Advertisement

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள சகோதரிக்கு —
என், வயது, 56; அரசு துறையில் பணிபுரிகிறேன். என் கணவர், மத்திய அரசு ஊழியர். ஒரே மகன்; திருமணமாகி, அமெரிக்காவில் வசிக்கிறான்.
நான், மிகவும் ஏழ்மை குடும்பத்தில் பிறந்தவள். ஒரு தம்பி, இரு தங்கைகள். என், 15வது வயதில், என் தந்தை இறந்து போக, சித்தப்பா வீட்டில் தஞ்சம் அடைந்தோம்.
பதினைந்து வயதான எனக்கு, 'செக்ஸ்' டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்தார், சித்தப்பா. ஒவ்வொரு நாளும் அதிலிருந்து தப்பிப்பது பெரும்பாடாக இருந்தது. அதனால், அவரிடமிருந்து தப்பிக்கவும், குடும்ப பாரத்தை சுமக்க வேண்டிய கட்டாயத்தினாலும், படிப்பை பாதியில் நிறுத்தி, குறைந்த சம்பளத்தில், தனியார் நிறுவனத்தில்,'டைப்பிஸ்ட்' வேலையில் சேர்ந்தேன்.
பின், தெரிந்தவர் மூலமாக, அரசு அலுவலகம் ஒன்றில், 'டைப்பிஸ்ட்' வேலை கிடைத்தது. சம்பளம் குறைவு தான். இருப்பினும், உடனடியாக சித்தப்பா வீட்டிலிருந்து, தாய், தம்பி, தங்கைகளுடன், தனியாக வாடகைக்கு வீடு பார்த்து சென்றேன். இதனால், கோபமடைந்த சித்தப்பா எங்களை ஒதுக்கினார்.
சில ஆண்டுகளுக்கு பின், அலுவலக தேர்வு எழுதி, சீனியர் கிளார்க்காக பதவி உயர்வு பெற்றேன். அரசு ஒதுக்கீட்டில், குறைந்த வாடகையில், வீடும் கொடுத்தனர். குடும்பம் சற்று தலைநிமிர்ந்தது.
எனக்கு திருமணம் செய்ய, முயற்சி எடுத்தார், அம்மா. நான் வேண்டாம் என்று கூறியும், 'மத்திய அரசு ஊழியர்; ஒரு தம்பி மட்டுமே உள்ளார்; எந்த பிரச்னையும் இல்லை. வரதட்சணை வேண்டாம் என்கின்றனர்...' என்று கூறி, என்னை சம்மதிக்க வைத்தார், அம்மா.
மாப்பிள்ளை வீட்டினரே திருமணத்தை நடத்தினர். முதலிரவு அன்று தான் தெரிந்தது, என் கணவர் ஆண்மையற்றவர் என்பது!
இவ்விஷயம், என் கணவரின் பெற்றோருக்கு தெரிந்திருந்தும் மறைத்து, ஏழையான என்னை தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதை அறிந்து, நொந்து போனேன்.
விதியை நொந்தபடி, அவருடன் குடும்பம் நடத்த ஆரம்பித்தேன். ஒரு சில ஆண்டுகளில் என் மாமனார் இறக்க, மாமியாரின் கொடுமை தலை தூக்கியது. காலையில், 'பெட்' காபியிலிருந்து டிபன், சாப்பாடு என, அனைத்தும் அவர் இருக்கும் இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் சரியாக இருக்க வேண்டும். அத்தனையும் செய்தும், கொடுமையின் உச்சமாக, தன் மகனின் குறையை அறிந்திருந்தும், குழந்தை இல்லை என்று என்னை குறை கூற ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில், தன் இளைய மகன் மூலமாக குழந்தை பெற்று தர வற்புறுத்தினார். இதைக் கேட்டு துடித்துப் போனேன். இப்போது இருப்பது போல், 'டெஸ்ட் டியூப் பேபி' மருத்துவ முறை அப்போது இல்லை. எப்படியிருந்திருக்கும் என் நிலை யோசித்து பாருங்கள்!
மாமியாரின், 'டார்ச்சர்' ஒருபுறம், மச்சினன் தொல்லை மறுபுறம். என் சம்மதம் இல்லாமலே, 'அந்த' அவலம் அரங்கேற, என் மகன் பிறந்தான். மாமியாருக்கு சந்தோஷம்; என் கணவருக்கு விஷயம் தெரிந்தும், கண்டுகொள்ளவில்லை.
பின், மச்சினனுக்கு திருமணம் முடிந்து, தனியாக சென்று விட்டார். இவ்விஷயம் மச்சினன் மனைவிக்கு தெரியாது.
என மகனை பார்க்கும் போதெல்லாம் குற்ற உணர்வு ஏற்படும். அவன் வளர வளர, அந்த குற்ற உணர்வை மனதில் ஒரு மூலைக்கு தள்ளி வைத்து விட்டேன்.
இதற்கிடையில், என் தம்பி, தங்கைகளின் பட்டப்படிப்பு, வேலை மற்றும் திருமணம் என, அத்தனையும் பார்த்து, அவர்களது வாழ்க்கைக்கும் நல்வழி காட்டி விட்டேன்.
சமீபத்தில் என் தாயாரும், சில ஆண்டுகளுக்கு முன் என் மாமியாரும் இறந்து போயினர்.
இத்தனை காலமும் என் மனதின் ஓரத்தில் இருந்த குற்ற உணர்வு மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. இதனால், இரவில் தூக்கமின்றி தவிக்கிறேன்.
என் கணவரோ எதையும் கண்டு கொள்வதில்லை. சமைத்து வைத்ததை சாப்பிடுவார்; பின், தன் அறைக்கு சென்று கதவை மூடிக் கொள்வார். அவ்வளவு தான்!
என் சம்பாத்தியத்தில் புறநகரில் மனை ஒன்று வாங்கியுள்ளேன். வங்கியிலும் கணிசமான தொகை உள்ளது. அலுவலகம் செல்லும் நேரம் போக, மற்ற நேரங்களில் என் மனநிலை மிக மோசமாகி கொண்டிருக்கிறது. எவ்வளவு நேரம், 'டிவி' பார்ப்பது, புத்தகம் படிப்பது...
பணி ஓய்வுக்குபின் என் மகனிடமோ, தம்பி, தங்கை குடும்பத்தினருடனோ சென்று தங்குவதை விரும்பவில்லை.
என்னையும் மீறி நடந்த தவறு, என்னை நாளும் கொல்கிறது. இதிலிருந்து விடுபடுவது எப்படி? எதிர்காலத்தை நிம்மதியாக கழிக்க, நல்ல பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன்.
— இப்படிக்கு
அன்பு சகோதரி.

அன்புள்ள சகோதரிக்கு —
உன் வாழ்க்கை ஒரு துன்பியல் நாடகம்; நீயே உழைத்து, உயர்ந்து, சொந்த காலில் நின்று, தம்பி, தங்கைகளுக்கு சிறப்பான எதிர்காலம் அமைத்து கொடுத்துள்ளாய். ஆண்மையற்றவனை மணந்த போதும், உதறி தள்ளாமல், அவனுடன் தொடர்ந்து குடும்பம் நடத்தியுள்ளாய்.
உன் வாழ்க்கை பக்கங்களை புரட்டி பார்க்கையில், நீ எந்த விஷயத்திலும் குற்றவாளி இல்லை. மகள் முறை சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட உன் சித்தப்பா முதல் குற்றவாளி; ஆண்மையற்ற மகனுக்கு உன்னை திருமணம் செய்து, உன் வாழ்க்கையை பாழாக்கியதோடு, இளையவனுக்கு உன்னை இரையாக்கிய உன் மாமியார், மிகப் பெரிய குற்றவாளி; அண்ணனின் மனைவியை பலாத்காரம் செய்து, ஒரு குழந்தையை கொடுத்த உன் மைத்துனன் ஒரு குற்றவாளி; தான் ஆண்மையற்றவன் என்ற உண்மை தெரிந்திருந்தும், சுயநலமாக உன்னை மணந்த உன் கணவன் ஒரு குற்றவாளி; இவர்களுக்கு மத்தியில் நீ வெறும் பலியாடு!
நடந்து முடிந்த தவறுக்கு, நீ ஒரு சதவீதம் கூட பொறுப்பாக மாட்டாய். பிரதான குற்றவாளியான உன் மாமியார் இறந்து விட்டார்; உன் மைத்துனனும் திருமணம் செய்து, செட்டிலாகி விட்டான். பாலியல் பலாத்காரத்தில் பிறந்தாலும், உன் கரு முட்டையில் உருவாகி, பத்து மாதம் உன் கருவறையில் இளைப்பாறியவன், உன் மகன். உன் கணவனின் மூதாதையர் மரபியல் அணு, உன் மகனிடமும் உள்ளது. அதனால், உன் மகனை, மைத்துனனின் மகனாய் பாராமல், உன் மகனாக பார்!
தினமும் கண்ணாடி முன் நின்று, 'நான் எந்த தவறும் செய்யவில்லை; அதனால், எவ்வித குற்ற உணர்ச்சியிலும் மூழ்க மாட்டேன்...' என, சுயவசியம் செய். மனம் அமைதியுற, ஆன்மிக சுற்றுலா செல். தம்பி, தங்கை குடும்பத்தினருடன் எப்போதும் இணக்கமாக இரு.
புறநகரில் வாங்கிய மனையில், தோட்டம் அமைத்து, ஆடு, மாடு, கோழி பண்ணை அமை. நேரம் உபயோகரமாய் கழியும். குறைந்தபட்சம், ஆதரவற்ற நான்கு சிறுவர்களுக்கான படிப்பு செலவை, 'ஸ்பான்சர்' செய்.
பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களை, அதற்குரிய அமைப்புகள் மூலம் கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய். எல்லாம் இறைவனின் நாடகம் என நினைத்து, அவனிடம் முழு சரணாகதி அடை; வாழ்க்கை பூரணத்துவம் பெறும்.
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement