Advertisement

அன்புடன் அந்தரங்கம்!

அன்பு சகோதரிக்கு -
என் வயது, 45; இல்லத்தரசி. என் கணவர் வயது, 50; கார் கம்பெனி ஒன்றில், உயரதிகாரியாக பணிபுரிகிறார். எங்களுக்கு ஒரே மகள். வயது, 18; கல்லூரியில் படிக்கிறாள். அழகும், அறிவும் நிறைந்த அவளிடம் ஒரே ஒரு குறை உள்ளது. அது, எதற்கெடுத்தாலும் பொய் பேசுவது. அதுமட்டுமல்லாமல், சின்ன விஷயத்தை கூட, தன் கற்பனையை சேர்த்து பெரிதாக, 'பில்டப்' செய்து கூறுவாள்.
உதாரணத்துக்கு, அவள் பள்ளியில் படிக்கும் போது, உடன் படித்த தோழி ஒருத்தியை நாய் ஒன்று துரத்தியுள்ளது. அங்கிருந்தவர்கள் அதை விரட்டி, அவளை பத்திரமாக அனுப்பி வைத்துள்ளனர். அன்று மாலை, என் மகள் இதை விவரிக்கும் போது, நாய் அவளை விடாமல் துரத்தியதாகவும், அவள் ஒரு வீட்டின் காம்பவுன்ட் சுவர் மீது ஏறி நின்று கொண்டதாகவும், அந்த சுவர் மீது இருந்த ஒரு குரங்கு, இவளை கடிக்க பாய்ந்ததாகவும், அந்த
வீட்டினர் காப்பாற்றியதாகவும், தன் கற்பனையை சேர்த்து சொன்னாள்.
சில சமயம், இந்த மாதிரி யாருக்காவது ஆபத்து ஏற்பட, தான் சென்று, வீர தீர செயல் புரிந்து காப்பாற்றியதாக கூறுவாள். ஆனால், அதில், 1 சதவீதம் மட்டுமே உண்மை இருக்கும். வளர வளர, இந்த கற்பனை கதைகள் அவள் வயதுக்கு ஏற்ப, வெவ்வேறு பரிமாணம் அடைந்தது.
நாங்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும், அவள் திருந்துவதாக இல்லை. இதனால், யாருக்கும் பாதிப்பு இல்லை என்பதால், அதைப்பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
தற்போது, தனக்கு, நிறைய பாய் பிரண்டுகள் இருப்பதாக சொல்வதுடன், அடிக்கடி சினிமாவுக்கும், மால்களுக்கும் செல்ல துவங்கியுள்ளாள். வாட்ஸ் - ஆப், டுவிட்டர், பேஸ் புக் என, எப்பொழுதும் மொபைலும், கையுமாகவே இருக்கிறாள். விதவிதமாக, 'செல்பி' எடுத்து, யார் யாருக்கோ அனுப்பி வைக்கிறாள். கேட்டால், 'சும்மா ஜாலிக்கு...' என்கிறாள். பையன்கள் இவளுக்கு அடிக்கடி போன் செய்து பேசுகின்றனர். அவள் கல்லூரி படிப்பு முடிவதற்குள் என்ன விபரீதம் ஏற்படுமோ என்று, பயமாக இருக்கிறது.
இவள் சொல்வதில் எது நிஜம், எது பொய் என்று தெரியவில்லை. ஒவ்வொரு சமயம், இவள் பசங்களுடன் தான் சுற்றுகிறாளோ என்றும் தோன்றுகிறது.
நிறைய பாய் பிரண்டுகள் இருப்பதாக ஒரு பெண் கூறினால், அதை கேட்பவர், என்ன நினைப்பர்... அவளது திருமண வாழ்வு பாதிக்குமே என்று கலங்கி போயுள்ளேன். என் கணவரிடம் கூறினால், 'இதெல்லாம் வயசு கோளாறு; சரியாகி விடும்...' என்கிறார்.
பேர் கெட்டுப்போன பின், காலத்துக்கும் அது கரும்புள்ளியாகி விடுமே... என்ன செய்வது என்று தெரியவில்லை. அவளை எப்படி திருத்துவது... நல்ல ஆலோசனை தருவீர்கள் என்று நம்புகிறேன்.
- இப்படிக்கு,
உங்கள் சகோதரி.

அன்பு சகோதரிக்கு -
மனிதன் என்று பேச ஆரம்பித்தானோ, அன்றிலிருந்தே பொய்களும், மிகைகளும் பிறந்து விட்டன. அலங்கார பொய்களை வெற்றிகரமாக அரங்கேற்றுபவர்கள், கவிஞர்களும், எழுத்தாளர்களும் தான். சாதாரண மனிதர்கள் கூட அன்றாடம் பேசும்போது, தங்கத்தில் செம்பை கலப்பது போல, உண்மையில் பொய்யை கலக்குகின்றனர்.
'உன் ஓர விழி பார்வையில் ஓராயிரம் மின்னல்கள்...' என, பொய் கூறும் காதலனைத் தான், ஆழமாக நேசிக்கிறாள், காதலி. ஒரு உண்மையை முதலாமவரிடமிருந்து இரண்டாமவர், இரண்டாமவரிடமிருந்து மூன்றாமவர் என, பத்து பேர் வரை கடத்தி பார்த்தால், உண்மை, 200 சதவீதம் மாறியிருக்கும்.
இளமைக்கு, ஆயிரம் கற்பனை சிறகுகள்; இன்றைய இளம் தலைமுறை, தகவல் தொழில்நுட்ப மெகா புரட்சி பெற்ற அக்னி குஞ்சுகள். அல்ட்ரா மாடர்ன் யுவதிகளுக்கோ, முகநுாலில் கணக்கு, டுவிட்டரில் நொடிக்கு ஒரு ட்வீட், வாட்ஸ் - ஆப் புகைப்பட பரிமாற்றம், பத்துக்கு மேற்பட்ட பாய் பிரண்டுகள் என்பது, சமூக அந்தஸ்தின் அடையாளம்.
இன்றைய பெரும்பாலான பெண்கள், மகா கெட்டிக்காரிகள். பாய் பிரண்டுகளை, ஏ.டி.எம்., கார்டுகளாக, ஏவலாள்களாக, போன்
ரீ - சார்ஜ் செய்து தருபவர்களாக, வளர்ப்பு நாய் குட்டிகளாக பாவிக்கின்றனர்.
உன் மகள், ஹார்மோன் கலகத்தால் தான் இப்படி நடந்து கொள்கிறாள். டீன் - ஏஜ் கடந்ததும், நார்மலாகி விடுவாள்.
நீ இப்படிப் பேசிப் பாரேன்... 'மகளே... சினிமாவுக்கோ, மாலுக்கோ எங்கு வேண்டுமானாலும் போ; ஆனால், சொல்லிவிட்டுப் போ. குறிப்பிட்ட நேரத்துக்குள் வீட்டில் இரு; எப்போதுமே பொய் பேசாதே. பின், எப்போதாவது நீ உண்மை பேசினால், யாரும் அதை நம்ப மாட்டார்கள். பாய் பிரண்டுகள் இருப்பதை, தம்பட்டம் அடிக்காதே; அடக்கி வாசி. எப்போதுமே பாய் பிரண்டுகளுக்கும், உனக்கும் இடையே ஆரோக்கியமான இடைவெளி வை. முகநுால் கணக்கை ஜாக்கிரதையாக கையாளு. சமூக கட்டுப்பாடுகளை மீறாத வகையில் உன் சந்தோஷங்கள் அமையட்டும்...' என, நாசூக்காக கூறு.
'ஈகோவை' களைந்து, மகளிடம், தினமும், ஒரு மணி நேரம் மனம் விட்டு பேசு. தாயும், மகளும் தோழிகளாக இருங்கள். அவளது, 'நெகடிவ்' விஷயங்களை மட்டும் பார்த்து புலம்பாமல், அவளது, 'பாசிடிவ்' பக்கங்களை சிலாகி! உன் இளமைக் காலத்தையும், உன் மகளின் இளமைக் காலத்தையும் ஒப்பிட்டு பார்க்காதே. மகளை பார்க்கும்போது அனிச்சையாக கூட முகம் சுளிக்காதே. புன்னகை முகத்துடன் வரவேற்க பழகு. 'வீட்டுக்கு வெளியே சொர்க்கம்; வீட்டுக்கு உள்ளே நரகம்' என்ற எண்ணத்தை உன் மகளிடம் விதைத்து விடாதே. 'வெளியேயும் சொர்க்கம்; உள்ளேயும் சொர்க்கம்' என்ற பாவனையை உன் மகளுக்குள் உருவாக்கு.
மொத்தத்தில், உன் மகளின் எதிர்காலத்தை அடைகாத்து, ஒரு அன்னப் பறவை குஞ்சை பொறி. வாழ்த்துகள்!
- என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement