Advertisement

ஒரு கணவனின் அர்ப்பணிப்பு!

அன்று, அலுவலகம் விடுமுறை என்பதால், காலை ஒன்பது மணி ஆகியும், போர்வையை இழுத்துப் போர்த்தியபடி தூங்கினான், தியாகு. குழந்தை பசியால் அழ, அடுப்பில் இருந்த பாலை, டம்ளரில் ஊற்றி ஆற்றிய சாந்தி, ''ஏங்க... கொஞ்சம் எந்திரிங்க... குழந்தை அழுறான்; பால ஆத்துற வரை அவனக் கொஞ்சம் பாத்துக்கங்க...'' என்றாள் கொஞ்சம் கோபமாக!
அவள் கூறுவது காதில் விழுந்தாலும், எழாமல் படுத்திருந்தான். அப்போது பார்த்து, அவளது மொபைல்போன் ஒலிக்க, ''இது வேற...'' என்று அலுத்துக் கொண்டவள், எழுந்து, டேபிளில் இருந்த போனை பார்த்தாள். இந்தியாவிலிருந்து அவளது தம்பிதான் கூப்பிடுகிறான். தோளுக்கும், காதுக்கும் இடையில் போனை வைத்து, பாலை ஆற்றியபடி, ''சொல்லு தம்பி...'' என்றாள்.
அவன் பேசப் பேச அவள் முகம் மகிழ்ச்சியில் விரிய, ''ம்... அப்படியா...'' என்று, கவனத்துடன் கேட்டபடி, பாலை ஆற்றி, புட்டியில் ஊற்றி குழந்தையின் கையில் கொடுத்தாள். அது, தரையில் தன் இரு கால்களையும் விரித்து வைத்தபடி, பாலை குடிக்க ஆரம்பித்தது. பத்து நிமிடத்துக்கு பின், மொபைல் போனை வைத்தவள், பரபரப்புடன் கணவனை எழுப்பினாள்.
''என்னங்க... எழுந்திருங்க; ஒரு குட் நியூஸ்...'' என்று, போர்வையை விலக்கி, கன்னத்தை தட்டினாள். ''கொஞ்ச நேரம் என்னை தூங்க விடேன்...'' என்றான், எரிச்சலுடன் தியாகு!
''நான் சொல்றத கேளுங்க... ஊர்ல இருந்து என் தம்பி போன் செய்தான்... மதுரையில ஒரு மேனேஜ்மென்ட் ஸ்கூல்ல, விலங்கியல் பாடப் பிரிவுக்கு காலி இடம் இருக்காம்; என் தம்பி அரசியல்ல இருக்கிறதால, பெரிய பிரமுகரை பார்த்து பேசிட்டானாம்; 20 லட்சம் ரூபாய் இருந்தால், அந்த, 'சீட்' வாங்கித் தாரேன்னு உறுதியாக சொல்லியிருக்காராம்...'' என்றதும், சுறுசுறுப்புடன் எழுந்து உட்கார்ந்தான், தியாகு.
''வெரிகுட்... 20 லட்சம் ரூபாய் தானே... கவலைப்படாத... ஊர்ல, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்து சும்மா தானே கிடக்குது; கை வசம் ஐஞ்சு லட்ச ரூபாய் இருக்குது; மீதிய எப்படியாவது புரட்டிடலாம்; உன் தம்பிக்கிட்ட சொல்லி, எப்படியாவது ஏற்பாடு செய்யச் சொல்லு.''
''அடுத்த வாரம் திங்கட்கிழமை இன்டர்வியூ; போஸ்டிங் அடுத்த மாசமே போட்டுருவாங்களாம். இன்னிக்கே பிளைட் டிக்கெட் எடுத்துட்டு வாங்க...'' என்றதும், வேகமாக எழுந்தான்.
காலைக்கடனை முடித்து, டிபன் கூட சாப்பிடாமல், டிக்கெட் எடுக்க கிளம்பியவனிடம், ''ஏங்க... முக்கியமான விஷயத்தை மறந்துட்டோமே... நான் வேலைக்கு போயிட்டேன்னா, குழந்தைய யார் பாத்துப்பா... நீங்க, இங்க நிறைய சம்பளம் வாங்குறீங்க; நிச்சயம் இந்தியா வரமாட்டீங்க,'' என்றதும், ''ஊர்ல இருக்குற எங்க அம்மா, அப்பாவ உன் கூட வந்து இருக்க சொல்றேன்; அவங்க நம்ம குழந்தைய பாத்துப்பாங்க,'' என்றான் தியாகு.
''உங்க அம்மா தொல்ல தாங்க முடியாமத் தான், உங்க கூட துபாய்க்கே வந்தேன். அதோட, உங்க அம்மா சரியான பணப் பைத்தியம்; நீங்க வாங்குற சம்பளத்துல, 30 ஆயிரம் ரூபாயை புடிங்கிக்கிறாங்க. குழந்தைய பாக்க கூப்பிட்டா, என் சம்பளத்துல, பாதியையாவது கேட்பாங்க. அதோட, அவங்க அதிகாரத்துக்கு கட்டுப்பட்டு என்னால நடக்க முடியாது; நான், எங்க அம்மா, அப்பாவ கூப்பிட்டு வச்சுக்கிறேன்,'' என்றாள்.
''அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்; முதல்ல, இந்த விஷயத்தை, எங்க வீட்டுல சொல்லணும். எதா இருந்தாலும் அவங்க அனுமதி வேணும்,'' என்று கூறி, தன் அம்மாவிற்கு போன் செய்து, விஷயத்தை கூறினான்.
பின், சாந்தியிடம், ''நீ என்னவோ சொன்னீயே... பாத்தியா... உனக்கு வேலை கிடைக்க போறதுன்னதும் எங்கம்மா ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. நம்ம குழந்தைய பாத்துக்கிறேன்னு சொல்றாங்க; உனக்கு சம்பளம் அக்கவுன்ட்ல தானே கிரெடிட்டாகும். ஏதோ செலவுக்கு நூறோ, இருநூறோ கொடுத்தா போதும்; பெரிய தொகையா கேட்டா, எனக்கு போன் செய்; இப்ப, சந்தோஷம் தானே,'' என்றதும், திருப்தியடைந்தாள்.
அடுத்து வந்த நாட்களில் வேகமாக வேலைகள் நடந்து, பணத்தைக் கட்டி, வேலைக்கு சேர்ந்து விட்டாள் சாந்தி. குழந்தையை பார்த்துக் கொண்டனர், தியாகுவின் பெற்றோர்.
அன்று சாந்தி, பள்ளிக்கு சென்றவுடன், ''ஏங்க... நம்ம மருமக ரெண்டு மாசம் சம்பளம் வாங்கியிருக்கா. ஒத்த ரூபாயாவது கண்ணுல காட்டுறாளா... அவ பிள்ளைக்கு வேலைக்காரி மாதிரி இந்த வீட்டுல இருக்கோம்; அவ, ஹேண்ட்பேக்கை தோள்ல தொங்க போட்டுக்கிட்டு, ஜாலியா போயிட்டு வர்றா; இந்தா வெச்சிக்கங்கன்னு ஒரு ஆயிரமோ, ரெண்டாயிரமோ தந்தா குறைஞ்சா போயிடுவா...'' என்றாள், சாந்தியின் மாமியார் வசந்தா, தன் கணவரிடம்!
''நம்ம பையன் அனுப்புற பணமே நமக்கு ஏதேஷ்டம்; இதுல மருமக கிட்ட பணம் கேட்குறது நல்லாயிருக்காது...''
''சரி அவ அப்பா, அம்மாவும் ஊர்ல சும்மாத் தானே இருக்காங்க... அவங்களுக்கு மட்டும் குழந்தை மீது உரிமை இல்லயா... அவங்க வந்து கொஞ்ச நாள் பாத்துக்கட்டுமே... நாம பதினைந்து நாள்... அவங்க பதினைந்து நாள்ன்னு குழந்தையை பாத்துக்கலாம். அப்பத்தான், குழந்தையை பாத்துக்கறதுல எவ்வளவு கஷ்டம் இருக்குன்னு தெரியும்,'' என்றாள் வசந்தா.
கணவரிடம் சொன்னது போலவே, மாலையில் பள்ளி முடிந்து வந்த சாந்தியிடம், வசந்தா விஷயத்தை கூற, தன் அப்பாவுக்கு போன் செய்து விஷயத்தை கூறினாள், சாந்தி.
''கேட்க நல்லாத்தாம்மா இருக்குது... விவசாயத்த அப்படியே போட்டுட்டு நான் எப்படிம்மா அங்க வர முடியும்... வேணுமின்னா உங்க அம்மாவ அனுப்பி வைக்கிறேன்,'' என்றார்.
சாந்தியோட பெற்றோர் தென்காசி அருகிலும், தியாகுவின் பெற்றோர் திருநெல்வேலிக்கு பக்கத்திலும் இருப்பதால், பதினைந்து நாட்கள் குழந்தையை கவனித்து விட்டு போவதில், ஆரம்பத்தில் எந்த சிக்கலுமில்லை; நாலைந்து மாதம் எந்த பிரச்னையுமில்லாமல் போனது.
அன்று, பதினைந்து நாள் முடிந்து, ஊருக்கு கிளம்பிய போது, சாந்தியின் அம்மாவுக்கு உடம்புக்கு முடியாமல் போனது. உடனே, மருத்துவமனையில் சேர்த்தாள் சாந்தி. அவள் மாமியாரும், மாமனாரும் வந்து, மருத்துவமனையில் நலம் விசாரித்தனர். டிஸ்சார்ஜ் செய்த போது, 25 ஆயிரம் ரூபாய் பணம் கட்டுவதை பார்த்து விட்டாள், வசந்தா.
'நமக்கு ஒரு நயா பைசா தராதவ; அவ அம்மாவோட மருத்துவச் செலவுக்கு எப்படி அள்ளிக் கொடுக்கறா பாரேன்...' என்று பொருமினாள்.
வீட்டிற்கு வந்ததும், ''சாந்தி... உங்க அம்மா மட்டும் தான் மனுஷியா தெரியுதா... நீ சம்பளம் வாங்கின பின், ஒத்த ரூபாயாவது என்கிட்ட கொடுத்திருப்பியா... உங்க அம்மாவிற்கு உடம்பு சரியில்லன்னதும், மருத்துவச் செலவை நீயே ஏத்துக்கறயே...''என்றாள், வசந்தா.
''ஆமாத்தே... ஊர்ல அத்தனை வேலையையும் விட்டுட்டு, குழந்தையை பாக்க வந்தவங்களுக்கு உடம்பு சரியில்லாம ஆயிட்டா நான் தானே செலவு செய்யணும்; அது தானே முறை,'' என்றாள், சாந்தி.
''நாங்களும் தான், 150 கி.மீ., தூரத்திலிருந்து வர்றோம்; என்னைக்காவது பஸ்சுக்காவது காசு தந்துருக்கியா...''
''அதான் உங்க புள்ள துபாயிலிருந்து, மாசம், 30 ஆயிரம் ரூபாய் அனுப்புறாங்களே... உங்க ரெண்டு பேருக்கும் அவ்வளவு பணம் போதாதா... ரொம்ப பேராசை படாதீங்க... இந்த வேலைய வாங்கினதுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் கடன் இருக்குது; அத யாரு அடைப்பாங்க...'' என்றாள், சாந்தி வெடுக்கென!
அதனால், அவளிடம் சொல்லாமல் கூட, திருநெல்வேலிக்கு கிளம்பி விட்டனர், தியாகுவின் பெற்றோர். வேறு வழியில்லாமல் சாந்தியின் அம்மாவே குழந்தையை பார்த்துக் கொண்டாள். சில மாதங்கள் கடந்தன.
காலையில் ஊரிலிருந்து போன்... சாந்தியின் அப்பாவிற்கு, 'ஹார்ட் அட்டாக்' என்று!
''சாந்தி... நான் சொல்றேன்னு வருத்தப்படாத... நாலு மாதமா அப்பாவ கவனிக்காததால, அவருக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு. குழந்தைய கவனிச்சுக்க உன் மாமியார கூப்பிட்டு வச்சுக்க,'' என்று அம்மா கூறியதும் திகைத்தாள்.
''அம்மா... நீங்க ரெண்டு பேரும் என் கூட வந்து இருங்கம்மா...''
''தோட்டம் தொரவ யாரும்மா பாத்துப்பா... நான் சம்மதிச்சாலும் உங்கப்பா வரமாட்டாரே...'' என்று கூறி, அன்று இரவே புறப்பட்டு ஊருக்கு சென்று விட்டாள், சாந்தியின் அம்மா.
இரவு தூக்கம் வராமல் புரண்டவள், 'அப்பாவிற்கு விவசாயம்ன்னா உயிர்; இனிமேல், அப்பாவ பிரிஞ்சு அம்மா இங்க இருக்க மாட்டாங்க. அப்பாவ கவனிச்சுக்கவும் அங்க யாருமில்ல; தம்பியும் டவுன்ல இருக்கான்; இதையெல்லாம் யோசிக்காம போயிட்டேனே... என் கணவர் கூட இருந்தபோது எந்த பிரச்னையுமில்லாம இருந்தேன்; அவரை விட்டு இங்க வந்து இவ்வளவு அல்லல் பட வேண்டியிருக்கு. வேலைக்கும், சம்பளத்திற்கும் ஆசைப்பட்டு இப்போ மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்...' என, பலவாறாக புலம்பினாள்.
மறுநாள் தலைவலியோடு தான் எழுந்தாள். மனம் ஒரு நிலையில் செயல்படவில்லை. ஏனோ தானோன்னு அன்றைய நாளை கடத்தினாள்.
'இனிமேல் குழந்தையை யாரு கவனிச்சுக்குவா... நான் எப்படி பள்ளிக்கு போறது... கொஞ்சம் கூட யோசிக்காமல், தடால் புடாலென பணத்தைக் கட்டி, வேலைக்கு சேர்ந்தாச்சு... மாமியார் ரொம்ப கறார்; இனிமேல், அவங்கள இங்க கூப்பிட்டு வர்றது ரொம்ப கஷ்டம்; வந்தாலும் நிம்மதி இருக்காது... இப்ப என்ன செய்றது...' என்று யோசித்தவள், 'பேசாம, வேலையை ராஜினமா செய்திட வேண்டியது தான்...' என்ற முடிவுக்கு வந்தாள்.
கணவனுக்கு போன் செய்து, விஷயத்தை சொன்னதும், ''வேணாம் சாந்தி... வேலைய, 'ரிசைன்' செய்துடாத. குழந்தைகளுக்கு அறிவை ஊட்டும் ஆசிரியை நீ. உன்னால், அக்குழந்தைகள், வாழ்க்கையில ஏதாவது ஒரு விதத்தில் சாதனை செய்வர். ஆனால், நானோ வேறொரு நாட்டில், வேறு ஒருவனுக்கு அடிமைப்பட்டு, நசுங்கி கிடக்கேன். அடுத்த நாட்டு அதிகாரத்திற்கு பயந்து செய்யும் என் வேலையை விட, உன் வேலை அர்த்தமுள்ளது. அவன், எனக்கு கொடுக்குற லட்சங்களை நம்பி உன் வேலையை விடப் போறியா...
''பணத்துக்காக உங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு, நான் எதுக்கு இங்க தனியா இருக்கணும். நான் இந்த வேலையை, 'ரிசைன்' செய்துட்டு, உன் கூட வந்துடுறேன். நீ வேலைக்கு போ; நான் குழந்தையையும் பார்த்துக்கிட்டு, வீட்டை கவனிச்சுக்கிறேன். அடுத்த நாட்டுக்காரனுக்கு வேலை செய்றதை விட, தன் மனைவிக்கும், குழந்தைக்கும் வேலை செய்றது எவ்வளவோ புண்ணியம்; அடுத்த வாரத்தில் இந்தியா வந்துடுறேன்,'' என்றதும், அளவில்லா மகிழ்ச்சியடைந்தாள், சாந்தி!

- பால் கண்ணன்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement