Advertisement

இதயத் திருடி...

படைப்பு: என்ன சொல்கிறாய் சுடரே
விலை: ரூ.200
பதிப்பகம்: உயிர்மை 044 - 2499 3448


ராமகிருஷ்ணன் எழுதிய 'உனக்கு 34 வயதாகிறது' கதையில வர்ற சுகந்தி என் இதயத்தை திருடிட்டான்னு சொன்னா, அது என் இதயத்தை நானே திருடிக்கிட்டேன்னு தான் அர்த்தமாகும். ஏன்னா, நானும் சுகந்தியும் உடலால இரண்டு பேரா இருக்கலாம். ஆனா, பெண்ணுங்கற விதத்துல நாங்க ஒண்ணு!
இன்னும் விளக்கமா சொல்லணுமா?
'உனக்கு 34 வயசாச்சு, நினைவிருக்கில்லே?' என்று அப்பா அவளிடம் கேட்டபோது, சுகந்தி அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தாள். சற்று ஆத்திரத்துடன் தலையைத் திருப்பி அப்பாவை பார்த்து முறைத்தபடியே, 'அதுக்கு என்ன?' என்றாள்.
இதுதான், எனக்கும் சுகந்திக்குமான முதல் பொருத்தம்.
சுகந்தி மாதிரியே எனக்கும் திருமணம் ஆகலை அல்லது நாங்க பண்ணிக்கலை. ஆனா, இந்த வயசும், திருமணம் ஆகாத நிலையும் எங்களுக்கு பெரும் சுமையா இருந்தது.
ஆண்களின் நாற்பது வயதும் பெண்களின் நாற்பது வயதும் ஒன்று போல கருதப்படுவதில்லை.
ஆண்களுக்கு நாற்பது வயதாகும் போதுதான், ஆசைகளும் சுகம் தேடுதலும் அதிகமாகின்றன.
பெண்களுக்கு நாற்பது வயதில் ஆசைகள் வடிந்து போகத் துவங்கி தனித்து இயங்குவதிலும், சுதந்திரமாகச் செயல்படுவதிலும் ஆர்வம் வருகிறது!
எல்லாம் சரிதான். ஆனா, முப்பது வயசைக் கடந்தும் திருமணம் ஆகாம இருக்குற பெண்ணுக்கு குடும்பமும் சமூகமும் கொடுக்கிற அழுத்தம் இருக்கே, அப்பப்பா... அது பெரும் கொடுமைடா சாமி!
சுகந்தி ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் தங்கியிருந்தாள். அவதூறுகள், வீண்வம்பு, திருட்டு என எல்லாமும் அந்த ஹாஸ்டலில் இயல்பாக இருந்தன. அவள் அறையில் இருந்த பெண்களில் ஒருத்தி, சுகந்தி காதுபடவே 'எக்ஸ்பயரி டேட் முடிஞ்ச கேஸ்' எனச் சொன்னாள்.
அதன்பின், சுகந்தி தனியே ஒரு அபார்ட்மென்ட் எடுத்து வாழ ஆரம்பித்தாள். குடிவந்த சில நாட்களிலேயே, தனித்து வாழும் பெண் என்றால் யார் வேண்டுமானாலும் கதவைத் தட்டலாம் என நினைக்கும் ஆண்களை அறியத் துவங்கினாள்!
ம்ஹூம்... என்ன சமூகம் இது! இந்தமாதிரியான அழுத்தங்கள் என் சுகந்தியை எந்த நிலைமைக்கு இட்டுச் சென்றது தெரியுமா?
சுகந்தி திடீரென ஒரு விளையாட்டை கண்டுபிடித்தாள். அந்த வீட்டில் அவளுக்குப் பிடித்தமான ஒரு ஆண், இரண்டு குழந்தைகள், விருப்பமான ஒரு கிளி இருப்பதாக கற்பனையாக நினைத்துக் கொண்டாள். வீட்டின் கதவை பூட்டி அவர்களுடன் தனியே பேச ஆரம்பித்தாள். தனது பிள்ளைகளுக்கு கதை சொன்னாள்.
வீட்டில் எப்போதும் அவளுக்கான மனிதர்கள் இருக்கின்றனர் என நம்ப ஆரம்பித்தாள். நாட்கள் செல்லச் செல்ல, தான் ஆடுவது விளையாட்டல்ல; உண்மை என உணரத் துவங்கினாள்.
ஒருநாள் பேருந்தில் தனக்குத் தானே சுகந்தி சிரித்துக் கொண்டாள். சட்டென அது அவளுக்கு அபத்தமாகத் தோன்றியது. தன்னை மீறி அழத் துவங்கினாள். பேருந்தில் அத்தனை பேர் முன்னாலும் தான் அழுவதைப் பற்றி அவள் கவலைப்படவே இல்லை.
பாவம் சுகந்தி! ஏங்க... இங்கே ஒரு பெண் திருமணம் பண்ணிக்காம வாழ்றது அவ்வளவு பெரிய குற்றமா?

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement