Advertisement

அன்றும் இன்றும் தீபாவளி!

எப்படி மாறிப்போச்சு...
'அப்பெல்லாம், அரிசி விலை என்ன தெரியுமா... அப்பெல்லாம், தங்கம் விலை என்ன தெரியுமா... அப்பெல்லாம், ஒரு கிரவுண்ட் விலை என்ன தெரியுமா...' இப்படி நிறைய, 'அப்பெல்லாம்' உண்டு! இதில், அப்பெல்லாம் தீபாவளி எப்படி இருக்கும் தெரியுமா... என்பதும் சேர்ந்து விட்டது.

பட்ஷணம் தயாரிப்பு பூரிப்பு எங்கே போச்சு!
தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு, தெருவே துாங்காது. வீட்டிலுள்ள ஆண்கள், விழித்துக் கொள்ள கூடாது என்று, அவர்கள் உறங்கிய பின், பெண்கள் கூடி, மெல்லிய குரலில் பேசியபடியே, வடைக்கு மாவு அரைப்பது, சுகமான அனுபவம்.
அலாரம் வைத்தால், எல்லாரும் விழித்துக்கொள்வர் என்று, இரவு முழுவதும் துாங்காமல் இருந்து, அக்கம் பக்கத்தில் வசிக்கும் தோழியரை, எழுப்பி விட்ட அனுபவம் பலருக்கு உண்டு.
திண்பண்டங்கள் செய்ய, அம்மா, எண்ணெய் சட்டியை அடுப்பில் வைக்கும் போது, மனம் சிறகடித்துப் பறக்கும்; வாய் ஊறும்; பண்டம் தயாரிப்பு பணியில், பிள்ளைகள் சுறுசுறுப்பாக ஈடுபடுவர். எண்ணெய் சட்டியிலிருந்து, பாதுகாப்பான துாரத்தில் அமர்ந்து, மூத்த சகோதரி பலகாரத்தை பொரித்து எடுக்கும் லாவகத்தில், மனம் லயித்து, வேடிக்கை பார்த்த அனுபவம், சந்தோஷமாக நிலைத்திருக்கும்.
எண்ணெய் சட்டியில், விடிய விடிய பலகாரம் செய்து, பூஜை அறையில், தட்டில் அழகாக அடுக்கி, அதற்கு பக்கத்தில் மஞ்சள் தடவிய புதிய துணிகளை வைத்து, குத்துவிளக்கேற்றி, சாமி கும்பிட்டு, புத்தாடை அணிந்து, அனைவரும் ஒன்றாக அமர்ந்து, ஒற்றுமையாக சாப்பிடும் வரை, பெண்களுக்கு ஓய்வு இருந்ததில்லை.
பெண் செய்த பலகார வகைகள், அவளுக்கு ருசிப்பதில்லை; அந்த பலகாரத்தை ருசிக்கும், குடும்பத்தினரின் ஆனந்த உணர்வே, அவளுக்கு தித்திக்கும் தீபாவளி. பட்டாசு வெடிக்கும் குழந்தைகளை, கண்காணித்த படியே, சமையலையும் கவனித்து கொள்ளும் பெண்ணின் திறமை அளப்பரியது.
'ஓ... இதுதான் பருப்பு வடையின் பதமா... அதிரசம் மாவை, இரண்டு நாட்களுக்கு முன்பே அரைத்து விடணுமா... கசகசா சேர்த்தால் அதிசரம் மொறு மொறுப்பாக, சுவையாக இருக்குமா...' என்று பெண் பிள்ளைகள், அம்மாவிடம் கேட்பது, தீபாவளி அன்று தான். உரலில் இடித்து, அதிரச மாவு கலப்பதும், ஆட்டு உரலில், கையால் வடைக்கு அரைப்பதும், இன்று காணக்கிடைக்காதவை.

எல்லாம் ரெடிமேட் மாயம்!
இன்றோ, எல்லாமே ரெடிமேட்! வரிசையில் காத்திருந்து, துணிக்கடையில் தைத்து வாங்கிய காலம் போய், ஆன்லைனில், 'ஷாப்பிங்' செய்து, வீட்டு வாசலுக்கே ஆடைகளை வரவழைக்கும் காலம்.
விடிந்தால் தீபாவளி என்றிருக்கையில், தையல்காரரிடம் கொடுத்த துணிக்காக, கடை வாசலில் நள்ளிரவில் கத்திருந்து, தீபாவளி புத்தாடை நமக்கு கிடைக்குமா என்ற பரபரப்பு, இன்று இல்லை. நினைத்தவுடன், வசிக்கும் இடத்துக்கு, தேடி வரும் ஆயத்த ஆடைகள் உலகம் விரிந்துவிட்டது. துணி என்றாலும், பலகாரம் என்றாலும், ரெடிமேட் தான்.
தீபாவளிக்கு, இரண்டு வாரங்களுக்கு முன், வீட்டு அடுக்களையில் பொரித்து எடுக்கும் இனிப்பு வகைகளின் வாசம் மூக்கை துளைக்கும். சிறுவர்களோடு, பெரியவர்களும், போட்டி போட்டு பலகாரத்தை சுவைத்து மகிழ்வர்.
தற்போது, கடைகளில் விற்கும் வகை வகையான இனிப்புகளை வாங்கி, உறவினர், நண்பர்களுக்கு கொடுப்பது பழக்கமாகி விட்டது. இந்த பலகாரங்களில், இனிப்பு இருக்கும்; இனிமை இருக்காது. வீட்டில், பெண்கள் தயாரிக்கும் பலகாரங்களுக்கு தனி சுவை உண்டு. அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அந்த இனிய உணர்வு புரியும்.

மத்தாப்பூவும், வாண வேடிக்கையும்!
சீனாவா... சரிங்க அண்ணா...
பட்டாசின் பூர்வீகம் சீனா. தங்கள் புனித விழாக்களில், சீனர்கள் பட்டாசு வெடிப்பது வழக்கம். வெற்றியை கொண்டாடும் போதும், பட்டாசு வெடிக்கின்றனர். இதை ஒரு கலையாகவே வளர்த்துள்ளனர்.
சிவகாசியில், ஓலைவெடி தயாரான கதையை பார்ப்போம்... இந்தியாவில் முதன்முதலாக, 1922ல், மேற்கு வங்கத்தில் தான், பட்டாசு தொழில் அறிமுகமானது. எட்டு ஆண்டுகளுக்கு பின், 1930ல், சிவகாசியில் பட்டாசு உற்பத்தி துவங்கியது.
வானம் பார்த்த பூமியான சிவகாசி நகரில், அய்யநாடார், சண்முகநாடார் ஆகியோர், தங்கள் சுய ஆர்வத்தில், இளம் வயதில் கோல்கட்டா - அப்போது கல்கத்தா சென்று, தீப்பெட்டி தொழிலை கற்று வந்தனர்.
சிவகாசியில், 1923ல் தீப்பெட்டி தொழிற்சாலை நிறுவினர். இவர்கள் தான், வண்ண மத்தாப்பு செய்யும் முறையை அறிமுகப்படுத்தினர்.
கேரளா மாநிலம், திருச்சூரில் வாண வேடிக்கையை கண்டு, அதை செய்யும் முறையையும் அறிந்தனர். இதன் தொடர்ச்சியாக, ஓலையை நான்காக மடித்து, அதற்குள் வெடிமருத்து வைத்து ஓலைவெடி, சிவகாசியில் உருவாக்கப்பட்டது.
'குளோரேட்' என்ற வெடி மருந்தை, இதற்கு பயன்படுத்தினர்; இதல், லேசாக உராய்வு ஏற்பட்டாலும், தீப்பிடித்து விடும். இந்த தயாரிப்பு, 1930ல் துவங்கி, 1950 வரை நீடித்தது.
பின், காகித சுருளை பயன்படுத்தி, பிஜிலி வெடி, (சீனிவெடி) 1940 ல் தயாரிக்கப்பட்டது. இதில் தான், முதன்முதலாக காகிதம் பயன்படுத்தப் பட்டது; பாதுகாப்பான அலுமினியம் மருந்து கொண்டு, வெடி தயாரிக்கப்பட்டது. இதன்பின், ஓலை வெடி கொஞ்சம் கொஞ்சமாக மறைய துவங்கியது.
கடந்த, 1960ல் பூச்சட்டி, சாட்டை, தரைச்சக்கரம் போன்றவை, பட்டாசு உற்பத்தியில் இடம் பெற்றன. லேட்டஸ்ட் டிரண்டில், இந்த முறை, ஓவியா வெடி வரலாம்!

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement