Advertisement

ரௌத்ர வீணை!

தமிழக முதல்வர் பழனிசாமிக்கு,
வணக்கம். நான் எழிலரசி. தீவிரவாதிகள் தாக்குதல்ல பலியான துணை ராணுவப் படை வீரர் சங்கரோட மனைவி. எங்களை உங்களுக்கு ஞாபகம் இருக்குதா?
சத்தீஸ்கர்ல இருந்து மார்ச் 11ம் தேதி கடைசியா அவர் என்கூட போன்ல பேசுறப்போ, பையனோட முதல் பிறந்தநாளுக்கு ஊருக்கு வரணும். பொண்ணை
ஸ்கூல்ல சேர்க்கணும்னு ஆசையா சொன்னாரு. ஆனா, அன்னைக்கு மதியமே அவரோட இறப்பு செய்தி வந்திருச்சு. அன்னைக்கு நடந்த நக்ஸல் தாக்குதல்ல பலியான 12 வீரர்கள்ல இவரும் ஒருத்தர்.
அஞ்சலி செலுத்த வந்த உங்க அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கொடுத்தாங்க. அதுக்கு பெரிய
நன்றி! ஆனா, இது என் குழந்தைகளோட எதிர் காலத்துக்கும், என் கணவரோட மறைவுக்கும் ஈடாகாது.
இது சம்பந்தமா சட்டமன்றத்துல எங்க தொகுதி எம்.எல்.ஏ., பொன்முடி சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம்கொண்டு வந்தப்போ, எங்களுக்கு நிதி உதவி வழங்கின விஷயத்தை நீங்க சொன்னீங்க.
கூடவே, 'பணியின் போது உயிர் நீத்த அல்லது உடல் ஊனமடைந்த தமிழக ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும், தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது கொல்லப்பட்ட அல்லது ஊனமடைந்த வீரர்களின் வாரிசுகளுக்கும், கருணை அடிப்படையில் தமிழக அரசு வேலைவாய்ப்பு வழங்குகிறது'ன்னும் சொன்னீங்க!
துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையோட என் கணவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டப்போ, தேசத்துக்காக வீர மரணம் அடைஞ்ச
வரோட மனைவிங்கிறதுல ரொம்ப பெருமையா இருந்தது. ஆனா, இந்த தேசம் எங்களை உதாசீனப்படுத்துறப்போ வெட்கமா இருக்கு!
'குடிசை வீட்டில் வசித்து வரும் ராணுவ வீரரின் குடும்ப ஏழ்மை நிலை கருதி, பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு வழங்க ஆட்சியருக்கு உத்தரவிடப்
பட்டுள்ளது'ன்னு உங்க சட்டத்துறை அமைச்சர் சொன்னதா, மார்ச் 24ம் தேதி பேப்பர்ல படிச்சப்போ மனசுக்கு நிம்மதியா இருந்தது. ஆனா, இப்போ வரைக்கும் ஏமாற்றம் தான்!
ஆட்சியர்கிட்டே ரெண்டு தடவை மனு கொடுத்துட்டேன். முன்னாள் படை வீரர் நலத்துறைக்கு பரிந்துரைக்கிறதா சொன்னவர், 'கருணை அடிப்
படையில வேலைவாய்ப்பிற்கு வழியில்லை'ன்னு அவங்க அனுப்புன பதில் கடிதத்தை என்கிட்டே கொடுத்துட்டாரு. உங்க தனிப்பிரிவுலேயும், ஜூன் மாசம் மனு கொடுத்துட்டு வந்தேன். ம்ஹும்...!
அய்யா... தேசத்துக்காக உயிரைக் கொடுத்தவர் குடும்பத்துக்கு நல்ல மரியாதை கொடுக்குறீங்கய்யா; ரொம்ப சந்தோஷம்!
- நக்ஸல்களின் கண்ணிவெடி தாக்குதலில் பலியான துணை ராணுவப் படை வீரர் சங்கரின் மனைவி எழிலரசி, திருக்கோவிலுார், விழுப்புரம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement