Advertisement

பெண்மை என் பெருமை

வ்ரூம்... வ்ரூம்... வ்ரூம்... பெரும் சத்தத்துடன் பின் சக்கரங்கள் சுழன்று தேய்கின்றன. அடுத்தடுத்து தயாராய் நிற்கும் போட்டியாளர்களை மறைக்கத் துவங்குகிறது கரும்புகை. வலது கை பிரேக்கிற்கு விடுதலை தந்து ஆக்ஸிலேட்டரை முறுக்க, ஒளிக்கீற்றென சீறிப் பாய்கின்றன இருசக்கர வாகனங்கள்.

காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் 'மெட்ராஸ் மோட்டார் ரேஸ் ட்ராக்'கில், சக போட்டியாளர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி முன்னேறுகிறது, 2ம் எண் பைக்! சரேலென்று வளைவொன்று குறுக்கிட, பைக் தன் கட்டுப்பாடு இழந்து, நிலைகுலைகிறது. ஒன்று... இரண்டு... மூன்று... நான்கு என அடுத்தடுத்த குட்டிக்கரணங்களுக்குப் பின், பைக் சிதைந்து அமைதியாகிறது. அதை ஓட்டி வந்தவரின் நிலை?
'நானும் என் பைக்கும் பல்டி அடிச்சது மட்டும் தான் நினைவுல இருக்கு. அதுக்கப்புறம், கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் என்ன நடந்துச்சுன்னே எனக்குத் தெரியலை.
சுயநினைவை இழந்துட்டேன். இந்த துறையில சாதிக்கணும்னு, 18 வயசுல கிளம்பினதுக்கு அப்புறம், இந்தமாதிரியான காயங்கள், வலிகள் எல்லாம் ரொம்பவே சகஜமாயிடுச்சு!' - கெத்து காட்டுகிறார், 24 வயது சிண்டி!

உங்களைப் பற்றி...
நான் பக்கா சென்னை பொண்ணு. அப்பா, அம்மா வைச்ச பேரு சவுந்தர்யா. செல்லமா கூப்பிடுறதுக்காக இந்த சிண்டி! என் காதல் கணவர் ஆனந்தும் பைக் ரேஸர் தான். 8 தேசிய விருதுகள் வாங்கியிருக்கார். எங்க பையன் சவ்ரஜ் ரியானுக்கும் பைக் மேலே ஆசை அதிகம். அதனால, அவனுக்கும் '50சிசி'யில ஒரு பைக் வாங்கிக் கொடுத்திருக்கோம். ரியானுக்கு இரண்டு வயசு தான் ஆகுதுங்கிறதால, இப்போதைக்கு அப்பாவோட தயவுல தான் பைக் ஓட்டிட்டு இருக்குறான்!
சிண்டி பயன்படுத்தும் பெரும்பாலான பைக்குகளின் உயரத்திற்கு, அவரது கால் தரை தொடாது என்றாலும், எல்லா வகையான பைக்குகளையும் அடக்கியாளும் லாவகம் கற்றிருக்கிறார். இதனால், அடுக்கி வைக்க இயலாத அளவில் வீட்டில் குவிந்து கிடக்கின்றன தேசிய அளவில் பெற்ற வெற்றி பதக்கங்களும், கோப்பைகளும்!

மனைவி, அம்மா - பைக் தொடும் போது இந்த பொறுப்புகள் பயம் தரலையா?
கண்டிப்பா பயம் இருக்கு. ஆனா, என் இலக்குக்கு அந்த பயம் தடையா இல்லை. இன்னும் சொல்லப்போனா, ரேஸ் பாதை மேலே இருக்கிற என் கவனத்தை கூர்மையாக்குறது இந்த பயம் தான். அதேசமயம், தேவை இல்லாத அச்சங்கள் வாழ்க்கையோட நிம்மதியை கெடுத்திடுங்கிறதும் எனக்குத் தெரியும். 'இது ஆண்களுக்கான பந்தயம். இங்கே நாம எப்படி சாதிக்கப் போறோம்!'னு நான் பயந்திருந்தா, இந்த சாதனைகள் சாத்தியமாகி இருக்காது!

'இவையெல்லாம் ஆண்களுக்கானவை' - இந்த போலி பிம்பம் பற்றி...
என்னோட துறை உட்பட எல்லா இடங்கள்லேயும் இந்த பிம்பம் இருக்கு. இப்படி ஒரு பிம்பம் ஏற்பட நம்ம சமூகம் தான் முக்கிய காரணம்! இங்கே, ஒரு ஆணுக்கு எல்லாவிதமான சுதந்திரமும் இருக்கு. ஆனா, குறிப்பிட்ட ஒரு வட்டத்துக்குள்ளே மட்டுமே பெண்கள் சுதந்திரமா இருந்துக்கணும். என்னங்க நியாயம் இது? இந்த உலகத்துல முயற்சி செய்து தோற்றுப் போனவங்களை விட, முயற்சி செய்யக்கூட வாய்ப்பு கிடைக்காம தோற்ற பெண்கள்தான் அதிகம். இதுக்கு காரணம் இந்த போலி பிம்பம்!
'பெண்ணுக்கு ஏன் இந்த அனாவசிய வேலை; அடுத்த வீட்டுக்கு வாழப் போறவளுக்கு இதெல்லாம் தேவையா?'ன்னு பெண்களை மட்டம் தட்டாம, 'உன்னால முடியும்'னு அவங்க முயற்சிகளுக்கு ஊக்கம் தந்தா, பாரதி ஆசைப்பட்ட புதுமை பெண்களா மாறுறதுக்கு எல்லா பெண்களும் தயார்!

வேகம் நிரம்பிய பயணம் ரசனைக்குரியதா?
நிச்சயமா கிடையாது! வேகம் பயணத்தை ரசிக்க விடாது. அதனால தான், பந்தய தளம் தவிர்த்து வேற எங்கேயும் நான் அதை விரும்புறது இல்லை. 'நீயா, நானா'ன்னு போட்டிப் போட்டு நம்ம கூடவே பயணிக்கிற மலைகள்; 'என்னை பிடி பார்ப்போம்'ன்னு வித்தை காட்டுற கானல் நீர்; மனிதர்களோட ஓய்வுக்காக குடை பிடிச்சு நிற்கிற மரங்கள்னு பயணம் ரொம்பவே அழகானது! முயற்சிகளுக்கும், சாதனைகளுக்கும் முடிவு கிடையாதுன்னு எனக்கு கத்துக் கொடுத்ததும், இருள் போர்த்தியிருக்குற சாலைகள் மேல தன்னந்தனியா தயங்கி நின்ன சமயங்கள்ல, எனக்குள்ளே தைரியம் விதைச்சதும் பயணங்கள் தான்!
தற்போது, சர்வதேச பெண்கள் பைக் பந்தயத்திற்கு தயாராகி வரும் சிண்டி, கடந்த 2013ம் ஆண்டு முகநூலில், 'பைக்கர்ஸ் பேப்ஸ்' எனும் பக்கம் ஒன்றை துவக்கியிருக்கிறார். இரண்டு பெண்களுடன் துவக்கப்பட்டு, இன்று பலரை உறுப்பினர்களாக கொண்டிருக்கும் இக்குழு, பைக் ஓட்டும் பெண்களை பந்தய வீராங்கனைகளாக மாற்றுவதற்கான பயிற்சியினை அளிப்பதோடு, ரத்த தானம், முதியோர்களுக்கு உதவி உள்ளிட்ட பொதுச்சேவைகளையும், விழிப்புணர்வு பேரணிகளையும் மேற்கொண்டு வருகிறது!
'பைக் தவிர்த்து எனக்கு பிடிச்ச விஷயம்னா, அது விவசாயம் தான்!' எனச் சொல்லும் சிண்டி, ஊட்டியில் இயற்கை விவசாயமும் மேற்கொண்டு வருகிறார்.

சிண்டியின் புதுப்புது அர்த்தங்கள்!

பெண்: தன் உடல் வருத்தி உயிர் கொடுக்கும் கடவுள்!
ஆண்: பெண்மையை கவுரவப் படுத்தி கம்பீரம் பெறும் உயிர்!
தாய்: 'தனக்குப் போகத் தான்' என்பதில் துளியும் உடன்பாடில்லா ஜீவன்!

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement