Advertisement

திண்ணை!

உ.வே.சாமிநாத ஐயர், 'என் சரித்திரம்' நூலிலிருந்து: திருவாவடு துறையில், மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ் படித்து வந்தேன்.
ஒருமுறை, பெற்றோரை பார்க்க, ஊருக்கு வந்திருந்த போது, ஒருநாள், என் தகப்பனாருக்கு தெரிந்த ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார்; அவர், என் தந்தையிடம், 'உங்கள் பிள்ளை என்ன செய்கிறான்...' என்று விசாரித்தார். 'தமிழ் படிக்கிறான்...' என்று என் தந்தை சொன்னவுடன், திடுக்கிட்டு, 'என்ன... தமிழையா படிக்கிறான்... இங்கிலீசோ, சமஸ்கிருதமோ படிக்கலாமே... இங்கிலீஷ் படித்தால் இகத்துக்கு லாபம்; சமஸ்கிருதம் படித்தால், பரத்துக்கு லாபம்; தமிழை படித்தால், இரண்டுக்கும் லாபம் இல்லயே...' என்ற போது, எனக்கு தூக்கி வாரி போட்டது.
இவ்வளவு அருமையான அபிப்பிராயத்தை, சிறிதும் யோசனையில்லாமல் சொன்ன அந்த பேர்வழி யாரென்று அறிய, அவரைப் பற்றி என் தந்தையிடம் விசாரித்தேன். அப்போது தான் தெரிந்தது, அவருக்கு இங்கிலீஷ் மற்றும் சமஸ்கிருதம் மட்டுமல்ல, தமிழும் தெரியாது என்று!
வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று, யோசனை இல்லாமல், 'அபிப்பிராயம்...' எனும் பெயரில் சொல்லும் கனவான்களை சந்திக்கும் போதெல்லாம், எனக்கு இந்த மனிதர் ஞாபகம் தான் வரும்.

பேராசிரியர், ந.க.மங்கள முருகேசன் எழுதிய, 'சுயமரியாதை இயக்கம்' நூலிலிருந்து: ஈ.வெ.ரா., மலேஷிய மண்ணில், கால் வைக்கும் முன்னரே, அவருக்கும், அவருடைய இயக்கத்திற்கும் எதிரான பிரசாரம், அங்கே முடுக்கி விடப்பட்டிருந்தது. 'ஈ.வெ.ரா.,வை பினாங்கு நகரினுள்ளே விடக் கூடாது...' என்று, அரசை வேண்டி, தீர்மானம் போட்டிருந்தனர், பினாங்கு இந்து சபையினர்.
இந்நிலையில் தான், ஈப்போ நகரில், தமிழர் சீர்த்திருத்த சங்க மாநாட்டிற்கு ஈ.வெ.ரா.,வை அழைத்திருந்தனர், மலேஷிய தமிழர்கள்.
டிச., 15, 1929ல், தம் துணைவியார் நாகம்மை, மாயவரம் ராமநாதன், அ.பொன்னம்பலனார், சாமி சிதம்பரம் மற்றும் நடராஜன் போன்றோருடன் மலேஷியா சென்றார், ஈ.வெ.ரா.,
டிச., 26, 1929ல், 'மலேயா இந்தியர்' சங்க மாநாட்டில் பேசினார், ஈ.வெ.ரா., பின், பினாங்கு, ஈப்போ மற்றும் கோலாலம்பூர் உள்ளிட்ட, பத்துக்கும் மேற்பட்ட நகரங்களில், பொதுக் கூட்டங்களில் உரையாற்றினார். இப்பயணத்திற்கு, அன்றைய நாளில் அவருக்கு இருந்த எதிர்ப்பு குறித்து,

பிப்., 9, 1930ம் தேதியிட்ட, 'குடி அரசு' இதழின் தலையங்கத்தின் ஒரு பகுதி இதோ: பினாங்கில் இறங்கியவுடன், பல விதமான விஷயங்கள் என் காதுக்கு வந்தன. நம்மை கத்தியால் குத்துவதற்கு, ஒரு நபருக்கு, 500 வெள்ளி பேசி, ஏற்பாடு செய்திருப்பதாகவும், நாம் போகும் இடங்களில் எல்லாம், கலகம் செய்யுமாறு துண்டுப் பிரசுரங்கள் வழங்குவதற்காக, பலரை நியமித்து இருப்பதாகவும் செய்தி வந்தது.
மேலும், கிறிஸ்து மற்றும் முகமது நபிக்கு விரோதமாக பேசியதாகவும், இந்து மதத்தை ஒழித்து, இந்துக்களை முகமதிய மதத்தில் சேர்ப்பிக்க, முகமதியரிடம் பணம் வாங்கி, மலாய் நாட்டிற்கு வருவதாகவும், பொய் பிரசாரம் கட்டவிழ்க்கப்பட்டிருந்து. அத்துடன், பிரிட்டிஷ் அரசுக்கு விரோதமாக, ஒத்துழையாமை பிரசாரம் செய்ய இருப்பதாக துண்டு பிரசுரங்கள் மற்றும் பத்திரிகை மூலமாக, பிரசாரம் செய்திருந்தனர்.
தவிர, ஒரு ஆங்கில தினசரி பத்திரிகை, அரசுக்கும், சட்டசபை அங்கத்தினர்களுக்கும், நாம், பெரிய கலகக்காரர் என்றும், நம்மை மலாய் நாட்டில் விட்டால், மக்களின் சாந்த குணம் கெட்டு, சர்க்காருக்கு தொல்லை ஏற்படும் என்று எச்சரிக்கை செய்வதாக, வாரம் தவறாமல் தலையங்கமும், உபதலையங்கமும் எழுதி வந்தது.
அத்துடன், 'தமிழ்நேசன்' பத்திரிகைக் காரரான அய்யங்கார் ஒருவர், ஊர் ஊராக சுற்றி, பிரசாரம் செய்ததுடன், தன் பத்திரிகையில் கடவுளுக்கும், மதத்துக்கும் ஆபத்து என்று தினமும் எழுதினார்.
அதுமட்டுமா... 'தோட்டக் கூலிகளை கிளப்பி, தோட்டக்காரருக்கு, தொல்லை விளைவிப்பான்; காந்தியுடைய ஆள் இவன்...' என்று சொல்லி வந்தனராம்.

நடுத்தெரு நாராயணன்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement