Advertisement

யார் போட்ட கையெழுத்து...

நான், நான்காம் வகுப்பு படித்த போது, என் வகுப்பாசிரியர், மாணவர்களின் கையெழுத்து அழகாக இருக்க வேண்டும் என எப்போதும் அறிவுறுத்துவார்.
அதனால், தினமும், இரண்டு மற்றும் நான்கு கோடு போட்ட நோட்டில், திருக்குறள் எழுதி, பெற்றோரின் கையொப்பமும் வாங்கி வரச் சொல்வார்.
ஒருநாள், நான் எழுதாமல் வந்துவிட்டேன். அன்று, 'அனைவரும் எழுதினீர்களா...' என்று கேட்டுவிட்டு நோட்டை பார்க்காமல், அலுவலக பணியின் காரணமாக வெளியே சென்று விட்டார்.
அடுத்தநாளும் நான் எழுதவில்லை. ஆனால் அன்று, அனைவரிடமும், நோட்டை மேஜையில் அடுக்கிவைக்குமாறு கூறினார். அவசர அவசரமாக, இரண்டு நாளைக்கும் சேர்த்து வேகமாக எழுதி, அம்மாவின் கையெழுத்தையும் நானே போட்டு, வைத்துவிட்டேன்.
என் நோட்டை பார்த்த ஆசிரியர், 'யார் கையெழுத்து போட்டது...' என்றார். பயத்தில், 'என் அம்மா தான் கையெழுத்து போட்டாங்க' என்று அழுத்தமாய் கூறினேன்.
நிறைய முறை ஆசிரியர் கேட்டும், நான் ஒப்புக்கொள்ளவில்லை. உடனே ஆசிரியர், மிக பொறுமையாக, 'நீ கையெழுத்து போட்ட உன் அம்மாவின் பெயரில், இரண்டாம் எழுத்திற்கு பக்கத்தில் தான், துணையெழுத்து வரவேண்டும். நீ முதல் எழுத்திற்கு அருகில் மாற்றி எழுதியுள்ளாய். இனி, இது போன்ற தவறுகளை செய்யாதே...
'உன் படிப்பில், பெற்றோருக்கு பெரும்பங்கு உண்டு. கையெழுத்து என்பது மிகவும் முக்கியமானது; அதை தவறாக பயன்படுத்த கூடாது' என்று அறிவுரை கூறினார்.
'பயத்தால் தான் பொய் சொன்னேன். இனி, இது போன்ற தவறை செய்ய மாட்டேன். எவ்வளவு அவசரமாக இருந்தாலும், பெற்றோரிடம் தான் கையெழுத்தை வாங்குவேன்' என்று கூறினேன். ஆசிரியரின் அந்த அறிவுரை, இன்றும் என் மனதில் நீங்காமல் நிலைத்து நிற்கிறது.
- பா.செல்வப்பிரியா, ராமநாதபுரம்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement