Advertisement

தெளிவுறத் தெரியப்படுத்தும் கலை!

'நீ(ங்க) எந்தப் பக்கம் திரும்புறேன்னே தெரியல; இப்ப மேல வந்து இடிச்சுட்டு, நியாயம் வேற பேசறீயாக்கும்... ஒண்ணு கையைக் காட்டணும் இல்ல... 'இன்டிகேட்டர்' போடணும். ரெண்டும் இல்ல. குரலை உசத்தினா நீ செய்தது சரின்னு ஆயிடுமா...' இத்தகைய வாக்குவாதங்களை சாலைகளில் நீங்கள் கேட்டிருக்கலாம்!
ஓட்டுபவரின் நோக்கம் என்ன... முந்துகிறோமா, முந்த அனுமதிக்கிறோமா என்பதை ஏதோ ஒரு முறையில் தெளிவாக்காததன் காரணமாகவே, சாலை விபத்துக்கள் அதிகம் நிகழ்கின்றன. கவனக்குறைவுகளுக்கு அடுத்தபடி, இதுதான், மிகப் பெரிய காரணம். எதிராளிக்கு தெளிவுபட அறிவுறுத்தாமை என்கிற இந்த எளிய விஷயம், சாலை விபத்துகளில் எலும்பு முறிவு, உடற்சேதம் - ஏன் மரணங்களுக்கு கூட காரணமாகி விடுகின்றன.
சில ஆண்டுகளுக்கு முன், ஜம்போ விமானம் ஒன்று, சென்னை மீனம்பாக்கத்தில் இறக்குவதற்குப்பதிலாக, தாம்பரம் விமானப்படைத் தளத்தில் இறக்கிவிட்டார், அதன் விமானி. பின், இதைத் தூக்குவதற்கு மிக அனுபவம் வாய்ந்த விமானி ஒருவர் வர நேர்ந்தது. காரணம், தாம்பரம் ஓடுதளத்தின் நீளம் மிகக் குறைவு.
நாகசாகி - ஹிரோஷிமாவில் அணுகுண்டு போடப்பட்டது கூட, ஒரு மனிதத் தவறால் நடந்தது தான் என்று வதந்தி உண்டு. 'போட்டு விடாதே...' என்று வந்த உத்தரவை, 'போடு...' என்று புரிந்து கொண்டதாக அமெரிக்கர்கள் சிலர், இதற்கு சப்பைக் கட்டு கட்டியதும் உண்டு.
தெளிவுபடத் தெரியப்படுத்தாமை என்பது, எத்தகைய சிக்கல்களையும், பேராபத்தையும் வரவழைக்கும் என்கிற செய்தியை நாம் உணர வேண்டும்.
எங்கள் வீட்டில் நடந்த சாதாரண சம்பவம் இது...
வீட்டிற்கு வந்த வெளியூர் உறவினர் ஒருவர், காலை உணவை முடித்து, அரசு அலுவலகப் பணியாக, புறப்பட்டுப் போனார். அவரும் சொல்லவில்லை; வீட்டினரும் கேட்டுக் கொள்ளவில்லை. மதிய விருந்து ஏக தடபுடலாய் தயாரானதுடன், இரவிற்கும் ஏகமாய் ஏற்பாடானது. மனிதர் மதிய உணவு நேரம் தாண்டிய பின், போன் செய்து, 'நான் வீட்டிற்கு வர, ராத்திரி, 11:00 மணியாகிடும்; வச்சுடுறேன்...' என்று கூறி, போனை வைத்து விட்டார்.
'நான் மதியம் சாப்பிட வருவது சந்தேகம்; அதற்குள் வேலை முடியுமா எனத் தெரியவில்லை. இரவு நண்பர்களுடன் விருந்து; எனவே, என்னை எதிர்பார்க்காதீர்கள்...' என்று, தெளிவுபட அவர் சொல்லியிருக்கலாம் அல்லவா!
வீட்டினரும், 'மதியம் சாப்பிட வருவீர்களா...' என்று கேட்பது நாகரிகமில்லை என, சும்மா இருந்து விட்டனர். 'மதியம் சாப்பிட அவசியம் வாங்க...' என, இவர்கள் வாக்கியத்தை சற்று, 'உல்டா' செய்திருந்தால், சரியான பதிலாவது வந்திருக்கும்!
உணவு என்றில்லை... பல விஷயங்களில் மனிதர்கள் இப்படித்தான் நடந்து கொள்கின்றனர். இவர்கள் ஏன் தெளிவுபட பேசமாட்டேன் என்கின்றனர் தெரியுமா... தங்களுக்குள் தெளிவில்லாமல், குழப்பவாதிகளாக இருப்பதால் தான்!
நாம், தனிமனிதராக முடிவு எடுக்கும் விஷயத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் குழம்பிக் கொள்ளலாம்; ஆனால், பிறருடனான விஷயங்களில் நம்மை, தெளிவுபடுத்துவது நல்லது.
புது முதலாளி யிடமோ, தலைமை நிர்வாகியிடமோ, 'சார்... ஒரு மாதத்தில் என் தம்பிக்கு திருமணம் நடக்க இருக்கிறது; அப்போ, பதினைந்து நாள் லீவு வேண்டும். உங்களுக்கு இதில் சிரமம் இருந்தால், திருமணம் முடிந்த பின், வேலையில் சேரட்டுமா...' என்று கேட்டிருக்க வேண்டும்.
'சேர்ந்த புதிதில் லீவா... முன், கூட்டியே சொல்லித் தொலைவதற்கென்ன...' என்ற முதலாளியின் கோபத்திலிருந்து தப்பித்திருக்கலாம்.
முதலிரவில், புது மனைவியிடம், 'எனக்கு மார்கெட்டிங் வேலை; அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டியிருக்கும். உன் ஒத்துழைப்பு இன்றி, என்னால் பணியில் சிறக்க முடியாது. உனக்கு இது பிடிக்கவில்லை என்றால், இரண்டு ஆண்டுகள் அவகாசம் கொடு; வேறு வேலைக்கு மாறிடுறேன்...' என்று கணவர் சொல்லியிருந்தால், 'இப்படி வீடு தங்காம அலைவீங்கன்னு தெரிஞ்சிருந்தா, உங்கள கல்யாணமே செய்திருக்க மாட்டேன்...' என்ற மனைவியின் புலம்பல் இருக்காது.
தனி முடிவுகள் என்றாலும், பிறருடனான முடிவுகள் என்றாலும் இனி, குழப்பங்களைக் குறைத்து, தெளிவான மனிதர்களாக மாறினால், இழப்புகள் தவிர்க்கப்படும்; பிழைப்பும் நன்றாக நடக்கும்!

- லேனா தமிழ்வாணன்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement