Advertisement

இளஸ்... மனஸ்... (76)

அன்பு ஜெனி ஆன்டிக்கு... மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவி; என் நினைவு தெரிந்த நாளில் இருந்தே, சிறுவர்மலர் படிக்கிறேன்; என் பிரச்னைக்கு, வழி சொல்லுங்க ஆன்டி...
அழகிய இளம் பெண்ணான, என் குதிகால்களின் ஓரங்களில், பித்த வெடிப்பு இருக்கு... பார்ப்பதற்கு அசிங்கமா இருப்பதுடன், வலிக்குது...
இதை போக்க, நிறைய, 'ட்ரீட்மென்ட்' எடுத்துட்டேன்; பலன் இல்லை ஆன்டி. என் கால் பாதங்கள், தோழிகள் மீது பட்டாலே, 'ஐயோ... கத்திய காலுல வச்சிருக்கியா என்ன... இப்படி சொர சொரன்னு குத்துது' என்று சொல்லி, கேலி செய்றாங்க...
இதுக்கு ஒரு வழி சொல்லுங்க ப்ளீஸ்... சொர சொரப்பான என்னோட காலை பார்க்க, எனக்கே அருவருப்பா இருக்கு ஆன்டி.
அச்சச்சோ... உன்னோட கவலை எனக்கு புரியுது மகளே... கவலையை விடு; உன் பாதங்களை அழகாக்கிடலாம்.
முதலில், பாதங்களில் ஏன், வெடிப்பு வருதுன்னு தெரிஞ்சிக்கோ.
பரம்பரைத்தன்மை, அணிகிற செருப்பு, அளவுக்கதிகமான உப்பு தண்ணீரில் பாதங்கள் படுவது மற்றும் சத்துக்குறைவு போன்ற காரணங்களால், பித்த வெடிப்பு வரும்.
* வெடிப்பு உள்ளவர்கள், உப்பு, புளி இரண்டையும் அதிகம் எடுத்து கொள்ளக் கூடாது
* தினமும், இரவு படுக்கும் முன், வென்னீரில், ஒரு தேக்கரண்டி கல் உப்பு போட்டு, அரை மணி நேரம் கால்களை ஊற வைத்து எடுத்து, நன்கு துடைத்த பின், 'வாஸலின்' தடவி விடு.
காஸ்மெட்டிக் கடைகளில் கிடைக்கும், 'பியூமிக் ஸ்டோன்' என்ற கல்லை, காலையில் எழுந்ததும் பாதங்களில் தேய்த்து கழுவு; அந்த ஸ்டோன் இல்லையென்றாலும் பரவாயில்லை; பழைய பிரஷ் பயன்படுத்தி, பாதங்களை தேய்த்து கழுவு.
இப்படி, தொடர்ந்து செய்து வந்தால், வெடிப்புகள் மறைந்து, பாதங்கள் வழு வழுப்பாகும்
* நல்ல தோல் செருப்பை அணி
* பெரிய வெங்காயத்தை அப்படியே பச்சையாக சுட்டு, விழுதாக அரைத்து, வெடிப்புகளின் மேல் தடவி வந்தால், ஒரு மாதத்திற்குள் நல்ல பலன் கிடைக்கும்
* கைப்பிடியளவு படிகாரத்தை வெறும் வாணலியில் போட்டு, வறுத்து, தூளாக்கி, அத்துடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து, வெடிப்புள்ள இடங்களில் தடவி வர, வெடிப்புகள் மறைந்து, பாதங்கள் வழுவழுப்பாக மாறும்.
என்ன பிரச்னை தீர்ந்ததா...
- அன்புடன், ஜெனிபர் பிரேம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement