Advertisement

கடைசி புகலிடம்!

கம்ப்யூட்டரை உற்று நோக்கி நோக்கி, கண்களுக்கு முன், ஏதோ, பூச்சி மாதிரி பறப்பது போன்ற உணர்வில், பைத்தியம் பிடித்து விடும் போலிருந்தது.
ஒரு வாரத்திற்கு, இவற்றிலிருந்து ஒதுங்கியிருக்க முடிவு செய்தேன்.
மனைவியிடம் இதுபற்றி சொன்ன போது, 'எத்தனை நாளைக்கு தப்பிப்பீங்க... மறுபடியும், இதே சூழலுக்கு வந்து தானே ஆகணும்...' என்றாள்.
பையனோ, 'லூசாப்பா நீ... கற்காலம் தான் பொற்காலம்ன்னு சொல்லி, பழைய அகல்விளக்கு காலத்துக்கு, 'அப்பீட்' ஆகப் போறீயா...' என்றவன், தன், ஐ போனில், ஐக்கியமாகி விட்டான்.
அலுவலகத்திற்கு ஒரு வாரம் விடுமுறை எடுத்து, எங்கு போகலாம் என்று பல இடங்களையும் ஆலோசித்து, கடைசியில், என் பூர்வீக கிராமத்திற்கு செல்ல முடிவு செய்து, லேப் - டாப், மொபைல்போன் இல்லாமல் வாழ முடியாதா என எண்ணி, எல்லாத்தையும் வீட்டிலேயே வைத்து விட்டு புறப்பட்டேன்.
இந்தக் காலத்திலும் இப்படிப்பட்ட கிராமங்கள் இருக்கின்றனவா என்று ஆச்சரியப்படும்படி, எந்த சொகுசு வசதியும் எட்டிப் பார்க்காத, சாலை வசதி கூட இல்லாத, குக்கிராமம் அது!
சிறு வயதில், கோடை விடுமுறையில் அப்பாவுடன் அங்கு போயிருக்கிறேன்.
கிராமத்தில், சித்தப்பா மட்டும் தான் இருந்தார். அமெரிக்காவில் செட்டிலாகி விட்ட அவர் பையனுக்கு குழந்தை பிறந்திருப்பதால், அமெரிக்கா போய் விட்டாள், சித்தி. விவசாயத்தை பார்ப்பதற்காக சித்தப்பா மட்டும் போகவில்லை.
தோட்டத்தில் இருந்தது, சித்தப்பாவின் வீடு. என்னை பார்த்ததும் மிகவும் சந்தோஷமானார். வேலை பற்றிய எந்த அழுத்தமும் இல்லாமல், பால்ய நாட்களின் சந்தோஷத்தை மீட்டெடுத்தது போன்று, வீதிகளிலும், தோட்டத்திலும், புழுதி படிந்த காலுடன் அலைந்து கொண்டிருந்தேன்.
தோட்டத்தில், சித்தப்பாவுக்கு உதவியாக வியர்க்க, விறுவிறுக்க வேலைகள் செய்தேன்; சுவாசம் முழுவதும், சுத்தமான காற்றை நிரப்பினேன்; பச்சையும், மஞ்சளுமாய் பயிர்களை பார்த்து பார்த்து களித்தேன்; பாசன கிணற்றில் ஏறி, குதித்து, நீந்தி மகிழ்ந்தேன்.
இலைகள் வாடி, பட்டு போன நிலையில் இருந்த பலா கன்றுக்கு, தண்ணீர் விட்டு, அதற்கு ஏதேதோ பக்குவம் பார்த்துக் கொண்டிருந்தார், சித்தப்பா.
''எதுக்கு சித்தப்பா பட்டுப் போன செடிக்கு இப்படி மெனக்கிடுறீங்க?'' என்றேன்.
''இல்லப்பா... இது கண்டிப்பா துளிர்க்கும்; வேர்ல உயிர் இருக்கு,'' என்றார், நம்பிக்கையாய்!
''இந்த மரம் வளர்ந்து, பலன் கொடுக்க, 20 வருஷத்துக்கு மேல ஆகும். உங்களால, அதில் இருந்து ஒரு சுளையாவது சாப்பிட முடியுமான்னு தெரியல. அப்புறம் எதுக்கு இப்படி வேலை மெனக்கிடுறீங்க...'' என்றேன் விடாமல்!
''நம்முடைய சந்ததிக்கோ அல்லது வேற யாருக்காவதோ பலன் குடுத்துட்டு போகட்டும்; அதனால என்ன...'' என்றவர், ''நமக்கு மட்டும் பலன் கிடைக்கணும்ன்னு செய்றது இல்லப்பா விவசாயம்...'' என்றார்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
அன்று இரவில், என் கனவில் வந்த அப்பா, 'இப்போது தான் உனக்கு இங்கு வர தோணுச்சா... அப்பப்ப, குழந்தைகள அழைச்சுட்டு வந்து, விவசாய வாழ்க்கை முறை எப்படிப்பட்டதுன்னு காட்டக் கூடாதா...' என்று, ஏக்கமாய் கேட்டுப் போனார்.
கனவிற்கும், வாழ்வியல் சம்பவங்களுக்கும் உள்ள தொடர்பை பற்றி நிறைய கூறியுள்ளாள், பாட்டி. அப்படி என்றால், இந்த கனவிற்கு என்ன அர்த்தம்!
ஊருக்கு கிளம்ப இரண்டு தினங்கள் இருந்த போது, என் பெயருக்கு கடிதம் ஒன்று வந்தது. வயதான அஞ்சல்காரர், என்னை தேடி வந்து, சந்தோஷமாக கொடுத்துப் போனார். மனைவி தான் எழுதியிருப்பாள் என்று நினைத்து, ஆர்வமாக பிரித்தால், குண்டு குண்டாய், எழுத்து மற்றும் இலக்கண பிழைகளுடன், நண்பன் பஞ்சு எழுதியிருந்தான். 'இங்க்' வாசனையுடன் எழுதப்பட்ட கடிதங்களை எழுதி, வாசித்து, எத்தனை ஆண்டுகளாகிறது!
சந்தோஷமாய் கடிதத்தை வாசிக்க துவங்கினேன்; ஆனால், கடிதத்திலிருந்த செய்தி, மகிழ்ச்சி தருவதாய் இல்லை.
நண்பா... இக்கடிதத்தை நீ வாசிக்கும் போது, அனேகமாக நான் இறந்திருப்பேன் அல்லது இறப்பதற்கான முயற்சியில் இருப்பேன். காரணம், என் அலுவலத்தில், என்னை பணியிலிருந்து விடுவித்து, வீட்டிற்கு அனுப்பி, மூன்று மாதத்திற்கும் மேலாகிறது. எவ்வளவு முயற்சித்தும், தோதான இன்னொரு வேலையை தேட முடியவில்லை. 40 வயதை கடந்தவர்கள் எல்லாம், நவீன யுகத்தில், அதுவும், ஐ.டி., கம்பெனிகளுக்கு லாயக்கற்றவர்களாகி விடுகிறோம். ஒவ்வொரு துறையிலும், புதிது புதிதாக, இளம் மூளைக்காரர்கள் வந்து குவியும் போது, வயதான, உலர்ந்து போன மூளைக்காரர்கள், ஓரங்கட்டப்படுவது இயல்பு தானே!
வாழ்வை எதிர்கொள்ள தெரியாத கோழை என்று என்னை நீ திட்டலாம்; கை நிறைய சம்பளம் வாங்கி, சொகுசான வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு போனேன். திடீரென்று, எதுவுமே இல்லையென்றால் எப்படி சமாளிப்பது... என்னால், மிக சாதாரணமான வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே முடியாது; வருகிறேன்!
பின் குறிப்பு: இறப்பதற்கு முன், உன்னை பார்ப்பதற்காக உன் வீட்டிற்கு போயிருந்தேன்; உன் மனைவி தான், நீ கிராமத்திற்கு போயிருப்பதாகவும், லேப் - டாப், மொபைல் போன் எதையும் எடுத்துப் போகவில்லை என்றும் சொல்லி, இந்த முகவரியை தந்தார். அதனால் தான், இக்கடிதத்தை உனக்கு எழுதுகிறேன். ஆனால், என்னால் சரளமாக எழுத வரவில்லை; கையால் எழுதுவதையே மறந்து போன தலைமுறைகள் உருவாகிக் கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. அது நல்லதா, கெட்டதா என்று தெரியவில்லை...
கடிதத்தை படித்ததும், மனம் படபடத்து, நெஞ்சு வலிப்பது போல் இருந்தது. இருவரும் ஒரே கல்லூரியில், இ.சி.இ., படித்து, உள்ளூர் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தோம்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் தான், மல்டி நேஷனல், ஐ.டி., கம்பெனி ஒன்றில், இரண்டு மடங்கு சம்பளத்தில், வேலைக்கு சேர்ந்தான், பஞ்சு. நானும் முயற்சித்தேன்; ஆனால், என் ஆங்கிலம், அத்தனை சரளமாய் இல்லை என்று, வேலை கிடைக்கவில்லை.
வேலைக்கு சேர்ந்த புதிதில், அதன் பிரமாண்டத்தையும், சொகுசையும் பற்றி, வாய் மூடாமல் பேசிக் கொண்டிப்பான், பஞ்சு.
பின், ஒருநாள், 'எங்கு பாத்தாலும், கேமரா பொருத்தி, நம்முடைய ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கிறாங்க; எப்போதும் பதற்றமாவே வேலை செய்றது, ஜெயிலுக்குள் இருக்கிறது மாதிரி இருக்கு...' என, புலம்பினான்.
கம்பெனி, அவனை அமெரிக்காவிற்கு அனுப்பி, 'டிரைனிங்' கொடுத்து, திரும்பி வந்ததும், புதிய பொறுப்புகளையும் கொடுத்திருந்தது; வீடு, கார் என்று கண்ணெதிரிலேயே, 'மளமள'வென்று வளர்ந்தான். உடன் வேலை பாத்த பெண்ணை, காதலித்து மணந்தான்.
அவனுடைய வளர்ச்சி பெருமையாகவும், கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது.
ஐ.டி., கம்பெனியில், 'பெஞ்சில் உட்கார வைத்திருப்பது' எனும் சொல், புழக்கத்தில் உள்ளது. ஒருநாள், அவ்வாறு பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டிருந்தான், பஞ்சு. அவனைப் பார்க்க சென்றிருந்த என்னிடம், 'பெஞ்சில் உட்காந்திருப்பதுன்னா, அனேகமாக, நம்மை வேலையை விட்டு தூக்கப் போறாங்கன்னு அர்த்தம். அவங்களுக்கு, புதுசாய் புராஜெக்ட் வரும் வரை, வேலைகள் கொடுக்க மாட்டாங்க. எப்போதும், கேமரா கண்களால் கண்காணிக்கப்பட்டு, மனதளவில் பதறியபடி உட்கார்ந்திருப்பது மிகப் பெரிய நரகம்...' என்று புலம்பினான்.
'பயப்படாத... உன்னை மாதிரி திறமைசாலிகள, அவ்வளவு சீக்கிரம், வீட்டிற்கு அனுப்பிடமாட்டாங்க...' என்றேன், ஆறுதலாய்!
பின், இரண்டு வாரத்திலேயே அவன் பணி நீக்கம் செய்யப்பட்டான்.
சித்தப்பாவின் மொபைலை வாங்கி, அவனை தொடர்பு கொண்டேன். 'தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்' என்று வர, உடனே, சித்தப்பாவிடம் சொல்லி, ஊருக்கு கிளம்பினேன்.
மனைவியிடம், விஷயத்தை சொன்ன போது, ''அவர், இங்கு வந்திருந்த போது, ரொம்ப சாதாரணமாக தானே பேசிட்டு இருந்தார்,'' என்றாள்.
சின்ன நம்பிக்கை துளிர்த்தது. ஒருவேளை, எனக்கு கடிதம் எழுதிய பின், மனசு மாறி, அந்த எண்ணத்தை கை விட்டு விட்டானோ!
அவசரமாய், அவனுடைய அபார்ட் மென்ட்டிற்கு போனேன்; வீடு பூட்டியிருந்தது. பக்கத்தில் விசாரித்த போது, அப்படி ஒருத்தன் அங்கு இருக்கிறான் என்பதே யாருக்கும், தெரியவில்லை.
ஓர் ஆண்டுக்கு முன்பே பஞ்சுவிடம் இருந்து பிரிந்து சென்று, தனியாக வாழும் அவன் மனைவியை தேடிப் போய், அவளிடம் பஞ்சுவை பற்றி விசாரித்து, அவன் எனக்கு எழுதிய கடிதத்தை பற்றி சொன்னதும், அவளும் பதறிப் போனாள்.
ஒருவேளை, அவனுடைய கிராமத்திற்கு போயிருக்கலாம் என்று சொல்லி, என்னுடன் கிளம்பி வந்தாள்.
பஞ்சுவின் கிராமம், எல்லா நவீன வசதிகளுடன் இருந்தது.
அங்கு தான் இருந்தான், பஞ்சு; அவனுடைய மனைவியை பார்த்ததும், மிகவும் சந்தோஷமானான்.
அபார்ட்மென்ட்டில் இறந்தால், அங்கிருப்போர் அதை அறியாமல், அவனுடைய பிணத்தை, புழுக்க விட்டு விடுவர் என்று பயந்து, சாவதற்காக, கிராமத்திற்கு வந்ததாகவும், ஆனால், கனவில் வந்த அவனது அம்மா, 'உன் அப்பா, நம்மை விட்டு பிரிந்து போன போது, நீ, கைக் குழந்தை; தன்னந்தனியாக, வைராக்கியமாக, நிலத்தில் பாடுபட்டு, உன்னையும் ஆளாக்கினேன். ஆனால் நீயோ, இவ்வளவு படித்திருந்தும், வாழ்வதற்கு செம்மையான ஒரு வழியை கண்டுபிடிக்க முடியாமல் தற்கொலை செய்ய முடிவெடுக்கிறாய்...
'உன்னை போன்றோர், அறிவால் மட்டுமே வாழ்ந்து, அதன் மூலமே எல்லா பிரச்னைகளையும் தீர்க்க முடியும்ன்னு நம்பி, மூளையை குழப்புகின்றனர்.
'உங்களின் அறிவும், அதனால் உருவாகும் கர்வமும் தான் எல்லா பிரச்னைக்கும் காரணம். கொஞ்சம் மனதால் வாழ்ந்து பாருங்கள்; இத்தனை பிரச்னைகள் இருக்காது. உன் படிப்பு, அறிவு எல்லாவற்றையும் மறந்து, திறந்த மனதுடன் யோசி. நீ வாழ்வதற்கான ஏதாவது வழி புலப்படும்...' என்று கூறியதாக சொன்னான்.
''காலையில எழுந்ததும், அம்மா கனவில் வந்து சொல்லிய விஷயங்கள அசை போட்டபடி, காலாற நடந்துட்டு இருந்தேன். தரிசாக கிடக்கிற பூர்வீக நிலங்கள் ஞாபகம் வந்தது. அதனால, நிலங்கள பாக்கப் போனேன். அவை, என்னை ஏக்கமாய் பாப்பது போல தோணிச்சு. அம்மாவுடன் சேர்ந்து, விவசாய வேலைகள் செய்திருந்ததால, எனக்கு கொஞ்சம் விவசாயம் தெரியும். அதன் அடிப்படையில், நான் வேலையில்லாமல் இருந்த காலத்தில், விளையாட்டின் மூலம் குழந்தைகளுக்கு விவசாயத்தை அறிமுகப்படுத்துகிற சாப்ட்வேரை, எழுதினேன். இதை கம்ப்யூட்டரில் மட்டுமல்ல, மொபைல் போனிலும் விளையாடலாம். அது, வெறும் விளையாட்டாக இல்லாமல், விவசாயம் பற்றியும், அதன் நுட்பங்கள் பற்றியும், குழந்தைகளுக்கு சொல்லித் தரும்.
''சென்னையில், என் ப்ளாட்டை விற்றால், கணிசமான பணம் கிடைக்கும்; அதை, மூலதனமாக வைத்து, நான் உருவாக்கி இருக்கும் சாப்ட்வேரை, விற்பனை செய்யப் போகிறேன்.
''இன்னொரு காரியம்... தரிசாக கிடக்கும் பூர்வீக நிலங்கள செம்மையாக்கி, விவசாயம் செய்யவும் தீர்மானிச்சுருக்கேன்,'' என்றான், பஞ்சு.
''கேட்க நல்லாத் தான் இருக்கு. காலங்காலமா விவசாயம் செய்றவங்களே, அது அவ்வளவு லாபகரமானதாய் இல்லன்னு தற்கொலை செய்றாங்க. இதில, நீ எப்படி ஜெயிக்க முடியும்ன்னு நினைக்கிறே... அதோடு, படித்த நமக்கெல்லாம், விவசாய வேலைக எப்படி சரிப்பட்டு வரும்...'' என்றேன், நம்பிக்கை இல்லாமல்!
'ஏன்... படிச்சவங்க விவசாயம் பாக்க கூடாதா... நம்மால் எளிமையாக வாழ முடியாதுங்கிறதால தான், விவசாயம் செய்ய அஞ்சுறோம். கண்டிப்பாக, நாளைய உலகை, விவசாயம் தான் ஆளப் போகுது. நம் அறிவை விவசாயத்தில் புகுத்தி, அதை, லாபகரமான தொழிலாக்கும் வழிகளை யோசித்தால், கண்டிப்பாக சாதிக்க முடியும்,'' என்றான், பஞ்சு.
அவன் சொல்வதில், பெரிதாய் நம்பிக்கை ஏற்படவில்லை என்றாலும், அவன் உயிரோடு இருக்கிறான் என்பதும், அவன் மனைவியும், இனி அவனுடன் சேர்ந்து வாழப் போவதாய் சொல்லியதும், சந்தோஷமாய் இருந்தது. 'அவர்கள் வாழ்க்கையில் ஜெயிக்கட்டும்...' என்று, மனதில் வாழ்த்தி, ஊருக்கு கிளம்பினேன்.

சோ.சுப்புராஜ்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement