Advertisement

தி்ண்ணை!

மறைந்த கவிஞர் வாலி ஒரு கட்டுரையில் எழுதியது: எம்.ஜி.ஆர்., நடித்த, அரச கட்டளை படத்தில், நான் பாட்டு எழுத வேண்டிய ஒரு காட்சியை, விளக்கினார், இயக்குனர் கே.சங்கர்.
சர்வாதிகாரி ஆட்சி நடத்தும் ஒரு மன்னன், மக்களை கொத்தடிமையாக்கி, அவர்களை, தன் விருப்பத்திற்கு ஏற்ப, இயங்க வைக்கிறான்.
தன் குழுவினருடன் ஆடி, மக்களை மகிழ்விக்கும் ஒரு நடன மாதுவால், தன்மான உணர்வு பெறுகின்றனர், மக்கள். இதை அறிந்த மன்னன், அவளை ஆடக்கூடாது என, உத்தர விடுகிறான். அவள் அச்சத்தை போக்கும் விதமாக, எழுச்சி பாடலை பாடி, மக்களிடம் விடுதலை வேட்கையை விதைக்கிறான், கதாநாயகன்.
உடனே நான், 'ஆண்டவன் கட்டளை முன்னாலே, உன் அரச கட்டளை என்னாகும்...' என, பாட்டின் பல்லவியை எழுதினேன்.
ஒரு வினாடி என்னை, உற்று நோக்கினார், எம்.ஜி.ஆர்., இயக்குனர் சங்கரின் முகமும் திடீரென இறுகியது. எப்போதும், என்னை, 'ஆண்டவனே...' என்று விளிக்கும்
எம்.ஜி.ஆர்., 'என்னங்க வாலி... உங்களுக்கு என்னை அவமானப்படுத்தணும்ன்னு எண்ணம் இருந்தா, அதை நேர்லேயே செய்யலாமே...ஏன் இப்படி பாட்டு எழுதி, ஏளனம் செய்றீங்க?' என்று கேட்டார்.
எம்.ஜி.ஆர்., இப்படி கேட்டதும் வேர்த்து, வெலவெலத்துப் போனேன். 'நீங்க என்ன பல்லவி எழுதியிருக்கீங்க... இந்த படத்துக்கு நான் என்ன பெயர் வச்சிருக்கேன்னு உங்களுக்கு தெரியுமா?' என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.,
'தெரியுமண்ணே... அரச கட்டளைன்னு வெச்சிருக்கீங்க...' என்றேன்.
'அரச கட்டளை நான் நடிக்கிற படம்; ஆண்டவன் கட்டளை சிவாஜி நடிச்ச படம். நீங்க என்ன எழுதியிருக்கீங்க... 'ஆண்டவன் கட்டளை முன், உன் அரச கட்டளை என்னாகும்ன்னு எழுதினா, சிவாஜி படத்துக்கு முன், உன் படம் என்னாகும்ன்னு கேக்குறதா அர்த்தம்...' என்று, படபடவென்று பொரிந்து தள்ளினார், எம்.ஜி.ஆர்.,
அப்படி தவறான அர்த்தத்தில் எழுதவில்லை என்று பலவாறு கூறியும், ஏற்காமல், அந்த பாட்டை, முத்துக்கூத்தன் என்ற பாடலாசிரியரை வைத்து, 'ஆடிவா ஆடிவா... ஆடப்பிறந்தவளே ஆடி வா...' என்று எழுத வைத்து, படமாக்கி விட்டார்.

சுதந்திர கட்சி தலைவர்களுள் ஒருவரான, எஸ்.எஸ்.மாரிசாமி எழுதிய, 'சுயராஜ்யம்' என்ற நூலிலிருந்து: கடந்த, 1962ல் நேருவை சந்திக்க டில்லி சென்றிருந்த காமராஜர், 'எங்கள் மாநிலத்தில், தி.மு.க., வலுவாகி வருகிறது. 1957ல் சட்டசபைக்கு, 15 இடங்களை பிடித்தனர். 1962ல் நடந்த தேர்தலில், 50 பேராக பெருகியிருக்கின்றனர். மற்ற எதிர்க்கட்சிகளும், கொஞ்சம் இடம் பிடித்திருக்கின்றன. இதே நிலையில் போனால், நம்மை மறந்து விடுவர், மக்கள். அதனால், என் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, கட்சி வேலை செய்யலாம் என்றிருக்கிறேன்...' என்றார்.
அப்போது, 'அவசரப் படாதீர்கள்...' என்று நேரு கூறினாலும், அதற்கு அடுத்த மாதம் ஐதராபாத்திற்கு வந்தவர், காமராஜரிடம், 'உங்கள் திட்டத்தை பற்றி யோசித்தேன்; அது, மிகவும் சிறப்பான திட்டம். சென்னைக்கு மட்டும் என்றில்லாமல், கட்சியின் மானத்தை காப்பாற்ற, ஆட்சியை விட்டு வெளியே வந்து, கட்சிப் பணி செய்ய வேண்டுமென்றும், இதற்கு, 'காமராஜ் திட்டம்' என்று சொல்லுங்கள். அப்புறம் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்...' என்றார் நேரு.
அன்றே பத்திரிகை நிருபர்களை அழைத்த நேருவின் காரியதரிசி, 'காமராஜ் திட்டம்' என்று ஒரு திட்டத்தை செய்தியாக, 'டைப்' அடித்துக் கொடுத்தார். மாநிலங்களிலும், மத்தியிலும் உள்ள அமைச்சர்கள் எல்லாம் ராஜினாமா செய்து, கட்சி வேலை செய்ய வேண்டும் என்பதாக, அந்த அறிக்கை அமைந்திருந்தது. மறுநாள், இந்தியாவில் உள்ள பத்திரிகைகள் எல்லாம், பெரிய தலைப்பு கொடுத்து, 'காமராஜ் திட்டம்' என்று செய்தி வெளியிட்டனர்.
காமராஜ் திட்டத்தின்படி, டில்லியில் உள்ள அமைச்சர்களும், மாநிலங்களில் இருந்த அமைச்சர்களும், ராஜினாமா கடிதங்களை நேருவிடம் கொடுத்தனர். நேரு என்ன செய்தார் தெரியுமா... ஆறு மாநில முதல்வர்களையும், மத்திய அமைச்சரவையில் இருந்த ஆறு அமைச்சர்களையும், முக்கியமாக, மொரார்ஜி தேசாயையும் இத்திட்டத்தின்படி வீட்டுக்கு அனுப்பி விட்டார்.
காமராஜ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவே, முதல்வராக நியமிக்கப்பட்டார், பக்தவத்சலம்.

நடுத்தெரு நாராயணன்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement