Advertisement

ஆரம்பப் புள்ளி!

“செப்டம்பர் 15 உலகப் புள்ளி தினம்கறாங்களே, அப்படின்னா என்ன?” என்று பாலு கேட்டான்.
எனக்கும் தெரியவில்லை. ஞாநி மாமாவிடம் கேட்டேன். “அது ஒரு புத்தகத்தின் பெயர். அதை வைத்து அந்த நாளை சிலர் கொண்டாடுகிறார்கள்.” என்றார். என்ன புத்தகம் என்று துருவியதில் சுவையான விஷயம் கிடைத்தது.
அமெரிக்காவில் பீட்டர் ரெய்னால்ட்ஸ் என்று ஒரு சிறுவர் எழுத்தாளர். அவர் எழுதிய புத்தகம்தான் தி டாட் (புள்ளி). என்னை மாதிரி ஒரு அமெரிக்க மாலுவான வஷ்டிதான் கதாநாயகி. அவளுக்குப் படம் வரைய வரவில்லை என்று ரொம்ப வருத்தம். ஆனால் அவளுடைய ஆசிரியை அவளை ஒரு காகிதத்தில் நடுவில் புள்ளி வைக்கச் சொல்கிறார். அவளும் வைக்கிறாள். ஆசிரியை அந்தக் காகிதத்தைச் சட்டமிட்டு வகுப்பில் மாட்டி அதை ஓர் ஓவியம் என்று சொல்கிறார். வஷ்டி நான் இதை விட நல்ல புள்ளி வரைவேனே என்று சொல்லி இன்னும் விதவிதமாக புள்ளிகள் வரைய ஆரம்பிக்கிறாள். புள்ளியை நீட்டிக் கொண்டே போனால் கோடு. கோட்டை நீட்டிக்கொண்டே போனால் ஓவியம் என்று புரிந்துகொண்டு மனத்தயக்கம் இல்லாமல் ஓவியம் வரையத் தொடங்குகிறாள் என்பதுதான் கதை. நேராகக் கோடு போடத் தெரியாத ஒரு சிறுவன் இன்னொரு பாத்திரம்.
அதாவது ஒவ்வொருவருக்குள்ளும் ஏதோ ஒரு கலைத் திறமை ஒளிந்துகொண்டுதான் இருக்கிறது. அதை பயத்தாலோ தயக்கத்தாலோ, சோம்பலினாலோ வெளியே கொண்டு வராமல் புதைத்துவிடுகிறோம். வஷ்டியின் ஆசிரியை போல ஒருத்தர் தூண்டுகோலாக இருந்தால், எல்லோர் திறமையும் வெளிப்படும்.
வகுப்பறை, திறமைகளைத் தூண்டிவிட்டு வெளிப்படச் செய்வதற்கான இடமாக இருக்க வேண்டும் என்பதுதான் கதை சொல்லும் செய்தி. உலகப் புள்ளி தினத்தன்று வகுப்பறையில் எல்லாருடைய கலைத் திறமைகளும் வெளிப்படும் விதத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவதுதான் கொண்டாட்டம்.
“புள்ளியை வைத்து கலைஉணர்ச்சியை வளர்ப்பதை நாம் ஆதிகாலத்திலிருந்தே செய்து வருகிறோம்.” என்றார் மாமா. எப்படி என்றேன். “கோலம் வேறென்னவாம்? வீட்டு வாசலைப் பெருக்கிச் சுத்தமிட்டு கோலம் போடும் மரபு ஆயிரக்கணக்கான வருடங்களாக இருக்கிறது. புள்ளி வைத்துக் கோலம் போடுவதில் எத்தனையோ வகைகள் இருக்கின்றன. எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் புள்ளிக் கணக்கு, கம்பிக் கணக்கெல்லாம் நினைவிலிருந்தே போடுகிறார்களே.” என்றார் மாமா.
“சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் நான் படிக்கும்போது பேராசிரியராக இருந்த டாக்டர் கிஃப்ட் சிரோமணி கோலங்களில் இருக்கும் கணக்கு, வகைமுறை பற்றியெல்லாம் ஆய்வு செய்திருக்கிறார். கோச்சிங் கிளாஸ், டிரெய்னிங் ப்ரொகிராம் எல்லாம் வைக்காமல் தலைமுறை, தலைமுறையாக கோலம் போடும் கலையை நம் குடும்பங்கள் சொல்லிக் கொடுத்து வந்திருக்கின்றன. எனக்கு ஒரே ஒரு வருத்தம்தான். வீட்டில் பெண்களுக்கு மட்டும்தான் இதைக் கற்றுத்தருகிறார்கள். ஆண் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும்.” என்று மாமா சொன்னதும் பாலு தான் ஏற்கெனவே கற்றுக்கொண்டு விட்டதாக சொன்னான். “கோலம் போடுவதில் கற்று முடிப்பது என்று எதுவும் கிடையாது. தொடர்ந்து புதிது புதிதாகக் கற்றுக்கொண்டே இருக்கலாம். கலை, அறிவியல் இரண்டிலும் கற்பதற்கு முடிவே கிடையாது.” என்ற மாமா குடிக்கத் தண்ணீர் கேட்டார்.
பாலு கேனிலிருந்து தண்ணீர் எடுத்து வந்துக் கொடுத்தான். “இதைக் குடித்தால் எனக்கு டெங்கு, டைஃபாய்ட் எதுவும் வராது என்று உத்தரவாதம் உண்டா?”என்று சிரித்தார் மாமா. “இது சுத்தமான தண்ணீர்தான் என்று எப்படித் தெரியும்? நாம் சோதிப்பதே இல்லையே. எந்தத் தண்ணீராக இருந்தாலும் காய்ச்சி ஆறவைத்துக் குடித்துவிடுவதுதான் நல்லது.”
“தண்ணீரை நாம் எப்படி சோதிப்பது?” என்றான் பாலு. “தண்ணீரின் வெப்பம், அமிலத்தன்மை, அடர்த்தி, கரைந்திருக்கும் ஆக்சிஜன் அளவு என்று பல அம்சங்கள் சோதிக்கப்படவேண்டும். அதற்கென்றே சோதனைக் கிட் (Kit)கள் கிடைக்கின்றன. ஆர்.ஓ. எனப்படும் ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் முறையில் வடிக்கப்படும் நீரைக் கூட சோதிக்கவேண்டும். செப்டம்பர் 18ஐ உலக தண்ணீர் கண்காணித்தல் தினமாகக் கொண்டாடுகிறார்கள். அன்றைக்கு அருகில் இருக்கும் குளம் குட்டை, ஏரி, ஆறு அவற்றில் இருக்கும் நீரையெல்லாம் சோதிக்க மாணவர்களை பள்ளியிலிருந்தே அழைத்துச் செல்லலாம்.”என்றார் மாமா.
“எல்லாம் மோசமாகத்தான் இருக்கும். சுற்றுச்சூழல்தான் கெட்டுக் கிடக்கிறதே.” என்றான் பாலு.
“அப்படி எல்லாவற்றையும் அவநம்பிக்கையுடன் பார்க்க வேண்டியதில்லை. சென்னையில் தண்ணீர்ப் பஞ்சம் வந்தபோது கல்குவாரிகளில் தேங்கிய தண்ணீரை கூட எடுத்து வந்து குடிநீராக்கினார்கள். ஒவ்வொரு கட்டத்திலும் சோதனை செய்தால்தான் அடுத்து அதன் தரத்தை மேம்படுத்த முடியும். ஓசோன் படலம் பற்றி தெரியும் இல்லையா?” என்று கேட்டார் மாமா.
“பூமியைச் சுற்றியும் இருப்பதுதானே. சூரியனின் ஆபத்தான கதிர்களிலிருந்து அதுதானே நம்மைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அதில்தான் ஓட்டை விழுந்துவிட்டதே.” என்றான் பாலு.
“தொடர்ந்து அதைக் கண்காணித்தால்தானே அதில் ஓட்டை விழுந்ததா இல்லையா என்பதே தெரியும். 1987ல் இந்தப் பிரச்னை கவனத்துக்கு வந்தது. மாண்ட் ரியேல் நகரில் பல நாடுகள் கூடி இனி ஓசோனைப் பாதிக்கும் நடவடிக்கைகள், ரசாயனங்கள் எல்லாவற்றுக்கும் தடை விதித்தார்கள். முப்பது வருடம் கழித்து இந்தத் தடையினால் கொஞ்சம் பயன் ஏற்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தார்கள். 2.1 கோடி சதுர கிலோமீட்டர் பரப்புக்கு இருந்த ஓசோன் ஓட்டை இப்போது 1.7 கோடியாக குறைந்திருக்கிறதாம்.” என்றார் மாமா.
“அப்ப எதையும் தொடர்ந்து கண்காணிப்பதுதான் நல்லது என்கிறீர்கள்” என்றான் பாலு. ஆமாம் என்றார் மாமா.
“நானும் மாலுவைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். சனிக்கிழமையானால் ரகசியமாக எங்கேயோ காணாமல் போய்விடுகிறாள்” என்றான் பாலு.
“கண்காணிப்பது என்று நான் சொன்னது இதையல்ல.” என்று சிரித்தார் மாமா.
சனிக்கிழமை காணாமல் போவது பற்றி இப்போதைக்கு பாலுவுக்கு சொல்லப் போவதில்லை.

வாலுபீடியா 1:
உலகப் புள்ளி தினம்: செப்டம்பர் 15
உலக ஓசோன் பாதுகாப்பு தினம்: செப்டம்பர் 16
உல்க தண்ணீர் சோதனை தினம்: செப்டம்பர் 18
மின் நூல் தினம்: செப்டம்பர் 18

வாலுபீடியா 2
உலகத்தின் மிகப் பெரிய ரங்கோலி கோலம் 22,863 சதுர மீட்டர் அளவிலானது. போபால் அருகே சிங்ரோலி சுரங்கக் குடியிருப்பில் 1500 மாணவர்களால் 2013ல் உருவாக்கப்பட்டது. அவர்களைத் தூண்டியவர் மாவட்ட ஆட்சியராக இருந்த தமிழர் மாணிக்கம் செல்வேந்திரன்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement