Advertisement

குட்டித் தம்பி

குட்டித் தம்பி கூடாரத்தில், தன்னந்தனியாக வாழ்ந்து வந்தான். அக்கா வைத்திருந்த உணவு தீர்ந்த பின், கூடாரத்துக்கு வெளியே வந்தான்.
கானகத்தினுள், பிஞ்சு பாதங்களால் நடந்தான். பழம், காய், கிழங்குகளை தேடி பசியால் அலைந்தான்.
வேனிற்காலம் தேய்ந்தது.
ஊதல்காற்று விளையாட துவங்கியது. அத்துடன், ஓநாய்களின் ஊளை சத்தமும் கலந்து வந்தது. இன்னொரு முறை பனி விழுந்து பூமியை மூடியது. குளிர் தாங்க முடியவில்லை. தனிமையும், பசியும் விரட்டின.
இரவில், கூடாரத்தில் முடங்கி கிடப்பான். பகலில், பசியை தணிக்க, ஓநாய்கள் உணவருந்திவிட்டு சென்ற மீதியை உண்டான்.
மனித சஞ்சாரமே இல்லாத நாடு. உறவு கொள்ளவோ, ஒட்டி பழகவோ மனிதர்கள் யாருமில்லை; கொல்லும் தனிமையை போக்க ஓநாய்களுடன் பழகினான் குட்டித் தம்பி.
ஓநாய்கள் கூட்டமாக வேட்டைக்கு செல்லும் போது, இவனும் அவற்றுடன் செல்வான். அவற்றை போல, மரத்துக்கு மரம் ஒளிந்து, மறைந்து வேட்டையில் ஈடுபடுவான்.
வேட்டை முடிவில் ஓநாய்கள் உணவை சூழ்ந்தபடி விழுங்கும்போது, தனித்திருக்கும் இவனுக்கும் அவை ஒரு பங்கு ஒதுக்கும். இப்படி, ஓநாய்கள் கருணை காட்டியிருக்காவிட்டால், பனியாலும், குளிராலும், கடும் பசியாலும் குட்டித் தம்பி என்றைக்கோ இறந்திருப்பான்.
அந்த ஆண்டு பனிப் பாறைகள் பெருமளவுக்கு உருகின. பெரிய ஏரி, நீல நிறமாக மின்னியது. ஓநாய்கள் ஏரிக்கரைக்கு உணவு தேடி விரைந்தன. குட்டித் தம்பியும் சென்றான். பளீரென்ற சூரிய வெளிச்சம் பரவியது. கதகதப்பு இதமாக இருந்தது.
ஒருநாள்- -
அந்த ஏரியில், ஒரு படகு வந்தது. அதை செலுத்தியது, குட்டித் தம்பியின் மூத்த அண்ணன். வீராதி வீரனாக விளங்குபவன். மீன் பிடிப்பதற்காக, வந்தான். அப்போது, ஏரிக்கரையை அடுத்த, பைன் மரக்காடுகளில் இருந்து, ஒரு குழந்தையின் குரல், கணீரென்று பாட்டாக ஒலித்தது.
''என் அருமை அண்ணாவே நான் ஓநாய் பையனாக மாறி வருகிறேன். விரைவில், ஓநாயாகி விடுவேன்...''
பாட்டின் முடிவில், அக்குரல் ஓநாயின் ஊளையாக மாறிவிட்டது.
அப்போதுதான், அண்ணனுக்கு, தன் குட்டி தம்பியின் நினைவு வந்தது. அவமானத்தால், உடல் குன்றியது. ஏக்கமும், பீதியும் நெஞ்சைப் பிளந்தன. பெற்றோருக்கு செய்து கொடுத்த சத்தியத்தை எண்ணினான்.
ஒரு காலத்தில், குட்டித் தம்பியிடம் வைத்திருந்த பாசத்தை எண்ணினான். கண்கள் கலங்கின; உடனே, பைன் மரக்காட்டை நோக்கி ஓடினான்.
“தம்பி, குட்டித் தம்பி, ஓடி வா, என்னிடம் ஓடிவா!” என்று கூவி அழைத்தான். ஆனால், குட்டித் தம்பி, இப்போது பாதி ஓநாயாக மாறியிருந்தான். செவ்விந்திய மொழியில் பாடக்கூட அவனால் முடியவில்லை. குட்டித் தம்பியின் குரல், ஓநாயின் ஊளையாகத்தான் இருந்தது.
வேதனை பிழிந்தெடுக்கும் உரத்த குரலில், அண்ணன் கூவினான்.
“என் அருமை குட்டி தம்பி... அண்ணனிடம் ஓடி வந்துவிடு,” என்றான்.
அவன் எவ்வளவு உரக்க கூப்பிட்டானோ, அதே வேகத்தில் குட்டி தம்பியும், செவ்விந்திய வேட்டைக் காரரால் விரட்டப்பட்ட ஓநாயை போல், வேக வேகமாக காட்டுக்குள் பதுங்கினான்.
சகோதர ஓநாய்களுக்கிடையே, அரவணைப்பையும், பாதுகாப்பையும் நாடி ஓடினான். ஓட ஓட, அவன் உடல், ரோமம் மண்டிய ஓநாயின் உடலாக மாறியது.
சிறிது நேரத்தில், இரு கைகளையும் கீழே ஊன்றியபடி ஓநாய்களை போலவே பயங்கரமாக ஊளையிட்டு குரைக்கவும் செய்தான். ஓநாயாகவே மாறினான் குட்டித் தம்பி.
வெட்கமும், வேதனையும் குத்தியெடுக்க, படகுக்கு திரும்பி வந்தான் அண்ணன்.
அன்பு காட்டாமல், பராமரிக்காமல், சொன்ன சொல்லை காப்பாற்றாமல் கைவிட்டதால், குட்டித் தம்பி ஓநாயாக மாறியதை எண்ணி எண்ணி, கண்ணீர் விட்டபடி கிராமத்துக்கு திரும்பினான்.
சகோதரியிடம் கூறியபோது, அவளும் கலங்கினாள். தங்கள் சுகமே பெரிதென்று நினைத்து, தங்களால் கைவிடப்பட்ட தம்பியை எண்ணி, அவ்விருவரும் வாழ் நாளெல்லாம் வேதனைப்பட்டனர்.
இப்போது படும் இந்த வேதனை, ஓநாயாகிவிட்ட குட்டி தம்பியை மனிதனாக மீண்டும் மாற்றிவிடுமா என்ன...
- முற்றும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement