயும் வீட்டு வேலை செய்து, குடும்பத்தை ஓட்டுகின்றனர்.
அப்பா குடித்து வந்து, மாட்டை அடிப்பது போல் இருவரையும் அடிப்பார். வலி தாங்க முடியாத, தாய், மகளை விட்டு, உறவினர் வீட்டுக்கு ஓடி விடுவார். தகப்பனிடம், சிறுமி படும்பாடு கொஞ்சம், நஞ்சம் இல்ல. அவ்வப்போது சாப்பாடு, துணிகள், காசு கொடுத்து, உதவி செய்வேன்.
'அம்மா என்னால் இந்த உலகத்தில் வாழ முடியல...செத்துடப் போறேன்...' என்று புலம்பி, அழுவாள். என் வீட்ல வெச்சிக்கலாம் என்றால், அவள் தந்தை, தேவையில்லாமல் சண்டை போடுவார். எங்கு பார்த்தாலும், தற்கொலை சம்பவங்கள் தலை விரித்தாடுவதால், எத்தனை நாட்களுக்கு இந்தப் பெண்ணை, நான் காப்பாற்ற முடியும் சகோதரி! நீங்கள் தான் இதற்கு நல்ல தீர்வு சொல்ல வேண்டும்.
அன்பு சகோதரியே... இன்றைய உலகில், பெண் பிள்ளைகளுக்கு நடக்கும் கொடுமைகள் ஏராளம். பிறந்தவுடன், குழந்தை கடத்தல் என்ற பெயரில் ஆரம்பிக்கிறது. பெண் குழந்தைகளை, யாரிடமும், ஏன் உறவினரிடம் கூட, 'சற்று பார்த்துக்கோங்களேன்' என்று சொல்லி கொடுக்க முடியவில்லை; அவ்வளவு கொடுமைகள் நடக்கின்றன; குடிகார தகப்பன் என்று சொல்லும் போது, கேட்கவே வேண்டாம்.
இப்படிப்பட்ட பெண் குழந்தைகளை காப்பாற்றுவதற்கென்றே, 'சைல்ட் - லைன்' என்ற அமைப்பு, 1 - 18 வயது வரை உள்ள பெண் குழந்தைகள் மற்றும் மிகவும் அவசர உதவி என்றால், 25 வயது வரை பெண்களுக்கு உதவி செய்கின்றனர். தொலைபேசி எண், 1098. 24 மணி நேரமும் இலவச சேவை புரிகின்றனர்.
இந்த எண்ணில் தொடர்பு கொண்டால், அடுத்த, 60 நிமிடத்தில் உதவிக்கு வருவர்; போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லுதல், மருத்துவ உதவி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தல், தொடர்ந்து அந்த குழந்தையின் சூழ்நிலை மாறும் வரையில், உதவி செய்வர்.
குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை தடுப்பதற்கென, சில சட்டங்களை ஏற்படுத்தி உள்ளனர். அந்த சட்டங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வதன் மூலம், கண் முன்னால் பெண் குழந்தைகளுக்கு விரோதமாக நடக்கும் கொடுமைகளை வேரறுக்க முடியும்.
* குழந்தைகளை மனம் நோகும்படி கேலி செய்தல்; கல்வித் தேவைகளை புறக்கணித்தல்; பாதுகாப்பின்றி குழந்தைகளை தனியே வீட்டில் விட்டு விடுதல்; அவர்களது மருத்துவ தேவைகளை புறக்கணித்தல்
* சொந்த வீட்டிலேயே பணியாட்களை போல் பயன்படுத்துதல்; பள்ளியில் குழந்தைகளை அடித்து, துன்புறுத்தி தண்டனை கொடுத்தல்; அவர்களை பராமரிக்காமல் இருத்தல்
* கருத்துக்களை அலட்சியம் செய்தல்; உணர்வுகளை மதிக்காமல், அன்பு, ஆதரவு காட்டாமல் அவர்களது தேவைகளை புறக்கணித்தல்
* அவர்களது ஆசைகளை தூண்டி, தங்கள் சுயநலத்திற்கு பயன்படுத்துதல்; விருப்பத்திற்கு மாறாக தொடுதல்
* குழந்தைகளை கட்டாயப்படுத்தி தம்மை தொட வைத்தல்; கடும் சொற்களால் அவர்களை காயப்படுத்தி கொச்சை படுத்துதல், துன்புறுத்தல்
* ஆபாச படங்களை காட்டி, பார்க்க செய்தல், ஆபாச புத்தங்களை கொடுத்து, படிக்கச் செய்தல்.
அவர்களது நம்பிக்கையை குலைக்கும் விதமாக நடந்து கொள்ளுதல் போன்ற காரியங்களில், யார் ஈடுபட்டாலும், தண்டனைக்குரியவர்களே... இத்தகைய கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகளோ அல்லது அவர்களுக்காக யார் வேண்டுமானாலும், இந்த இலவச சேவை மையத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த மையத்துக்கு போன் செய்து, அந்தப் பெண் குழந்தையை காப்பாற்றுங்கள் சகோதரி. அவளுக்கு நல்லது நடக்கட்டும்!
- நம்பிக்கையுடன், ஜெனிபர் பிரேம்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement