Advertisement

ஆச்சி!

திண்ணையில் கால் நீட்டி அமர்ந்திருந்த ஆச்சியின் பக்கத்தில் வந்து, ''வள்ளியம்மை ஆச்சி எப்படி இருக்கீக...'' என்று கேட்டு, ஆச்சியை கட்டிக் கொண்ட கண்ணாத்தாளை பார்த்ததும், ஆனந்தத்தில் கண்ணீர் வந்தது வள்ளியம்மைக்கு!
பளபளத்த கட்டம் போட்ட சுங்கிடி சேலையும், கழுத்தில் ஜொலித்த சிவப்பு கல் அட்டிகையுமாய், இந்த வயசிலும், அம்சமாய் இருந்தாள், வள்ளியம்மை ஆச்சி.
கண்ணாத்தா போட்ட சத்தம் கேட்டு, பொன்னாத்தா, முத்து மீனாள் என்று, எட்டு கட்டு வீடுகளில் இருந்து, பெண்களின் தலை எட்டிப் பார்த்தது.
'அடி ஆத்தி... எங்க ஆச்சி வந்துட்டாக, வாங்கடி...' என்று ஓட்டமும், நடையுமாய் ஓடி வந்த பெண்களைப் பார்த்து, வள்ளியம்மையின் மனசு, தாமரையாய் மலர்ந்தது.
'என்ன உத்திரத்துக்கு வந்தீகளா...' என்று வள்ளியம்மையின் கைப்பிடித்து கேட்டனர், பெண்கள்.
''அதுக்குந்தேன்,'' என்று, பூடகமாய் சிரித்த ஆச்சி, ''ப்ரியா...'' உள்ளுக்கு திரும்பி குரல் கொடுத்தாள்.
வெளீர் மஞ்சள் சுடிதார் அணிந்து, தலைமுடியை காற்றில் பறக்க விட்டபடி, உள்ளிருந்து வந்தாள், ஒரு இளம் பெண்.
திண்ணையில் அமர்ந்திருந்த பெண்களை, மிரட்சியாய் பார்த்து, ''சொல்லுங்க பாட்டி...'' என்றாள்.
''ஆச்சி, யார் இவுக...'' மெதுவாய், ஆச்சியின் காலை சுரண்டினாள், பொன்னாத்தாள்.
''இது ப்ரியா... என் பேரன் சுப்ரமணியன கட்டிக்கப் போற பொண்ணு; என் பேரம்பிண்டி.''
''ஆத்தாடி... என்ன சொல்லுறீக... கிட்டிப்புல் ஆடி, எங்க அப்புச்சி மண்டைய உடைச்சுப்புட்டு, நாங்க அடிச்சிபுடுவோம்ன்னு பயந்து, கம்மாக் கரையில போய் படுத்து அழிச்சாட்டியம் செய்த நம்ம சுப்புரமணிக்கா கல்யாணம்... அதுக்குள்ள, அவருக்கு கல்யாணம் கேட்குதாக்கும்,'' பழைய சம்பவத்தை முத்துமீனாள் நினைவுபடுத்த, மற்றவர்கள் சிரித்தனர்.
ப்ரியாவுக்கு, இந்த ஊரும், அரண்மனையை ஒத்த செட்டி நாட்டு வீடுகளும், இங்குள்ள மக்களும், ஒருவரோடு ஒருவர் ஒன்றிணைந்த வாழ்வியலும் என, எல்லாம் புதுசாய் தோன்றியது.
''இவங் க ௌல்லாம், உங்க, 'ரிலேட்டிவ்'வா பாட்டி... ஐ மீன் சொந்தக்காரங்களா...''
''மீனு, கரியெல்லாம் வேணாம்... எங்க ஆச்சிக்கு நல்லா இங்கிலீஸ் தெரியும். தேவகோட்டை பள்ளிக்கூடத்துல, எட்டாவது வரை படிச்சிருக்கு; கட்டபொம்மன் படம் பாக்கிறப்போ, ஜாக்சன் துரை என்ன பேசுறான்னு, எங்க ஆச்சி தான் எடுத்து சொல்லும்,'' என்று, கண்ணாத்தா சொன்னதும், ஆச்சி வெட்கத்தில் நெளிய, கூட்டத்தில் சிரிப்பு அடங்க, வெகு நேரமானது.
''ப்ரியா கண்ணு... தோ, பொன்னாத்தா எங்க அண்ணமிண்டியோட, அண்ணன் பேத்தி; முத்து மீனா எங்க ஒண்ணுவிட்ட அம்மானோட சின்ன மருமக; கண்ணாத்தா எங்க சொந்த அயித்தையோட, மகமிண்டியோட அக்கா பேத்தி... அத்தனையும் நெருக்கமான சொந்தம்,'' என்றாள் வள்ளியம்மை.
''ஓ மை காட்...'' கருங்கல்லில், சோழியை உருட்டியது போல் சிரித்தாள், ப்ரியா.
''பாட்டி... இவ்வளவு தூரத்து உறவா... நான் கூட ரொம்ப,நெருங்கிய சொந்தம்ன்னு நினைச்சிட்டேன்,'' என்றாள் அடக்க முடியாத சிரிப்புடன்!
சுற்றியிருந்த பெண்களின் முகம், வாடிப் போனது.
''ப்ரியா கண்ணு... அண்ணமிண்டியோட அண்ணன், எனக்கு கொழுந்தனாரு முறை... அவுக பேத்தி, எனக்கு பேத்தி தான்; எங்க அம்மானோட மருமக, எனக்கும் மருமக தானே... அயித்தையோட மகமிண்டியோட அக்கா, எனக்கு அக்கா முறை, அவ பேத்தி எனக்கும் பேத்தியாகுது... இதுல, எங்கன தூரம், பக்கம்ன்னு வருது,'' என்றாள்.
ஆச்சியின் விளக்கத்தில், அசந்து போனாள், ப்ரியா; பெண்களின் முகத்திலும், பழைய மகிழ்ச்சி திரும்பியது.
''பாட்டி... உங்ககிட்ட பேசி ஜெயிக்க முடியாது,'' என்று எழுந்து உள்ளே போனாள், ப்ரியா.
''ஆச்சி... பொண்ணு யாரு... நம்ம சனமா?''
''அடி ஆத்தி... என்ன இப்படி கேட்டுபுட்டே... எம் மகமிண்டி மீனாட்சியோட அண்ணன், மலேசியாவுல இருக்காகல்ல... அவுக பொண்ணு அதான், அந்த காரைக்குடிக்காரர் நினைவு இருக்கா... அவுக பொண்ணு தான் இது. எல்லாரும் தான் வந்திருக்கோம். பொங்க வச்சு, பூசை முடிஞ்சதும், புள்ளி கட்டிட்டு, புள்ளைங்க கல்யாணத்துக்கு, குலதெய்வம் கோவில்ல ஒப்புதல் வாங்கிட்டு போயிட்டா, நல்ல விஷயத்தை நடத்திப்புடலாம்.''
''என்ன ஆச்சி... இப்படி வெவரம் இல்லாம பேசறீக... ஊரையும், உறவையும் திரட்டி, வாரக் கல்யாணம் செய்றது தான மொறை... நீங்க பாட்டுக்கு, சாமிகிட்ட ஒப்புதல் கேட்டுட்டு கிளம்பி போயிட்டா, வளவினரு, பங்காளி மனுசங்க எல்லாரும் சும்மா இருப்பமா... குன்றத்தூர் கோவில்ல தான், நம்ம விசேஷம் எல்லாம் முடிவு செய்றது,'' உரிமையாய் சண்டை போட்ட முத்து மீனாளை பரவசமாய் பார்த்தாள், ஆச்சி.
''வாஸ்தவந்தேன்; யாரு இல்லன்னு சொன்னது... ஆனா, காலம் முன்ன மாதிரி இல்லயே மீனா... நீ பாத்த சுப்ரமணியப் பய இல்ல; அவுக இப்ப வருவாக... வந்ததும், உன்னை வந்து பாக்க சொல்றேன். ஐ.டி.,யோ, குய்டியோ என்னமோ சொல்றாக... அதுல பெரிய ஆபீசராம் எம் பேராண்டி. நம்பள மாதிரியே, அவனுக்கும் பழக்கவழக்கம் ஜாஸ்தி; அதனால, கல்யாணத்த சென்னையில தான் வைக்கணும்ன்னு நிக்கறாக; லட்ச ரூபா கட்டி, மண்டபம் புடுச்சாச்சு,'' என்றாள், ஆச்சி.
''அடி ஆத்தி ஒரு லட்சமா...'' வாய் பிளந்தனர்.
''அடி இவளே... இதுக்கே வாயைப் பிளந்தா எப்படி... காதை கொண்டா... என் பேராண்டிக்கு மாச சம்பளம் அதைவிடவும் கூட,'' ஆச்சி பேரனின் சம்பள பெருமை பேச, பிளந்த வாய் மூடாமல் நின்றனர், பெண்கள்.
''ஏன் ஆச்சி... தெக்குத்தி கருப்பட்டி மாதிரி, இனிக்க இனிக்க பேசுதீகளே... எனக்கு தான் ஒரு மாச சம்பளத்தை வாங்கி தர்றது... எங்க மானா குனா வீட்டுக்கும், உங்கள் ருனா சானா வீட்டுக்கும் தான், வரப்புக்கும், ஆத்துக்கும் உள்ளதாட்டம் உறவு இருக்குதே... அஞ்சு வட்டிக்கு விட்டா, வருஷத்துல எம்புட்டு வருமானம் பாக்குறது... ஏன் எனக்கு குடுக்க மாட்டாரா தொரை... ஞாயத்துக்கு என் மவளைத்தான அவுக கட்டிகிடணும்; அக்கறை சீமையில இருந்து வந்ததும், அம்மானுக்கு அயித்தை மவள புடிக்கலயாக்கும்,'' சிலுப்பிய கண்ணாத்தாளைப் பார்த்து, எல்லாரும் சிரிக்க, அந்த சிரிப்பில் ஆச்சியும் ஐக்கியமானாள்.
''இதுல மட்டும் உறவுக்கதை பேசுடீ... ஆச்சி வீட்டை விட்டுட்டு போனாகளே, அடிக்கடி வந்து தொறந்து பாப்போம்; கூட்டி, மொளுகிட்டு போவோம்ன்னு செஞ்சியா நீ... அப்படியே, கெணத்துல, ரெண்டு வாளி தண்ணிய இறைச்சு ஊத்தினா ஆகாதாக்கும்... கெணத்தை இறைக்காம விட்டா, குடும்பம் விருத்தி ஆகாதுடி,'' விசனப்பட்டாள் ஆச்சி.
''என்ன இப்படி பேசிப்புட்டீக... நான் எங்க ஆச்சி, இங்க இருக்கேன்; மதுரையில, மகன் வீட்டோட போயாச்சு; என்னைய விடுங்க... த இங்கின நிக்கறாளுகளே இவுளுக யாருமே இங்கயில்ல. மகன் வீடு, அங்கயிங்கன்னு எல்லாரும் போயாச்சு; உங்கள மாதிரிதான் பூசம், உத்திரம், ஜாத்திரை, திருவிழான்னா புள்ளிகட்ட நம்ம சனங்க வருது... அப்ப, ஒருத்தரை ஒருத்தர் பார்த்து, மனசார பேசிக்குறோம்.
''இனி, எப்ப வந்தாலும், கெணத்துல தண்ணி இறைச்சுட்டு, வீட்டை மொளுகிட்டு போறேன்... இதாரு வீடு, எங்க சின்ன அப்புச்சி வீடு தானே... சானா சண்முகம் செட்டினா சும்மாவா... எங்க சின்ன அப்புச்சி அப்படிப்பட்ட தர்மவான்,'' என்று கூறி கண்ணாத்தா சிலிர்க்க, ஆச்சியின் கண்ணில், இரண்டு சொட்டு கண்ணீர் எட்டிப் பார்த்தது.
அவர்களுடைய பேச்சும், விவாதமும், சிரிப்பும், நினைவுகளும் வெகு நேரம் நீடித்தது; படிக்கல் சூடேறியதும், அவரவர் வீட்டிற்கு சென்றனர்.
''என்ன ப்ரியா... வீடெல்லாம் சுத்தி பாத்தியா... என்னதேன் நீ செட்டிநாட்டு வீட்டுல பெறந்தாலும், நீ வளர்ந்தது எல்லாம் மலேசியாவுல தான... உனக்கு இந்த வீடும், வாசலும் புதுசா தான தெரியும்,'' என்றாள், ப்ரியவின் தலையை வாஞ்சையாய் வருடியபடி ஆச்சி.
''பாட்டி... இதை வீடுன்னா, சென்னையில இருக்கிற நம்ம வீட்டை என்ன சொல்றது... ஆனாலும், இந்த அரண்மனை எல்லாம் டூ மச் -பெரிசு; ஒவ்வொரு வீட்டுலயும், 100 பேர் இருந்தாலும், ஒரு மூலைக்கு கூட போதாது போல இருக்கே,'' என்றாள், வியப்பில் விழிகள் விரிய!
பெருமூச்சு வந்தது ஆச்சிக்கு!
கண்ணுக்கெட்டிய வரை வரிசையாக இருக்கும் தூண்களில், அழகாய் தீட்டப்பட்ட வண்ணப்பூச்சை ஆசையாய் தடவி பார்த்தாள், வள்ளியம்மை ஆச்சி.
முன் கட்டு தூண்களுக்கு மட்டும், அறுபது பட்டா வண்ணம் பிடித்தது. எத்தனை ஆசையாய் கட்டி, காப்பாத்திய வீடு!
சட்டென்று தூணில் சாய்ந்து, விசும்பி அழ ஆரம்பித்ததாள், ஆச்சி.
பதறிப்போய் ஓடி வந்தாள் ப்ரியா.
''என்னாச்சு பாட்டி; எதுக்கு அழுறீங்க?''
தன்னை ஆசுவாசப்படுத்தி, முந்தானையில் முகம் துடைத்த ஆச்சி, ''ஏதோ பழைய நினைப்பு; ஆனா, அது தந்த சந்தோஷம், இன்னும் துளி கூட குறையாம, என் நெஞ்சுக்கூட்டில் பத்திரமா இருக்கு... தோ, அந்த தூணை ஒட்டித்தான் உங்க தாத்தன், அதான், சுப்பிரமணியோட அப்புச்சி... கல்லா பெட்டிய போட்டுகிட்டு, லேவாதாவி பாப்பாக...
''அங்கன இருக்கே மச்சு, அதுல தான் பித்தளை சாமானா போட்டு, அடுக்கி வச்சிருப்போம். எங்க பெரிய ஆச்சி, அடகு புடிக்கிறதுல பெரிய காசு பாத்த மனுசி. அடகு புடிச்ச பாத்திரத்தை மீட்டுப்போக வராட்டி, அப்படியே, பொருளை அமுக்கிகிட நெனைக்காம, அந்த பொருளுக்கு உரியவங்க வீட்டில, நல்ல காரியம் நடக்கையில, அந்த பொருளை, மொய்யா எழுதிட்டு வந்திரும் எங்க ஆச்சி, அத்தனை இளகின மனசு.
''அங்க பூட்டி கெடக்கே... அதுதான் நெல் அவிக்கிற வீடு; நெல் அவிக்கும் போது ஒரு மணம் வரும் பாரு... உனக்கெல்லாம் அது தெரிய நியாயமில்ல... இதை, வெறும் வீடுன்னு சொல்லி, வாழ்க்கையை பிரிச்சுட முடியாது. இதெல்லாம், எங்க வாழ்க்கை; உசிரு; எங்களோட பரந்த மனசு. ஒவ்வொரு முறையும் வந்து போறப்போ, புதுசா பொறக்குற மாதிரியும், பொறந்ததும், இறக்குற மாதிரியும் இருக்கும்,'' கண்ணீர் வழிய உணர்வு கொட்டிய ஆச்சியை, மென்மையாய் பார்த்தாள், ப்ரியா.
''பாட்டி நான் தெரியாமத்தேன் கேட்கறேன்... இந்த வீட்டு மீதும், ஊர் உறவுகள் மேலயும் இவ்வளவு பாசம் வச்சிருக்க நீங்க, கொஞ்சம் கூட விருப்பம் இல்லாம, சென்னையில, மாமா வீட்டுல போய் ஏன் இருக்கீங்க... நான், அங்க வந்தப்ப எல்லாம் பாத்திருக்கேன்; உங்களுக்கும், அத்தைக்கும் ஒத்து வராத நிலையில தேவையில்லாம, அந்த வீட்டுல ஏன் கஷ்டப்படணும்... நீங்க இங்கயே இருக்கக் கூடாதா...''
பேத்தியின் முகத்தை, வாஞ்சையாய் வருடி, ''அம்மாடி... பட்டணத்துல மனுஷங்க நெறஞ்சு, நிக்க கூட நிழல் காலியாயில்ல; ஆனா, நம்ம செட்டி நாட்டுல, பேறு பெத்த அரண்மனைக இருக்கு, குடியிருக்க ஆளில்லாம! இதுதான் இப்ப இருக்கிற நிஜம். இதுக்கு அர்த்தம், இங்குள்ள மனுஷங்க எல்லாருக்கும், பட்டணத்து மோகம் வந்து போயிட்டாகன்னு அர்த்தம் இல்லடி அம்மா... தனிமையும், முதுமையும் மெரட்டுது எங்களை!
''அதனாலதான் கட்டியாள அரண்மனை இருந்தாலும், மகமிண்டி, கா வயத்து கஞ்சியை வஞ்சுகிட்டு ஊத்தினாலும், பரவாயில்லன்னு புறப்பட்டுட்டோம். ஒவ்வொருமொறை பாக்கும் போதும், நாங்க எல்லாரும் இப்படித்தான் மனசுவிட்டு கலந்துக்குவோம். யாரு கண்டா, அடுத்தமொறை பாக்குற வாய்ப்பு, யாருக்கெல்லாம் கிடைக்குதோ, இல்லயோ... வரும் போதெல்லாம், இந்த வீட்டில், உங்க தாத்தன், என்னை ராணியா வச்சு வாழ்ந்த நினைப்பு மனசை தாலட்டும்; திரும்பி போகும் போது, அந்த நினைப்பை, இங்க இருக்கிற தூணில பத்திரமா கட்டி போட்டுட்டு போயிருவேன்; ஒருவேளை, அடுத்த மொறை வந்தா வேணுமுல...''
ஆச்சி வாய் விட்டு சிரிக்க, அந்த சிரிப்பை மீறிய வலி, முகத்தில் தென்பட்டது. பாட்டியை கட்டிக் கொண்டாள், ப்ரியா.
வசதிகளை உதறி,அரவணைப்பை மட்டுமே தேடி ஓடுகிற அந்த ஜீவனை, வலிக்காமல் வாழ வைப்பது தான், ஒரே பிரதி உபகாரம் என்பது, அவளுக்கு புரிந்தது!

எஸ்.மானசா

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement