Advertisement

இந்தியாவின் இன்ஜினீயர்!

எம்.விஸ்வேஸ்வரய்யா
15.09.1860 - 14.04.1962
முட்டனஹள்ளி, சிங்கபல்லபுரா, கர்நாடக மாநிலம்


1908 செப்டம்பர் 28, ஹைதராபாத் நகரைப் பெரும்புயல் தாக்கியது. அதன் காரணமாகப் பேய் மழைபெய்து, வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. எதிர்காலத்தில் இதுபோன்ற வெள்ளப் பாதிப்பிலிருந்து நகரைக் காப்பாற்றத் தேவையான நடவடிக்கைகளையும் நகரின் புனரமைப்பையும் மேற்கொள்ள அரசு அவரைத் தேடியது. அரசு சொன்ன பணியை ஏற்றுக்கொண்டு, ஹைதராபாத் நகரில் நவீன வடிகால் அமைப்பைச் சிறப்பாக உருவாக்கினார். இந்தப் பணிகளால் மக்களிடையே நல்ல பெயர் கிடைத்தது. அவர் மோக் ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா.
எளிமையான குடும்பத்தில் பிறந்து, தொடக்கக் கல்வியைக் கிராமத்திலேயே கற்றார். இவரது குடும்பம் பெங்களூருவுக்கு இடம் பெயர்ந்ததால், அங்கே உயர்நிலைப் பள்ளியில் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டமும், புனே பொறியியல் கல்லூரியில் கட்டடப் பொறியியலும் முடித்து, மும்பை பொதுப்பணித் துறையில் அரசு வேலையில் சேர்ந்தார். பிறகு இந்திய நீர்ப்பாசன ஆணையத்திற்குப் பணியாற்ற அழைக்கப்பட்டார் விஸ்வேஸ்வரய்யா.
1903ல் புனே, கடக்வாசல நீர்த்தேக்கத்தில் திடீரெனப் பெருகும் வெள்ள நீரால் அணையைக் காப்பாற்ற தானியங்கி மதகுகளை முதன்முதலில் வடிவமைத்தது இவர்தான். இந்தச் செயல்முறை வெற்றிகரமாக அமைந்ததால், இதே முறையைப் பயன்படுத்தி ஆசியாவிலேயே மிகப்பெரிய நீர்தேக்க அணைகளில் ஒன்றான கிருஷ்ணராஜ சாகர் அணையைக் காவிரியின் குறுக்கே நிறுவினார். அவருடைய திறமைக்கு எடுத்துக்காட்டாக, மைசூரில் கிருஷ்ணராஜ சாகர் அணை இன்றும் பிரம்மாண்டமாக இருக்கிறது. இது மட்டுமல்லாமல், திருப்பதியில் இருந்து திருமலைக்கு சாலை அமைக்கவும், மைசூருக்கு அருகில் நீர் மின் உற்பத்தி ஆலை அமைக்கவும் உறுதுணையாக இருந்தார்.
1912ல் மைசூர் அரசின் திவானாக இருந்தபோது, மாநிலக் கல்வி, தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்தினார். 1934ல் 'இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம்' என்ற நூலை எழுதி, பொருளாதாரத் திட்டமிடல் பற்றிக் கூறிய முதல் அறிஞரும் இவரே. தன்னலமில்லாத சேவையைப் பாராட்டி, இந்திய அரசு 1955ல் இவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கி கௌரவித்தது. இவரது பிறந்தநாள் 'தேசிய பொறியியலாளர் தின'மாகவும் கொண்டாடப்படுகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement