Advertisement

மூன்று பெட்டிகள்!

அமெரிக்க பார்லிமென்ட் தேர்தலில், இளைஞன் ஒருவன் வெற்றி பெற்றான்.
அவனிடம் தோற்றவர், ''தேர்தலில் வெற்றி பெற்று விட்டாய்; வாழ்த்துகள்! நீ அரசியலுக்கு புதியவன். இங்கு, உனக்கு பல சோதனைகள் ஏற்படும்; எதிர்ப்புகள் எழும். உன்னால் அவற்றை சமாளிக்க முடியாத சூழ்நிலை உண்டாகும்.
''அந்த குழப்பங்களிலிருந்து விடுபட வழி உள்ளது. எனக்கு முன் இருந்த பார்லிமென்ட் உறுப்பினர் தந்த அறிவுரை பெட்டி இது! இப்பெட்டிக்குள், மூன்று சிறு பெட்டிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும், அறிவுரை எழுதப்பட்டு உள்ளது.
“அரசியல் வாழ்வில், உன்னால் தீர்க்க முடியாத சிக்கல் ஏற்படும். அந்த நேரத்தில், முதல் பெட்டியை திறந்து பார்... அதில் எழுதப்பட்டு உள்ள அறிவுரைப்படி நடந்து கொள்; சிக்கல் தீரும். அதன்பின், மற்றொரு சிக்கல் ஏற்படும்; இரண்டாம் பெட்டியில் சொல்லப்பட்டது போல நடந்து கொள்.
“அப்படியும் சிக்கல் தீரவில்லையென்றால்... மூன்றாம் பெட்டியை திறந்து, அதன்படி நடந்து கொள்...” என்று, பெட்டியை தந்து புறப்பட்டார்.
அவன் பதவி ஏற்று, ஓராண்டு சென்றது.
அவனுக்கு எங்கும் எதிர்ப்பு கிளம்பியது.
என்ன செய்வது என்று சிந்தித்தான்; பெட்டியின் நினைவு வந்தது. முதல் பெட்டியை திறந்தான். அதில், 'எல்லா பிரச்னைக்கும், முன்னாள் உறுப்பினரான என் மீது குற்றம் சுமத்து' என்று எழுதப்பட்டு இருந்தது.
'ஆ... அருமையான வழியாக உள்ளதே... இதை பின்பற்றுவோம்; நம்மை யாரும் குறை சொல்ல மாட்டார்கள்' என்று நினைத்தான்.
'தோல்வியடைந்த முன்னாள் உறுப்பினரே, தொகுதியில் உள்ள எல்லா பிரச்னைக்கும் காரணம். அவர் தொகுதிக்கு நல்லது எதையுமே செய்யவில்லை; வளர்ச்சி பணிகளை என்னால், சிறிது சிறிதாகத்தான் செய்ய இயலும்; மக்கள் அமைதி காக்க வேண்டும்...' என்று விளக்கம் அளித்தான்.
அதற்கு பலன் கிடைத்தது.
ஒரு ஆண்டிற்கு பின் -
புதிய நெருக்கடிகள் பல தோன்றின; இரண்டாம் பெட்டியை திறந்தான்.
அதில், 'எதிர்க்கட்சியை தாக்கி, பிரசாரம் செய்க' என்று இருந்தது.
''எதிர்கட்சிகளுக்கு பொறுப்பு உணர்வே இல்லை... நாட்டு முன்னேற்றத்திலும், அவர்களுக்கு அக்கறை இல்லை. நாட்டில் எல்லா சிக்கல்களுக்கும் அவர்கள் தான் காரணம்...'' என்று பெரிய அளவில் பிரசாரம் செய்தான்.
இந்த முறையும், அவனுக்கு நல்ல பலன் கிடைத்தது.
அடுத்த தேர்தல் விரைவில் வர இருப்பதை அறிந்தான்.
'தொகுதியில், பெரிய அளவில் தனக்கு எதிர்ப்பு உள்ளது; தன்னால் வெற்றி பெற முடியாது' என்பது அவனுக்கு புரிந்தது.
'இந்நிலையில், தனக்கு வழி காட்ட கூடியது, மூன்றாவது அறிவுரை பெட்டி தான்; அதற்குள், ஏதேனும் நல்ல வழி சொல்லப்பட்டு இருக்கும்' என்று நினைத்தான்.
பெட்டியை, ஆர்வத்துடன் திறந்தான்.
அதில் எழுதப்பட்டிருந்த அறிவுரையை படித்து, அதிர்ச்சி அடைந்தான்.
அந்த மூன்றாம் பெட்டியில், என்ன அறிவுரை எழுதி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்... கொஞ்சம் யோசித்து பாருங்களேன்...
விடை: 'இதே போன்று, மூன்று பெட்டிகளை தயார் செய்து, தேர்தலில் வெற்றி பெறுபவருக்கு அன்பளிப்பாக கொடுக்கவும்' என்று எழுதியிருந்தது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • ji -

    hahahahaha

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement