Advertisement

இதய திருடி

மதியம் மணி 3:00. 'தேர்டு ஸ்டாண்டர்டு - பி செக் ஷன் பசங்க வர்றதுக்கு அரை மணி நேரமாகும். பேரன்ட்ஸ் எல்லாம் அந்த கிளாஸ் ரூம்ல உட்காருங்க!'உடற்கல்வி ஆசிரியர் சொல்ல, அவர் கைகாட்டிய காலி வகுப்பறைக்குள் நுழைந்தேன்.துாசி படிந்திருந்த பெஞ்ச்சை சுத்தப்படுத்த என் துப்பட்டா உதவியது. ஹேண்ட் பேக்கை பிரித்து, 'வைரமுத்து சிறுகதைகள்' புத்தகத்தை எடுத்தேன். என் மகன்வர இன்னும், 25 நிமிஷம். முதல் கதையாக இருந்தது, துாரத்து உறவு.அமெரிக்க வாழ் மகனான சிவராமன், தமிழக மின் மயானம் ஒன்றில் அப்பாவிற்கு ஈமச்சடங்குகள் செய்து கொண்டிருப்பதில் துவங்கியது கதை. தந்தையின் சடலத்தை தகனம் செய்து, மீசை மழித்து அவன் வீடு வந்து சேர...
'சிவராமா...' உடைந்த குரலில் அழுதாள் அவன் அம்மா.'கடைசியா என்ன சொன்னாரும்மா?''நான் போயிட்டா நீ எப்படித்தான் இருக்கப் போறியோ?' அவள்கண்ணீரிலும் நோய் கசிந்தது.'ஏன்... நான் இல்லையா?' அவன் அவசரமாய் மகனானான்.'இல்லையே சிவராமா இல்லையே! அவரைப் பொழைக்க வைக்க வேணாம்; சாகும்போது பக்கத்துல கூட இல்லையே!''என்னம்மா பண்றது... துாரம்!''ஆமாப்பா... எல்லாமே துாரமா போச்சு'கதையில் சிவராமன் அம்மா கண்கசிந்து கொண்டிருந்த போது, நான்கைக்கடிகாரம் பார்த்தேன். என் மகன் வர இன்னும், 20 நிமிஷம்.ஓர் இழவு வீட்டில் ஈரமும், துக்கமும் ஒரு வாரத்திற்கு மேல் காயாமல் இருப்பதில்லை. சிவராமன் தன் வேலையைத் துவக்கினான்.'அம்மா... எங்கூட உன்னை அமெரிக்கா கூட்டிட்டுப் போகலாம்னா நீ வர மாட்டே! அதனால,உனக்கு ஒரு இடம் பார்த்திருக்கேன். பெத்த தாய் மாதிரி உன்னை கவனிச்சுக்குவாங்க!''உன்னை மாதிரியா?''இல்ல; என்னைவிட நல்லாப் பார்த்துக்குவாங்க!''எங்கே?''இசிஆர் ரோட்டுல - பழத்தோட்டம்''ஓ... முதியோர் இல்லத்துக்கு வியாபாரப் பெயரா; அப்ப வீடு?''நீயே இல்லாத போது இந்த வீடு எதுக்கு; வித்திடலாம்னு நினைக்கிறேன்!''சிவராமா! இது அப்பா வாழ்ந்த வீடப்பா'கதையிலிருந்து நிமிர்ந்தேன். ஒரு பாசக்கார தாய் வகுப்பறைக் குள் வந்து உட்கார மனமின்றி, பிள்ளைக்காக வாசலிலேயே காத்திருந்தார். சிவராமனின் அம்மா கதைக்குள் மீண்டும் என்னை இழுத்தாள்.முதியோர் இல்ல வாசல் துாணை பிடித்தபடி, மகன் போகும் வாடகைக் காரையே பார்த்து கை உயர்த்தி நின்றாள் அம்மா. திருப்பத்தில் அவன் கண்ணாடி இறக்கி கைகாட்டுவான் என்பது அவளது 'பெத்த' நம்பிக்கை. கார் மறைந்ததே தவிர கண்ணாடி இறங்கவில்லை. உயர்த்திய கரம் கீழே விழுந்தது.நியூயார்க்கில் சிவராமன் இறங்கினான். ஆனால், அவனை முந்திக் கொண்டு இறங்கியிருந்தது,சென்னை பழத்தோட்டத்தில் அம்மா இறந்த செய்தி!'அம்மா...' கசங்கிய சீருடையோடு ஓடி வந்து அணைத்தான் என் மகன். அவன் தோள்களினுாடே சிவராமனின் தாய் என்னை பார்த்து சிரிப்பது போல் இருந்தது; அந்த சிரிப்பில் உண்மை தெறித்தது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement