Advertisement

நான்கு உபதேசம் 4000 ரூபாய்!

அரசர் அக்பருக்கு பீர்பலிடம் பிரியம் அதிகம்தான். ஆனால், சில சமயங்களில் பீர்பல் மீது கோபம் கொள்வதும் உண்டு.
ஒருமுறை, பீர்பல் மீது கோபப்பட்ட அக்பர், நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டார்.
பீர்பலும், அரசரின் உத்தரவுக்குப் பணிந்து, தன் நம்பிக்கையான பணியாள் ஒருவருடன் நாட்டை விட்டு வெளியேறி, வேறு நாட்டை அடைந்தார்.
ஒரு நாள்-
அந்நாட்டின் கடைத்தெருவை பார்க்கச் சென்றார். அங்கே ஒருவன் நடை பாதையில் உட்கார்ந்து, போவோர் வருவோரை யெல்லாம் பார்த்து, 'ஒரு உபதேச மொழி, 1,000 ரூபாய். என்னிடம் நான்கு உபதேச மொழிகள் உள்ளன. அதற்கு, 4,000 ரூபாய்!' என விலை கூறிக் கொண்டிருந்தான்.
'அது என்ன, 1,000 ரூபாய் மதிப்புள்ள உபதேச மொழி கேட்டுத்தான் பார்ப்போமே...' என்று ஆசைப்பட்டார் பீர்பல்.
ரூபாயைக் கொடுத்துவிட்டு உபதேச மொழியைச் சொல்லும்படி கேட்டார்.
“சிறிது பெரிதானாலும், அதை சிறிது என்று எண்ணி விடக் கூடாது! என்று கூறி இது முதல் உபதேச மொழி'' என்றான்.
பீர்பல் மீண்டும், 1,000 ரூபாயைக் கொடுத்து இரண்டாவது உபதேச மொழியையும் கேட்டார்.
“யாரிடமாவது குற்றம் கண்டால், அதை வெளிப்படுத்தக் கூடாது,” என்று கூறினான்.
மீண்டும், 1,000 ரூபாய் கொடுத்து, மூன்றாவது உபதேச மொழியையும் கேட்டார் பீர்பல்.
“யாராயினும் விருந்துக்கு அழைத்தால் எத்தகைய வேலை இருந்தாலும் அதை விடுத்து விருந்துக்குச் செல்ல வேண்டும்...' என்றான்.
'இன்னும் ஒன்றுதானே உள்ளது. அதையும் கேட்டு விடுவோம்...' என்று நினைத்த பீர்பல், மறுபடியும், 1,000 ரூபாயை எடுத்துத் தந்தார். “யாரிடமும் ஊழியம் செய்யக் கூடாது. இது நான்காவது உபதேச மொழி,” என்று கூறினான்.
அவனிடம், 4,000 ரூபாய் செலவு செய்து, உபதேச மொழிகளைக் கற்றுக்கொண்ட பீர்பல், சிறிது காலம் அந்த நாட்டிலேயே தங்கினார்.
கையிலிருந்த பணமெல்லாம் தீர்ந்தது. கூட இருந்த ஊழியனும் விலகிப் போய்விட்டான். சிரமத்துடன் வறுமையில் இருந்த பீர்பல், ஒருநாள் வீதியோரமுள்ள ஆல மரத்தடியில் சோர்ந்து படுத்திருந்தார்.
முன்பு அக்பர் அரண்மனையில் பணியாற்றிய ஒருவர், அந்த நாட்டுக்கு அதிபராகயிருந்தார். அவர் நகர்வலம் வரும்போது ரோட்டோரம் படுத்திருந்த பீர்பலைக் அடையாளம் தெரிந்து கொண்டார். அரண்மனை சென்றதும், ஒரு காவலனை அனுப்பி பீர்பலை சபைக்கு அழைத்து வரச் செய்தார்.
சபையில் வந்து நின்ற பீர்பலைப் பார்த்து, “என்னைத் தெரிகிறதா... நான் யார்?” என்று கேட்டார்.
“நீங்கள் இந்த நாட்டின் அதிபர்,” என்றார் பீர்பல்.
தன்னை அதிபர் என்று கூறியதும், அவரால் தன்னை, அரண்மனையின் பழைய ஊழியன் என, அடையாளம் காண முடியாமல் இருந்ததும், அதிபருக்கு ஆனந்தத்தை உண்டு பண்ணியது. எனவே, தனக்கு அமைச்சராக இருக்கும்படி பீர்பலை கேட்டுக் கொண்டார். பீர்பலும் தம் நிலைமையை எண்ணி சம்மதித்தார்.
ஒரு நாள்-
அரசாங்க வேலையாக அரண்மனை அந்தப் புரத்திற்குச் சென்றார் பீர்பல். அப்போது, வழியில் காவல் அதிகாரி ஒருவன் போதையில் சுயநினைவின்றி அரைகுறை ஆடையுடன் கிடந்தான். அதைக் கண்ட பீர்பல், தன் சால்வையை எடுத்து அவன் மீது போட்டுவிட்டு, அப்பால் சென்று விட்டார்.
சிறிது நேரம் சென்றபின், எழுந்த காவல் அதிகாரி, 'தன் வெட்கக்கேடான நிலையை பீர்பல் அனைவரிடமும் கூறிவிடுவாரோ...' என பயந்து, தன்னிடமுள்ள பணத்தை பீர்பல் திருடி விட்டதாகவும், அதற்கு ஆதாரமாக அவர் விட்டுச் சென்ற சால்வையையும் காட்டி அதிபரிடம் புகார் செய்தார்.
சால்வையை சாட்சி வைத்து சொல்லக் கேட்ட அதிபர் சற்றும் யோசிக்காமல், காவல் அதிகாரி சொல்லியதை நம்பி, பீர்பல் மீது கோபம் கொண்டார்.
மேற்கொண்டு விசாரணை செய்யாமல் அவசரமாக ஒரு கடிதம் எழுதி பீர்பலிடம் கொடுத்து உடனடியாகச் சேனாதிபதியிடம் சேர்க்குமாறு கூறினார். கடிதத்தைப் பெற்றுக்கொண்ட பீர்பல், அரசனின் ஆணையை நிறைவேற்ற உடனே விரைந்தார்.
போகும் வழியில், நகரத்துப் பெரிய வியாபாரி பீர்பலை பார்த்து, 'என் வீட்டில் ஒரு விருந்து; சிறிது நேரம் வந்து கலந்து கொண்டு பின் செல்லலாம்!' என மிகவும் வற்புறுத்தினார்.
தான் அவசர காரியமாக சேனாதிபதியை பார்க்கச் செல்வதாகவும், திரும்பி வரும்போது கலந்து கொள்வதாகக் கூறியும், வியாபாரி விடுவதாக இல்லை.
எனவே, பீர்பல், தன்னுடைய மூன்றாவது உபதேச மொழியை பின்பற்றி சிறிது நேரம் வியாபாரியின் வீட்டுக்குச் சென்று விருந்தில் கலந்து கொண்டார்.
இதை கவனித்துக் கொண்டிருந்த காவல் அதிகாரி, பீர்பலிடம் சென்று, “தாங்கள் கொடுக்க வேண்டிய கடிதத்தை பத்திரமாகவும், பொறுப்புடனும் சேர்ப்பித்து விடுகிறேன். தாங்கள் நட்புக்கு இணங்கி விருந்தில் முழுவதும் கலந்து கொள்ளுங்கள்,” என்று வேண்டிக் கொண்டான்.
பீர்பலும், அவனிடம் ஓலையை கொடுத்து அனுப்பினார்.
விருந்து சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக, காவல் அதிகாரியின் தலையை வெட்டி, ஒரு தட்டில் எடுத்தபடி வந்து கொண்டிருந்தார் சேனாதிபதி.
பீர்பல், காவல் அதிகாரியிடம் கொடுத்த கடிதத்தில், 'இக்கடிதம் கொண்டு வருபவன் தலையை வெட்டி உடனே தட்டில் வைத்து கொடுத்துக் கொண்டு வரவும்' என்று எழுதியிருந்தார் அரசர்.
பீர்பலிடம் கடிதத்தை வற்புத்தி வாங்கிச் சென்ற காவல் அதிகாரியின் தலை, இவ்வாறு வெட்டப்பட்டது... வழியிலேயே சேனாதிபதியிடம் இருந்து தட்டை வாங்கிக் கொண்ட பீர்பல், நேரே அரசனிடம் எடுத்துப் போனார். அவரைப் பார்த்த அரசன் திகைத்துப் போனான்.
“உம்முடைய தலையை அல்லவா வெட்டும்படி எழுதியிருந்தேன். காவல் அதிகாரி எப்படி வெட்டப்பட்டான்?” என்று பீர்பலிடம் கேட்டார் அரசர்.
“இதுதான் இறைவன் விருப்பம். உண்மையான குற்றவாளி கொல்லப் பட்டான்...” என்று கூறி, நாட்டை விட்டுத் தான் வந்தது முதல் நடந்தது அனைத்தையும் கூறினார். மேலும், இனியும் நான் இங்கு இருப்பது சரியில்லை. என் நண்பரும், சக்கரவர்த்தியுமான அக்பரிடம் நான் செல்ல வேண்டும்,” என்று கூறினார்.
பீர்பலைப் பிரிய விரும்பாத அரசர், அவரை அங்கேயே இருக்கும்படி கூறினார். உபதேச மொழிகளில் மூன்றை அனுபவப்பூர்வமாய் அறிந்து கொண்டேன். இனி நாலாவது உபதேச மொழியையும் கடைப்பிடிக்க விரும்புகிறேன், 'இனி யாரிடமும் என்னால் ஊழியம் செய்ய இயலாது' என்றும் தெளிவுப்படுத்தினார் பீர்பல்.
அரசனும் தன்னுடைய பழைய நிலையை எண்ணி பீர்பலிடம் நடந்துகொண்ட முறைக்காக வெட்கப்பட்டார். மேலும், அவரை மரியாதையுடன் அக்பரிடம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார்.
இதற்கிடையே பீர்பல் இல்லாத குறை அக்பரைப் பெரிதும் வருத்தியது. எனவே, பீர்பலைத் தேடுவதற்காக நாடெங்கும் ஆட்களை அனுப்பி வைத்தார்.
அவ்வாறு தேடிவந்த காவலர்கள் பீர்பலை, டில்லி திரும்பும் வழியிலேயே சந்தித்து, அரசர் அக்பரின் கட்டளையை தெரிவித்தனர்.
பீர்பலும் உடனே, அக்பரைக் காணப் புறப்பட்டார். நீண்ட நாள் பிரிந்திருந்த பீர்பலைக் கண்டதும், மகிழ்ச்சியோடு கட்டித் தழுவினார் அக்பர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement