Advertisement

ரௌத்ர வீணை

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு,என்னய்யா நடக்குது தமிழகத்துல? முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர்னு எல்லாரும் இருக்குறாங்கன்னு தெரியும். ஆனா, அவங்க எல்லாம் செயல்படுறாங்களான்னு நீங்கதான் கொஞ்சம் பார்த்து சொல்லணும்!'என் உடம்புக்கு என்னம்மா பிரச்னை? நான் ஏன் இவ்வளவு மாத்திரை சாப்பிடணும்?'னு புள்ளைங்க அழுதுகிட்டே கேட்குறப்போ, பெத்த வயிறு பத்தி எரியுதுய்யா!வந்தது என்ன நோய்னு தெரியாமலேயே என் ரெண்டு குழந்தைகளை பலி கொடுத்துட்டேன். மூணாவது பிள்ளையும் உடம்புக்கு நோவுதுன்னு படுத்ததும், வேலுார் சிஎம்சிக்கு துாக்கிட்டு ஓடுனேன். 'உங்க புள்ளைக்கு தாலசீமியா பிரச்னை இருக்கு. இவன் உடம்புல ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாகாது.அடிக்கடி புது ரத்தம் ஏத்தணும். இல்லேன்னா, மயங்கி சாய்ஞ் சிடுவான். இவன் ரத்த மரபுக்கு பொருந்தக்கூடிய குருத்தணு கிடைச்சா மட்டும் தான் முழுசா குணப்படுத்த முடியும்'னு டாக்டருங்க சொல்லிட்டாங்க.அங்கே ருத்துவமனையில விசாரிச்சப்போ தான், எங்க தருமபுரி மாவட்டத்துல இந்த நோய் தாக்கம் அதிகம்னு தெரிஞ்சது. எங்க சித்தேரி மலையில மட்டும், 17 குழந்தைகளுக்கு இந்த பிரச்னை இருக்கு!எங்க மலையில இருந்து, 60 கி.மீ., தொலைவுல இருக்குதுய்யாதருமபுரி அரசு மருத்துவமனை. அங்கே, 2015 டிசம்பர் மாதம், தாலசீமியா சிறப்பு சிகிச்சை மையம் துவக்குறதா சொல்லி, எங்க குழந்தைகளை அழைச்சுட்டுப் போய் சிகிச்சை கொடுத்தாங்க; போட்டோ எடுத்துக்கிட்டாங்க. அதோட சரி! அதுக்கப்புறம், இப்பவரைக்கும் அந்த மையம் துாக்கத்துல தான் இருக்கு!ஆமாய்யா... சிகிச்சைக்காக உள்நோயாளியா குழந்தையை அனுமதிச்சா, ரத்தம் ஏத்துறதுக்காக ஒரு வாரம் வரைக்கும் காத்திருக்க வைக்கிறாங்க. அப்படி இருந்தாலும் ரத்தம் கிடைக்குங்கிறதுக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. போகப் போக, 'ரத்ததானம் செய்றவங்களை நீங்களே அழைச்சுட்டு வாங்களேன்'னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க! டாக்டர் கால்ல விழுந்து கதறிப் பார்த்துட்டோம். ம்ஹும்! தனியார் மருத்துவமனையில ஒருதடவை ரத்தம் ஏத்துறதுக்கு 5,000 ரூபா செலவாகுதுய்யா!
என்னை மாதிரியே இங்கே நிறைய பேர் நொந்து போய் கிடக்குறாங்க. எங்களை இப்படி பரிதவிக்க வைச்சிருக்கிற இந்த அரசை, நீங்க எப்போ தட்டி கேட்கப் போறீங்க; எங்க உயிரும் போனதுக்கப்புறமா?
- தாலசீமியா பாதிப்புள்ள குழந்தைகளுக்கு, முறையான அரசு சிகிச்சை கிடைக்காமல் அல்லாடும் சென்னம்மாள், சித்தேரி ஊராட்சி, தருமபுரி.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement