Advertisement

கவுதம புத்தர்! (2)

''குழந்தாய்! நீ எல்லா கல்வியையும் கற்காமலேயே கற்றிருக்கிறாய்! ஓதாமலேயே அறிவு பெற்று விளங்கும் நீ, என்னிடம் கல்வி கற்க வந்திருப்பது வியப்பாகும்,” என்று கூறினார் விசுவாமித்திரர்.
பின், மற்ற சாக்கிய சிறுவர்களுக்கு கல்வி கற்பித்து வந்தார். சித்தார்த்தனோ ஓதாமலேயே எல்லா கல்வியையும் உணர்ந்து கொண்டான்.
அரசகுமாரன் பயில வேண்டிய, படைக்கல பயிற்சிகளையும், போர் முறைகளையும் சித்தார்த்தனுக்கு கற்பிக்க அரசர் எண்ணங்கொண்டார். அவர், அமைச்சர்களுடன் கலந்து, வில்வித்தையில் வல்லவர் யார் என்பதை பற்றி விவாதித்தார்.
'சுப்ரபுத்தர் என்பவருடைய மகனான, சாந்தி தேவர் ஆயுதப் பயிற்சியில் வல்லவர். அவரே சித்தார்த்தனுக்கு ஆசிரியராக இருக்க தக்கவர்...' என்று அரசரிடம் கூறினர் அமைச்சர்கள்.
சித்தார்த்தனும், ஐந்தாறு சாக்கியகுல சிறுவர்களும் சாந்தி தேவரிடம் படைக்கல பயற்சி பெற ஒப்படைக்கப் பட்டனர். பெரியதோர் தோட்டத்தில், பயிற்சி செய்ய துவங்கினர். சாந்தி தேவர், சித்தார்த்தனுக்கு வில்வித்தை கற்றுத்தர துவங்கினார்.
“ஆசிரியரே! என்னை பொறுத்தவரையில், எனக்கு நானே வித்தைகளை கற்றுக் கொள்கிறேன். இவர்களுக்கு பயிற்சி அளியுங்கள்,'' என்று தாழ்மையுடன் கூறினான்.
சாந்தி தேவர், மற்ற எல்லாருக்கும் வில்வித்தை, வாள்வித்தை, வேல் வித்தை, யானை ஏற்றம், குதிரை ஏற்றம், தேர் ஓட்டம், முதலிய போர் செயலுக்குரிய எல்லா வித்தைகளையும், நன்கு கற்பித்தார். இவ்வித்தைகளில் எல்லாரும் தேர்ச்சியடைந்து சிறந்து விளங்கினர். சித்தார்த்தனும் இவ்வித்தைகள் எல்லாவற்றையும் தமக்கு தாமே கற்று தேர்ந்தான்.
சித்தார்த்தனுடைய சாத்திர கல்வியும், படைக்கல கல்வியும் அவனது, 12வது வயதில் முற்று பெற்றன. பின், சித்தார்த்தன் மற்ற இளைஞர்களுடன் சேர்ந்து, குதிரை சவாரி செய்தல், வேட்டையாடுதல் முதலிய விளையாட்டுகளில் சிறந்து விளங்கினான்.
ஒரு நாள்- -
தோட்டத்தில் இவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஆகாயத்தில் அன்னப்பறவைகள் வேகமாகப் பறந்து செல்வதைக் கண்டனர். அப்போது தேவதத்தன் என்னும் சிறுவன், தன் வில்வித்தையின் நுட்பத்தைக் காட்ட விரும்பி, குறி பார்த்து, ஒரு பறவையின் மீது அம்பை எய்தான்.
உடனே பறவை கீழே விழுந்தது.
இதை கண்ட சித்தார்த்தன் திடுக்கிட்டான்.
உடனே, ஓடிச் சென்று, பறவையை அன்புடன் தன் கைகளால் எடுத்து, அப்பறவைபடும் வேதனையை கண்டு மனம் வருந்தினான். பின் தரையில் உட்கார்ந்து அந்த அன்னப் பறவையை, மடியின் மேல் வைத்து, சிறகில் குத்திக் கொண்டிருந்த அம்பை வெளியே எடுத்தான். அடிப்பட்ட இடத்தில் தைலம் தடவி, அதற்கு தீனி கொடுத்து, அதன் உயிரை காப்பாற்றினான்.
சித்தார்த்தனிடம் சிலரை அனுப்பி, அன்னப் பறவையை தன்னிடம் சேர்ப்பிக்கும்படி கேட்டான் தேவதத்தன்.
“அம்பு தைத்த பறவை, இறந்து போயிருந்தால், அது திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். அது இறந்து போகாமல், நான் பாதுகாத்தேன். எனவே, இந்தப் பறவை எனக்கே உரியது,” என்று கூறினான் சித்தார்த்தன்.
இந்த வழக்கு, சாக்கிய குலத்துப் பெரியவர்களிடம் சென்றது. முதியவர் ஒருவர், ''பறவையை காப்பாற்றியவனுக்கே அது சொந்தம். பறவையை கொல்ல வந்தவன் அதற்கு உரிமை கொண்டாட முடியாது,” என்று கூறினார்.
மேலும், சித்தார்த்தனின் கருணை உள்ளத்தைப் பாராட்டினார்.
சித்தார்த்தனுக்கு திருமண வயது நெருங்கிக் கொண்டிருந்தது. தன் மகனை துறவு கொள்ளாதபடி தடுத்து, அவனை இல்லறத்திலேயே நிலைநிறுத்தி வைக்க, சுத்தோதன அரசர் கண்ணுங்கருத்துமாக இருந்தார்.
ரம்மிய மாளிகை, சுரம்மிய மாளிகை, சபமாளிகை ஆகிய மூன்று மாளிகைகளை சித்தார்த்தனுக்காக, அரசர் அமைத்தார். இந்த மாளிகைகள் கார்காலம், வேனிற்காலம், பனிக்காலம் என்னும் மூன்றும் காலங்களிலும் இன்பமாக இருப்பதற்கு ஏற்றவாறு, அமைத்து கொடுத்தார்.
தன் மகன் துறவறம் மேற்கொள்ளாமல், இல்லறத்திலேயே இருக்க தம்மாலான அனைத்து முயற்சிகளையும் அரசர் செய்தார். ஆனால், சித்தார்த்தனைப் பொருத்தவரை இல்லறமா... துறவறமா... என்ற கேள்விக்கு, துறவறம் பூணுவதே சிறப்பு என முடிவு செய்திருந்தான்.
சித்தார்த்தனுக்கு திருமண வயது நெருங்கியதை உணர்ந்த சுத்தோதனர், திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார்.
மகனுக்கு பெண் தேடுவதற்காக நாலா திக்கும் பொருத்தமான ஆட்களை அனுப்பினார். சாக்கிய குலத்தை சேர்ந்த, மகாநாமர் என்பவரின் மகளான, யசோதரை என்னும் பெண், சித்தார்த்தனுக்கு மணமகளாக அறியப்பட்டாள்.
குறிப்பிட்ட நல்லதொரு நாளில், சித்தார்த்தனுக்கும், யசோதரைக்கும் திருமணம் இனிதே நடந்தேறியது. தேவேந்திர மாளிகை போன்ற அரண்மனையிலே சித்தார்த்தனும், யசோதரையும் எல்லாவித இன்ப சுகங்களை துய்த்து இந்திரனும், சசிதேவியும் போல வாழ்ந்தனர்.
சித்தார்த்தன் உலக போகத்தில் மூழ்கி, அரண்மனையில் இன்ப சுகங்களை துய்த்தபடி கவலையற்ற வாழ்க்கை வாழ்ந்த போதிலும், நாளடைவில் அவருக்கு இல்வாழ்க்கையில் வெறுப்பு தட்டியது.
ஒரு நாள்-, சித்தார்த்தனுடைய உள்ளத்தில் ரகசியமாக தெய்வீக குரல் கேட்டது.
'குமாரனே! விழித்துக் கொள்; தெளிவு கொள். நிலையற்ற, அழிந்து போகிற, ஐம்புல இன்ப சுகங்களில் காலம் தள்ளாதே! நிலையாமையை உணர்ந்து, நிலைபெற்ற இன்பத்தை நாடி, மக்களுக்கு நல்வழி காட்டு. வந்த வேலையை நிறைவேற்ற முற்படு' என்ற தெய்வீக குரல், கேட்டது.
அந்த குரல், நாளுக்கு நாள் உரத்த குரலாக கேட்பது போல் இருந்தது. இதன் காரணமாக, அரச போகங்களிலும், இல்லற வாழ்க்கையிலும் சித்தார்த்தனுக்கு மேலும் வெறுப்பு ஏற்பட்டது.
ஒரு நாள்-
சித்தார்த்தன், அரண்மனைக்கு அருகேயுள்ள பூஞ்சோலைக்கு செல்ல நினைத்தார். சன்னன், என்னும் பெயருடைய தேர்ப்பாகனிடம், தன் எண்ணத்தை கூறி, தேரை கொண்டுவர கட்டளையிட்டார்.
தேர்ப்பாகன் சன்னன், நான்கு வெள்ளை குதிரைகள் பூட்டப்பட்ட தேரை கொண்டு வந்தான். மெல்லிய பட்டாடை அணிந்து, தேரில் அமர்ந்து பூஞ்சோலையை காண சென்றார் சித்தார்த்தன்.
செல்லும் வழியில், எந்தெந்த காட்சிகளை சித்தார்த்தன் காணக்கூடாதென்று அவரது தகப்பன், சுத்தோதன அரசர், தடுத்து வைத்தாரோ, அக்காட்சிகள் சித்தார்த்தன் கண்களில் பட்டன.
அதாவது, தொண்டு கிழவர் கூனி குனிந்து, தடிஊன்றி தள்ளாடி நடந்து, இருமிக் கொண்டிருந்ததை கண்டார். நரைத்த தலையும், சுருங்கிய தோலும், குழி விழுந்த பார்வையற்ற கண்களும் உடைய அந்த காட்சியை, இதற்கு முன்பு கண்டிராத சித்தார்த்தன், தேர்ப்பாகனிடம், “சன்னா... இது என்ன?” என்று கேட்டார்.
“அவர் ஒரு கிழவர்!”
“கிழவர் என்றால் என்ன...”
“கிழவர் என்றால், இளமை நீங்கிய முதியவர். இவருடைய உடம்பும், பொறிகளும், புலன்களும் வலிமை குன்றிவிட்டன. இளமையோடு இருந்த இவர், மூப்படைந்து தள்ளாதவராக இருக்கிறார். மரணம் இவரை எதிர்நோக்கி இருக்கிறது.”
“கிழத்தனம் இவருக்கு மட்டுமா... எல்லாருக்கும் வருமா...”
“எல்லாருக்கும் கிழத்தனம் வரும்... இளைஞராக இருப்பவர் அனைவரும், ஒரு நாள் முதுமை அடைய வேண்டியவரே.”
“நானும் கிழவன் ஆவேனா...”
“ஆமாம் சுவாமி... ஏழை, பணக்காரன், அரசன், ஆண்டி எல்லாருக்கும் கிழத்தன்மை உண்டு,” என்றான்.
இதை கேட்ட சித்தார்த்தனின் மனதில் பல சிந்தனைகள் தோன்றின.
தேர், வீதி வழியே தொடர்ந்து சென்று கொண்டிருந்தது.
- தொடரும்...

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement