Advertisement

அதிமேதாவி அங்குராசு!

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

காடு அதிர பாடுவேன்!
கழுதைப்புலி என்ற மிருகம், கழுதைக்கும், புலிக்குமான கலப்பு என்கின்றனர்; உண்மை அதுவல்ல! அவசரப்பட்டு பெயர் வைத்ததன் விளைவு அது. உடலில் வரிகள் இருப்பதால், புலி என்று பெயர் வைத்தனர்; ஆனால், கழுதையை எதற்கு சேர்த்தனர் என்று தெரியவில்லை.
கழுதைப்புலி மிக திறமையான ஒரு விலங்கினம். மோப்பம் மற்றும் சப்தம் இவற்றில் மிக நுட்பமானது. வித விதமாக ஊளையிட்டு, இன நண்பர்களுக்கு தகவல் கொடுக்கும். கழுதைப் புலியின் வால் அசைவுகளை வைத்து, அதன் எண்ண ஓட்டங்களை புரிந்து கொள்ளலாம்.
வால் நுனி, பூமியை பார்த்துக்கொண்டிருந்தால், சாதாரணமாக இருக்கிறது என்று அர்த்தம்; சிலிர்த்து நிமிர்ந்த வால், எதற்கும் தயாராகி விட்ட, துரித நிலை என்று அர்த்தம். வால், வில்லாய் வளைந்து, முதுகை தொட்டுக் கொண்டிருந்தால், படு குஷி, என்று பொருள். வாலை சுருட்டி, பின்னங் கால்களுக்கு இடையே இடுக்கி, ஓடிக்கொண்டிருந்தால், எதற்கோ பயந்து ஓடுகிறது என்று உணரலாம்.
கழுதைப்புலிகள், சில உற்சாகமான பொழுதுகளில், காடே அதிரும் வகையில், கோரசாக பாடுவதுண்டு. இதன் மற்றொரு சிறப்பு, முடிவெடுத்தல்.
எந்த மிருகத்தை வேட்டையாடலாம் என்று, கூட்டமாக சேர்ந்து முடிவெடுக்கும். இதற்காக, விசேஷக்கூட்டமே போடப்படும். கழுதைப்புலிகளின் எண்ணிக்கையை வைத்து, அன்று ஏதோ பெரிய வேட்டை என்பதை புரிந்துகொள்ளலாம்.
மாலை நேரத்தில், பிரமாண்டமான வேட்டை கோஷ்டி, கொலை வெறியுடன் கிளம்பும். வரிக்குதிரையை வேட்டையாடுவது என்று, முடிவெடுத்திருந்தால், வரிக்குதிரையை மட்டுமே வேட்டையாடும். முதலில், வரிக்குதிரை கூட்டத்தில், எது, 'வீக்' என்பதை முடிவு செய்யும். அக்குதிரையை தொடர்ந்து, கழுதைப்புலிகள் ஓடும். ஒரு கழுதைப்புலி, குதிரையின் கழுத்தை கவ்வ, இன்னொன்று காலை கடிக்க, மற்றொன்று குதிரையின் முதுகை குதற, திணறிப்போகும் வரிக்குதிரை.
மேலும் ஓட முடியாமல், கீழே சாயும். அரைமணி நேரத்திற்கு பின் பார்த்தால், வரிக்குதிரையின் எலும்புத்துண்டுகள் மட்டுமே, இங்கொன்றும், அங்கொன்றுமாக கிடக்கும்.
இன்று, எவ்வித விலங்கை சாப்பிடலாம் என்பதை, குழுவாக விவாதித்து, அதற்கு திட்டம் போட்டு, அந்த விலங்கையே உண்ணும் திறமையான விலங்கினம், கழுதைப்புலிகள் தான்.

மடங்கிய பக்கம்!
பள்ளி செல்லும் குழந்தைகளின் புத்தகங்கள் மற்றும் நோட்டுக்களின் ஓரங்கள் மடங்கி இருந்தால், மெதுவாக மடிப்புகளை நீக்கி, பக்கங்களை நேராக்கி, துணி உலர்த்தும், 'கிளிப்' ஒன்றை, இரவு முழுவதும் போட்டு வைத்தால், மறுநாள், புது புத்தகத்தின் பக்கங்கள் போல இருக்கும்!

சைக்கிளில் மாப்பிள்ளை!
திருமண விழாவின் போது, சுற்றுச்சூழல் மாசை வெகுவாக தடுக்கவும், வீண் ஆடம்பரங்களை தவிர்க்கவும் முடிவெடுத்து உள்ளது குஜராத் மாநிலம். சூரத்தில் செயல்படும், சவுராஷ்டிரா படேல் சேவா சங்கம், திருமண விழா ஊர்வலத்தில், சைக்கிளில் மாப்பிள்ளை அழைப்பு நடத்துகிறது.
- என்றென்றும் அன்புடன்,
அங்குராசு!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement