Advertisement

அவளே சரணம்

மவுனத்துக்கு என்ன மொழி; மவுனத்துக்கு என்ன வடிவம்; மவுனத்துக்கு என்ன ஓசை? - இப்படியாக, மவுனம் குறித்த தேடல் நிரம்பிய மனதோடு தான் சென்னை, மயிலாப்பூரில் உள்ள ஓவியக் கலைஞர் விதார்த்தியின் வீட்டை அடைந்தோம். விதார்த்தியின் செவி மற்றும் பேசும் திறனை பறித்துக் கொண்ட குற்ற உணர்வினாலோ என்னவோ, இயற்கை அன்னை கலை உணர்வை இவருக்கு ஏகத்துக்கும் வழங்கி இருக்கிறாள். வீட்டின் மாடியில் ஓவியத்திற்கென இருக்கும் தனிஅறை இதற்கு சாட்சியாய் இருக்கிறது!ஓர் ஓவியம் உருப்பெற துாரிகை வேண்டுமல்லவா! அப்படி, 31 வயது விதார்த்தி எனும் ஓவியத்திற்கு உரு தந்த துாரிகை தான் அவரின் தாயார் உமா மகேஸ்வரி. விதார்த்திக்கு எல்லாமும் இவர் தான்! வாருங் கள்... ஓவியம் துாரிகை குறித்தும், துாரிகை ஓவியம் குறித்தும் பேசுவதை கொஞ்சம் செவி மடுப்போம்.
மகளின் நிலை அறிந்த முதல் கணம், இக்கணம்?பாட்னாவுல வங்கி வேலை யில இருந்த என் கணவர், என் வளைகாப்பு விழாவுல கலந்துக்க வந்தார். வந்த இடத்துல அவருக்குமாரடைப்பு. ஒரு வினாடியில எல்லாம் முடிஞ்சு தனிமரம் ஆயிட்டேன். அந்த சமயத்துல, எட்டு மாத கருவா விதார்த்தி என் வயித்துல இருந்தா. வெறும் பத்து மாத திருமண வாழ்க்கை! பேரிடியை கொஞ்சம், கொஞ்சமா கடந்து இவளை பெத்தெடுத் தேன். என் கண்ணீர் துடைக்கிற ஆறுதலா இவ இருந்தா!நாட்கள் போகப் போகத் தான்,இவளால கேட்கவும், பேசவும் முடியாதுன்னு தெரிய வந்தது. அந்த கணத்துல, மனசுக்கு ரொம்பவே கஷ்டமா இருந்தது. ஆனா, அதெல்லாம் ஒரு எல்லை வரைக்கும் தான்! இப்போ, அதை கடந்து வந்துட்டேன். இன்னைக்கு அவ ஓவியங்களை பார்க்கும் போது மனசுக்கு சந்தோஷமா இருக்கு. என் பொண்ணுக்கு காது கேட்கலை, வாய் பேச முடியலைங்கிறது எல்லாம் ஞாபகத்துக்கு வர்றதே இல்லை. அவளை எனக்கு கிடைச்ச அபூர்வ பரிசாத் தான் இந்த கணத்துல உணர்றேன்!
சிறு வயது தொட்டே ஓவியங் கள் மீது விதார்த்திக்கு தீரா காதல் இருந்துள்ளது. கலாம் குடியரசு தலைவராக இருந்த போது, அவர் கரங்களால் தேசிய விருது பெற்றிருக்கிறார். அன்றைய தமிழக அரசும் விருது கொடுத்து இவரை கவுரவப்படுத்தி இருக்கிறது. தவிர, காமன்வெல்த் நாடுகள் சபை நடத்திய ஓவியப் போட்டிகளிலும் பங்கேற்றுபரிசுகள் பெற்றிருக்கிறார்.
விதார்த்தியின் ஓவியங்கள் சொல்ல வருவது என்ன?விதார்த்தியின் அம்மா நம் கேள்வியை உள்வாங்கி அவரிடம் தெரியப்படுத்த, வார்த்தை ஒன்றை எழுதி காண்பித்தார் அவர். அது...'பெண்மிகம்'புரியாமல் நாம் புருவம் உயர்த்த, விதார்த்தியின் அம்மா விளக்கினார். அவளோட ஓவியங் கள் எல்லாமே பெண்களை மையப்படுத்தி தான் இருக்கும். ஆனா, ஒரு ஓவியத்துக்கு ஒரு பெண் தான்! பூ தொடுக்கிறது, தண்ணி குடம் சுமந்து நடக்கிறது, வயல்ல நாற்று நடவு செய்றதுன்னு ஏதாவது ஒரு வேலை பார்த்துட்டே இருப்பா அந்த பெண்! இதுதான் விதார்த்தி ஓவியங்களுக்கான தனித்துவ அடையாளம். மத்தபடி, ஆன்மிகம் மாதிரி தான் இந்த பெண்மிகம். ஆமா, ஆன்மாவை உணர ஆன்மிகம்; பெண்மையை உணர பெண்மிகம். பெண்களை உழைக்கும் சக்தியா அடையாளப்படுத்துறது தான் இதன் மையம்.
விதார்த்தியால இசையை உணர முடியுமா?இசை ஏற்படுத்துற அதிர்வுகள் மூலமா, அவளால பிரமாதமா இசையை உணர முடியும். 'டிவி'யில வர்ற பாடல்களுக்கு, அதுல வர்றதை விட அற்புதமா நடனம் ஆடுவா. ஒருநாள் ஆச்சரியம் தாங்காம, 'எப்படி இசைக்கு ஏத்தமாதிரி நடனம் ஆடுறே?'ன்னு அவகிட்டே கேட்டேன். 'டிவி யில வர்றகாட்சிக்கு ஏத்தமாதிரி இசையை மனசுல ஒலிக்க வைச்சுப்பேன்'னுஅவ ரொம்ப யதார்த்தமா சைகையில பதில் சொன்னா! 'கேட்கிறதுக்கு பேரு சத்தம்; உணர்றதுக்குபேரு இசை'ன்னு அப்போ தான் எனக்குப் புரிஞ்சது. அன்னைக்கு அவ எனக்கு கத்துக் கொடுத்தது, காலத்துக்கும் என் மனசுல இருந்து அழியாத பாடம்!
இன்னொரு வாழ்வு கிடைக்கும் பட்சத்தில்...அதுலேயும் விதார்த்திக்கு நான் தான் அம்மாவா இருக்கணும். அவளோட ஓவிய அறிவை மேம்படுத்திக்க நம்ம நாட்டுல சரியான கல்விச் சூழல் இல்லை. இங்கிலாந்து போய் ஓவியத் துறையில பிஎச்.டி., பண்ணணும்னு அவளுக்கு ரொம்ப ஆசை. அதுக்கான பணம் என்கிட்டே இருந்தா உடனே அனுப்பி வைச்சிருப்பேன். அடுத்த பிறவியிலேயாவது என் பொண்ணோட கனவுகளை எல்லாம் உடனே நிறைவேத்தி தர்ற நிலைமையில நான் இருக்கணும். அது தான் அவளுக்கு நான் தர்ற நிலையான பரிசா இருக்கும்!
அம்மாவுக்கு விதார்த்தி கொடுக்க நினைக்கும் பரிசு?இந்த கேள்வியை உணர்ந்ததும், அவர் தன் இதயத்தில் கை வைத்து ஒரு மொழி பேசினார். மொழிபெயர்ப்புகள் தேவையற்ற அந்த மவுன மொழி நமக்கு சொன்னது இதைத் தான்...'நான் என் தாய்க்கு பரிசாக வழங்கப் போவது என் வாழ்வை!'அடுத்த மாதம், 24ம் தேதி விதார்த்திக்கு திருமணம். இவரின் கனவை, மவுன மொழியை ரசிக்கும் மனோபாவம் கொண்ட ஒருவருடன் கரம் கோர்க்கப் போகிறார். வண்ண ஓவியமாய் இவர் வாழ்வு ஜொலிக்க வாழ்த்துவோம்!

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement