Advertisement

அதிமேதாவி அங்குராசு

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

'கே' காது வேணாம்!
இன்றைய இளைய தலைமுறையினர், கணினியை மணிக்கணக்கில் பார்த்து, கண் பழுதாவது போல, இரைச்சலால், காதுகள் கேட்கும் திறனை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உலக சுகாதார மையம் ஒவ்வொரு நாட்டிலும், 85 டெசிபல் அளவு சத்தம் தான் இருக்க வேண்டும் என்கிறது. ஆனால், நம் நாட்டின், முக்கிய நகரங்களில், 100 முதல் 140 டெசிபல் அனுமதிக்கப்படுகிறது. போக்குவரத்து மட்டுமல்ல, தொழிற்சாலைகளில் இயந்திர இயக்கத்தாலும், இரைச்சல் அதிகமாகிறது.
இதனால், நம் உடல் தொடர்ந்து அதிர்வடைகிறது. அதிகமான இரைச்சலால், காது கேட்பதில் பிரச்னை மட்டுமல்ல; அதிக இரைச்சல் உள்ள இடங்களில், அதிக சத்தமாக பேச வேண்டி உள்ளதால், குரல் நாண்கள் வலுவிழந்து, குரல் கரகரப்பாகிறது.
இதனால், தூக்கமின்மை, மன அழுத்தம், வாயு சம்பந்தமான தொந்தரவுகள் மற்றும் இதய சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன என்று கூறுகின்றனர் விஞ்ஞானியர்.
'இந்த மாதிரி இரைச்சலால், 10 லட்சம் உயிர்கள், ஒவ்வொரு ஆண்டும் போகிறது' என்று உலக சுகாதார மையம் கூறுகிறது.
தொழிற்சாலையில், அதிக இரைச்சலான இயந்திரங்களில், வேலை பார்ப்பவர்கள்; அதிக போக்குவரத்து இரைச்சல் உள்ள இடங்களில் வசிப்பவர்கள்; பார்ட்டி, கிளப்களில் அடிக்கடி விழாக்களில் பங்கேற்போர், மிகவும் பாதிக்கப் படுகின்றனர்.
இதை, உடனே உணராவிட்டாலும், காலப்போக்கில் பாதிப்பை ஏற்படுத்தும். ஒலி அளவை அதிகமாக்கி பாட்டு கேட்பது, அடிக்கடி பாட்டுக் கச்சேரிகள் கேட்பது கூட, பிரச்னையை ஏற்படுத்தும்.
துப்பாக்கி சுடும் சத்தம் மற்றும் வாண வேடிக்கைகள் கூட, காதுகளில் உள்ள செவிப்பறையை சேதமடைய செய்யும். காதில் உள்ள, நுண்ணிய செல்கள் மூலம், உள் காதுகளில் உள்ள கேட்கும் நரம்புகளை, இந்த இரைச்சல் தாக்குகிறது.
இதனால், பாதிப்பு ஏற்பட்டு, ஆரம்ப நிலையில் மந்தம் அல்லது காதுகளில், இரைச்சல் தொடர்ந்து கேட்கும். துவக்கத்தில், டெலிபோன் சத்தம் காதுகளில் விழாது. உடனே, இ.என்.டி., ஸ்பெஷலிஸ்டிடம் காண்பித்து, பாதிப்பைத் தடுக்கலாம்.

எவ்வளவு சத்தத்தை காதுகள் கேட்கலாம்...
ஒருநாளைக்கு, எட்டு மணி நேரத்தில், 90 டெசிபல் சத்தமும், நான்கு மணி நேரத்துக்கு, 95 டெசிபலும், இரண்டு மணி நேரத்துக்கு, 100 டெசிபலும் கேட்கலாம். பாதுகாத்து கொள்ளாத காதுகளை, 140 டெசிபலுக்கு அதிகமாக உட்படுத்தக் கூடாது.

காதுகளை பாதுக்காக...
பெரிய சத்தங்களை கேட்கும் போது, உங்கள் காதுகளுக்கும், சத்தத்திற்கும் நடுவில் தடுப்பு சுவர் வேண்டும். கார் ஜன்னல்களை மூடி விடவும். வீடுகளில் தடிமனான திரைகளால் மூடி, 'சவுண்ட் ப்ரூப்' செய்துகொள்ளலாம். காதுகளை, 'இயர் ப்ளக்'குளால் மூடலாம்.
கிரைண்டர் அல்லது மிக்சி உபயோகிக்கும் போது, ஒரு டவல் அல்லது பாயை கிரைண்டரின் அடியில் போட்டு, சத்தத்தை குறைக்கலாம்.
அடிக்கடி, ஹாரன் எழுப்புதல் மற்றும் அதிகமான சத்தத்துடன் கூடிய பட்டாசுகளை வெடித்தல் போன்றவற்றை தவிர்க்கலாம்.
போக்குவரத்து சாதனங்களை அடிக்கடி பழுது நீக்கி வைக்க வேண்டும். மோட்டார் பைக்கிலிருந்து, சைலன்சர்களை அகற்றாமல் இருப்பது, லவுட் ஸ்பீக்கர்களை, இரவு 10:00 மணிக்கு மேல் உபயோகிக்காமல் இருப்பது நலம்.
என்றென்றும் அன்புடன், அங்குராசு.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement