Advertisement

ஜேம்ஸ் திவார்!

நம் வீடுகளில், டீ மற்றும் காபியை, சூடாக வைத்திருக்க, 'பிளாஸ்க்'கை பயன்படுத்துகிறோம். மருத்துவமனையில் யாரையாவது சிகிச்சைச்கு சேர்க்க வேண்டுமென்றால், முதலில், நாம் எடுத்துச்செல்ல வேண்டிய முக்கிய பொருள், பிளாஸ்க்.
உண்மையில், பொருட்களை குளிர் நிலையிலேயே வைத்திருக்கும் ஒரு பொருளை கண்டுபிடிக்க முயன்றார்... ஆனால் கிடைத்ததோ சூடான நிலையில் வைத்திருக்கும் ப்ளாஸ்க்! உங்களுக்கு ஆச்சரியமாக தான் இருக்கும். இந்த குடுவையை வடிவமைத்தவர், ஜேம்ஸ் திவார்.
ஸ்காட்லாந்தில் உள்ள கின்கார்டைன் எனும் கிராமத்தில், 1842ல் பிறந்தார். ஸ்காட்லாந்திலும், இங்கிலாந்திலும் கல்வி கற்றார்.
கேம்பிரிட்ஜில் உள்ள ராயல் கல்வி நிலையத்தில், வேதியியல் துறை பேராசிரியராக பணியாற்றினார். 1897ல் ஹைட்ரஜன் வாயுவை குளிர்வித்து, திரவ நிலையாக மாற்றும் ஆர்வம் அவருக்கு ஏற்பட்டது.
இரட்டைசுவர் கண்ணாடி குடுவையில், வெற்றிடத்தோடு, மேலும் சில மாறுதல்களை செய்த போது, குளிர் நிலையில் மட்டுமல்ல, வெப்ப நிலையிலும் பொருட்களை பாதுகாக்க முடியும் என்பதை கண்டார்.
வெற்றிடத்தின் வழியாக வெப்பம் கதிராக வெளியேறிவிட முடியும் என்பதால், குடுவையின் உட்புறம், வெள்ளி முலாம் பூசி, அதில் சிறிதளவு வெப்பமும் வெளியேற வாய்ப்பின்றி தடுத்தார் திவார். விரைவில், 'கார்டைட்' என்ற வெடிபொருளை கண்டுபிடித்தார்.
லண்டன் ராயல் கல்வி நிலைய ஆய்வகத்தில், தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டார். திடப்பொருளை வெப்பப்படுத்தினால், திரவப்பொருள் ஆகிவிடும். மேலும், வெப்பப்படுத்தினால் திரவப்பொருள் வாயுப் பொருளாகிவிடும்.
வாயுப் பொருளை குளிர்வித்தால் திரவப் பொருளாகும். திரவப்பொருளை மேலும் குளிர்வித்தால் திடப்பொருளாகி விடும். வாயுக்களை நேரடியாக குளிர்வித்து திடப்பொருளாக்க முடியுமா... இந்த கேள்வியுடன் எப்போதும் ஆய்வுக் கூடத்திலேயே நேரத்தை செலவு செய்தார்.
ஹைட்ரஜன் வாயுவை குளிர்விக்க, திரவ ஹைட்ரஜன் கிடைத்தது. ஆஹா... நல்லது. இப்போது அதை திடப்பொருள் ஆக்க, மீண்டும் மீண்டும் முயற்சித்தார்.
வாயுவான ஹைட்ரஜன், திரவ ஹைட்ரஜன் நிலையில் இருக்க, 200 சென்டிகிரேட் வெப்பநிலை தேவை. ஆய்வகத்தில் அப்போதிருந்த எந்த இடத்திலும் அந்த திரவ ஹைட்ரஜனை பத்திரப்படுத்த முடியாது.
அதற்கு மேல் எந்த வெப்ப நிலையிலும் அந்த திரவ வாயு கருப்பாக மாறுவதை தவிர்க்க முடியாது. எனவே, தேவையான வெப்பநிலையில் அந்த திரவத்தை பாதுகாக்க ஒரு கண்ணாடி குடுவை தேவை.
மிகக்குறைந்த வெப்பநிலையில் வாயுக்களை குளிர்வித்து, திரவநிலையில் பெற்றால், விஞ்ஞான உலகிற்கு அவை பல விதங்களில் பயன்படும் என்ற தீவிரத்துடன் முயன்றார். ராயல் கல்விநிலைய அதிகாரிகள், திவாருக்கு பைத்தியம் பிடித்துவிட்டதோ என்றுகூட சந்தேகித்தனர்.
இரட்டை சுவர் பாத்திர வடிவமைப்பை கண்ணாடிகுடுவையாக ஏற்படுத்தி, பலவித வாயுக்களை அந்த இரண்டு சுவருக்கும் இடைப்பட்ட இடைவெளியில் அடைத்து வைத்து உள் இருக்கும் திரவத்தின் குளிர், வெப்பம் மாறா தன்மையை சோதித்தார்.
திடீரென்று ஒரு சிந்தனை உதித்தது.
வாயுவை வெளியேற்றி, இரு சுவருக்குமான இடைவெளியில், வாயுவே இல்லாத வெற்றிடத்தை உண்டாக்கி சோதித்து பார்த்தால் என்ன... அப்போது கிடைத்தது தான் நம்முடைய ப்ளாஸ்க்.
கிட்டதட்ட உலகின் எல்லா நாடுகளிலும், திவாரின் குடுவை பிரபலமான பிறகும், அதற்குரிய பெருமைகள், அங்கீகாரங்கள் அவருக்கு கிடைக்கவில்லை. அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படாதது ஒரு துரதிர்ஷ்டமே, என்று இன்று கூட விஞ்ஞான விமர்சகர்கள் வருந்துகின்றனர்.
விஞ்ஞான உலகம் கண்டுகொள்ளாத, ஜேம்ஸ் திவார், 1923ல் காலமானார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement