Advertisement

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள சகோதரிக்கு -
என் வயது, 42; தமிழ் பெண்; என் கணவர் தெலுங்கு. ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து, காதலித்து, இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு ஒரே மகள்; கல்லூரியில் படிக்கிறாள்.
ஆரம்பத்திலிருந்தே, இத்திருமணத்தில் என் மாமனாருக்கு விருப்பமில்லை. இருப்பினும், ஒரே மகன் என்பதால், ஏற்றுக் கொண்டார்.
திருமணமான புதிதில், அவர்களது பழக்கவழக்கம் புரியாமல் மிகவும் சிரமப்பட்டேன். என் மாமியார் கூட எதுவும் சொல்லிக் கொடுக்க மாட்டார். என் கணவர் மட்டும் தான் ஒரே ஆதரவு.
சிறிது சிறிதாக தெலுங்கு பேச கற்றுக் கொண்டேன். இன்று வரை, என் மாமனார் எதிரில் நின்று பேச மாட்டேன். ஆனாலும், ஏதாவது என் மனம் நோகும்படி பேசி விடுவார்.
அவர் முன், என்னுடன் சரளமாக பேசுவதற்கு கூட தயங்குவார், மாமியார். ஏனெனில், என்னுடன் சிரித்து பேசினால், மாமியாருக்கு திட்டு விழும். இதெல்லாம், என் கணவர் இல்லாத போதுதான். அவர் வீட்டில் இருந்தால், மாமனாரது நடவடிக்கை அப்படியே மாறிவிடும்.
என்னிடம் மட்டும் தான் இப்படி நடந்து கொள்வார். என் மகளிடம் நன்றாக பேசுவார். அவர்களது உறவினர் யாராவது வீட்டிற்கு வந்தால், நான் சமையலறையிலேயே இருந்து, அவர்களுக்கு வேண்டியதை செய்து தர வேண்டும். எனக்கு ஒத்தாசைக்கு மாமியார் வந்தால், 'நீ ரெஸ்ட் எடு; அவள் செய்யட்டும்...' என்பார்.
நானும், என் கணவரும் லோன் போட்டு, மூன்று பெட்ரூம் ப்ளாட் வாங்கி, அதில் தான் வசித்து வருகிறோம். ஆனால், என் வீட்டினரோ, தோழிகளோ வீட்டுக்கு வரக்கூடாது; அப்படியே யாராவது வந்து விட்டால், அன்று முழுக்க, 'முணுமுணு'வென்று திட்டியபடி இருப்பார்.
இதனால், இப்போதெல்லாம் பொறுமை இழந்து, உணர்ச்சி வசப்பட்டு, அவரிடம் கத்தி விடுவேனோ என்று பயமாக இருக்கிறது.
வீட்டுக்கு செல்வதற்கே வெறுப்பாக உள்ளது. இந்த, 'மென்ட்டல் டார்ச்சரிலிருந்து' மீள்வது எப்படி?
— இப்படிக்கு, உங்கள் சகோதரி.

அன்பு சகோதரிக்கு -
இன பேதம் பார்ப்பவர், உன் மாமனார். தன் ஒரே மகனுக்கு, தங்கள் ஜாதியில், வரதட்சணையுடன் பெண் எடுக்க, கனவு கண்டிருப்பார். அது காதல் என்ற பெயரில் புஸ்வாணம் ஆக, அந்த ஏமாற்றம் தந்த வெறுப்பை, உன் மீது காட்டுகிறார். அதேநேரம், உன் மகள், அவரது மகனின் வாரிசு அல்லவா... அதுதான், பேத்தி மீது மட்டும், 'டன்' கணக்கில் பாசத்தை கொட்டுகிறார்.
உன் மீதான வெறுப்பை பற்றி, உன் மாமியாரிடம் கூறியிருப்பார். அதனால் தான், அவர் முன். உன்னிடம் பேச, தர்மசங்கடமாய் நெளிகிறார், மாமியார்.
நீ, உன் மாமனாரின் இருப்பை அலட்சியப்படுத்துவதுடன், அவரை வெறுப்பேற்றும் விதமாக, உன் மாமியாரிடம் பாசத்தை கொட்டு. மனதை அமைதியாக வைத்துக் கொள்ள, தினம் யோகா செய்; உன் மாமனாரிடம் நேருக்கு நேர் மோதும் சந்தர்ப்பங்களை தவிர். அவர், உன்னை அவமானப்படுத்தினால், அவ்விடத்தை விட்டு அகன்று விடு.
உன் அலுவலகத்தில், உனக்கு வேண்டாத நபர் இருப்பர்; அவரை சமாளித்து தானே அலுவலகத்தில் பணிபுரிகிறாய்... காரணம், உனக்கு வேலையும், சம்பளமும் முக்கியம். அதைப் போன்று தான் குடும்பமும்... இங்கு, உன்னை பிடிக்காத அதிகாரியாய், உன் மாமனார்!
சகோதரி... புகுந்த வீட்டில் பிரச்னைகளை சந்திக்காத பெண்கள், உலகில் இல்லை. நீண்ட தூரம் செல்லும் ரயில் பயணத்தில் கரப்பான், எலி மற்றும் மூட்டைப் பூச்சி என, பல தொந்தரவுகளை சகித்தபடியே பயணத்தை தொடர்வது போல், புகுந்தவீட்டு பிரச்னைகளையும் சகித்து, வாழ்க்கையை நகர்த்த வேண்டும்.
அதனால், இதற்கெல்லாம் மனதை அலட்டாமல், கணவன், மகளுடன் வார இறுதியில் விரும்பியதை சமைத்து எடுத்து, 'பிக்னிக்' சென்று வா. வேலைக்கு சென்று வீடு திரும்பியவுடன், விரும்பிய இசை கேள். மாமனாரின் கெட்ட குணம் அகல, இறைவனை வேண்டு!
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement