Advertisement

வெங்கியைக் கேளுங்க!

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி

1. பாதங்கள் ஏன் கூசுகின்றன? கூச்சத்தைப் போக்க முடியுமா?
கே.சௌமியா, மின்னஞ்சல்.

பாதம், கழுத்து என உடலின் சில பகுதிகளில் கிச்சுக்கிச்சு மூட்டும்போது, நமக்குச் சிரிப்பு வருவதுடன் உடல் தானே நெளிந்து கூச்சம் ஏற்படும். பாதம் முதலிய பகுதிகளில் மெய்சனரின் நுண்மங்கள் (meissners corpuscles) எனும் சிறப்பு தொடு உணர்ச்சி நரம்பு செல்கள் செறிவாக உள்ளன.
மென்மையான வருடலையும் இவை உணரும் தன்மை கொண்டவை. எனவே, மெல்லிய வருடலும் தீவிர உணர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆனால், பாதம் முதலிய பகுதிகளில் மட்டும் இந்த நரம்புகள் செறிவாக இருப்பது ஏன்?
காட்டு விலங்காக நாம் வாழ்ந்தபோது பூச்சிகள், புழுக்கள் நம்மீது விழுந்து நமக்கு ஆபத்தை விளைவிக்கலாம். அப்போது உடல் பகுதிகளில் கூச்சத்தின் மூலம் எச்சரிக்கை செய்யவே இப்படி கிச்சுக்கிச்சு வந்தது என்பது சிலரின் கருத்து. சிறு பூச்சி ஊர்வதையும் உணரும் தன்மை, தன்னிச்சையாக உடல் நெளிவதால், அந்தப் பூச்சியை உடனே அகற்றும் தன்மை முதலியவை பிற்காலத்தில் கிச்சுக்கிச்சு உணர்வாக உருவானது.
வேறு சில ஆய்வாளர்கள் கிச்சுக்கிச்சு மூட்டுவது என்பது, நமது நண்பர்கள், உறவினர்களுடன் ஒட்டுறவு ஏற்பட பரிணாமத்தில் உருவான நிகழ்வு என்கின்றனர். குழந்தையை நாம் கொஞ்சும் போதும், குழைந்தைகள் விளையாடும்போதும் கிச்சுக்கிச்சு மூட்டப்படுகிறது. கிச்சுக்கிச்சு மூட்டப்படும் பகுதிகள் உடலில் எளிதில் ஆபத்தைச் சந்திக்கும் பகுதிகள்; எனவே கிச்சுக்கிச்சு மூட்டி விளையாடும்போது, குழந்தை உடலின் அந்தப் பகுதிகளை தற்பாதுகாப்பு செய்யப் பழகுகிறது எனவும் சிலர் கூறுகின்றனர். நம்மை நாமே இதே பகுதியில் வருடும்போது, நமது சிறுமூளை அந்த உணர்வு எப்படி இருக்கும் என கணித்துவிடுகிறது.

2. பூமியின் குப்பைகளை விண்கலத்தில் வைத்து அண்டவெளிக்கு அனுப்ப முடியுமா? அது முடியாதெனில் காரணம் என்ன?
ப. ரஞ்சித்குமார், 12ம் வகுப்பு, பூ.சா.கோ சர்வஜன பள்ளி, பீளமேடு, கோவை.

முடியும்! மிகமிகக் கூடுதல் செலவு பிடிக்கும்; அவ்வளவுதான். இந்திய ராக்கெட் மூலம் சுமார் 8 டன் குப்பையை விண்வெளிக்கு எடுத்துச் செல்ல சுமார் 400 கோடி ரூபாய் செலவாகிறது. அதாவது, ஒரு டன்னுக்கு 50 கோடி ரூபாய்.
ஒரு கிலோ 5 லட்சம் ரூபாய்! ஒவ்வொரு நாளும் உங்கள் வீட்டு குப்பையை விண்வெளிக்கு எடுத்துச் செல்ல 5 ஐந்து லட்சம் ரூபாய் செலவு தாங்குமா? குப்பை என்பது என்ன? சரியான பொருள் தவறான இடத்தில் இருப்பதுதான். குப்பையிலிருந்து மின்சாரம், உரம் என, பல பயனுள்ள பொருட்களைத் தயாரிக்க முடியும். எனவே விண்வெளிக்கு அனுப்புவது சரியானமுறை அல்ல; மறு சுழற்சி செய்வதே சிறந்த வழி.

3. சில வகைத் தாவரங்கள் பூச்சிகளை உட்கொள்வதுபோல மனிதனையும் உட்கொள்ளுமா?
ச.ஷகிலா பானு, 11ம் வகுப்பு, புனித வளனார் மகளிர் மேல்நிலைப் பள்ளி, குரூஸ்புரம்.

சூரிய ஒளி, கார்பன் டை ஆக்ஸைடு, தண்ணீர் இவற்றைக் கொண்டு ஒளிச்சேர்க்கை வேதிவினை மூலம், தாவரங்கள் உணவை (ஸ்டார்ச் -- Starch) தயாரித்துக் கொள்கின்றன. அவற்றுக்குத் தேவையான நைட்ரஜன் போன்ற தனிமங்களை, மண்ணிலிருந்து பெற்றுக் கொள்கின்றன.
மேகாலயா போன்ற பகுதிகளில் வாழும் 'நெபந்தஸ்' (Nepenthes) எனும் தாவரம், 'அசைவ' உணவு உட்கொள்ளும். மண் வளம் குறைந்து நைட்ரஜன் சத்துக் குறைவாக உள்ள பகுதியில் வளரும் சில தாவரங்கள், தமக்கு வேண்டிய நைட்ரஜனை பூச்சிகளை சுண்டியிழுத்து உணவாகப் பெற்றுக் கொள்கின்றன.
இந்தச் செடியில் குவளை போன்ற வடிவத்தில் ஓர் அமைப்பு இருக்கும். அது வெளியிடும் வாசனையில் சுண்டி இழுக்கப்படும் பூச்சிகள் குவளை போன்ற பகுதியில் உள்ளே நுழைந்ததும் குவளை மூடிக்கொள்ளும். குவளைக்குள் சிக்கும் பூச்சி ஜீரணமாகி அதிலிருந்து நைட்ரஜன் உட்பட பல்வேறு சத்துகளை அந்தத் தாவரம் பெற்றுக் கொள்கிறது.
உலகில் 600க்கும் மேற்பட்ட அசைவச் செடிகள் உள்ளன. சில அசைவத் தாவரங்கள் சிறு எலி, தவளையைக் கூட உண்ணும். நீரில் வளரும் சில அசைவச் செடிகள் கொசுவின் லார்வாக்கள், சிறிய மீன்களைச் சாப்பிடும். ஆயினும் மனிதனைப் பிடித்துச் சாப்பிடும் மரங்கள், தாவரங்கள் எல்லாம் வெறும் கட்டுக்கதையே.

4. நீல நிறம் ஏன் சில நேரங்களில் பச்சை நிறமாகத் தெரிகிறது?
ஜெ.லட்சுமிதேவிப்ரியா, 12ம் வகுப்பு, கே.சி.ஏ.டி. பதின்ம மேல்நிலைப் பள்ளி, சாத்தூர்.

உங்கள் வண்ணப் பெட்டியிலிருந்து கொஞ்சம் நீலம், அதே அளவு மஞ்சள் நிறத்தை எடுத்துக் கலந்து பாருங்கள். இரண்டும் சேர்ந்து பச்சை நிறம் ஏற்பட்டு விட்டதா? ஏன் பச்சை நிறம் ஏற்பட்டது? நீல நிற ஒளி, மஞ்சள் நிற ஒளியின் கலவையே பச்சை நிற ஒளி. நீல நிறப் பொருளில் படும் வெள்ளை ஒளியில் மற்ற எல்லா நிறங்களும் கிரகிக்கப்பட்டு வெறும் நீல நிற ஒளி மட்டுமே பிரதிபலிக்கப்படும். அதேபோல மஞ்சள் பொருள், மஞ்சள் நிற ஒளியை மட்டுமே பிரதிபலிக்கும். இந்த இரண்டு நிற ஒளியின் கூட்டு பச்சை.
குண்டு பல்பு போல மஞ்சள் நிற ஒளியை உமிழும் விளக்கு ஒளியில் நீல நிறப் பொருளை வைத்துப் பாருங்கள். அது பச்சை நிறமாக காட்சியளிக்கும். அதேபோல நீலநிற ஒளியில் மஞ்சள் பச்சை நிறமாகத் தென்படும். மஞ்சள் ஒளியில், மஞ்சள் பொருள் வெள்ளை நிறமாகத் தென்படும்! நிறக்கலவையின் வினைதான் இவை.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement