Advertisement

தாத்தா - பாட்டி செய்யும் தவறுகள்!

இந்தியாவில், இன்று, வயதில் மூத்தவர்கள் பெருகியுள்ளனர். முன்பெல்லாம், 60 வயதில் வரும் மணிவிழாவில் கலந்து கொள்வதே பாக்கியமாக கருதப்பட்டது; பின், 70ல் கலந்து கொள்வது, மிக விசேஷம் என்றனர்; இல்லையில்லை... 80ல் கலந்து கொள்வதே கொடுப்பினை என்றனர்; இப்போது, 100ல் கலந்து கொள்வதே பெரிய ஆசீர்வாதம் என்கின்றனர்.
பெரியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது போல், இவர்கள் செய்யும் தவறுகளும் பெரிதாகி வருகின்றன.
வயதில் மூத்தவர்கள் சிலர், எட்டு வகையான தவறுகளை செய்கின்றனர்.
எப்போதும் வீட்டில் சும்மாவே உட்கார்ந்து, எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்து, 'நைநை' என்கின்றனர். இத்தகைய, 'நைனியப்பன்'களை, அடுத்த தலைமுறையும், இளைய தலைமுறையும் விரும்புவது இல்லை; கேட்டால் மட்டுமே அபிப்ராயம் சொல்ல வேண்டும். அதுவே, பெரியவர்களுக்கு மரியாதை!
அடுத்து, வீட்டுக்கு பாரமாய் இருக்கின்றனர் என்கிற குற்றச்சாட்டு. வங்கி, மின் கட்டணம் மற்றும் அஞ்சல் அலுவலகம் ஆகிய வெளிப்பணிகளை, உடல் அனுமதித்தும் செய்யாத போது, இக்குற்றச்சாட்டு எழும்.
'இதெல்லாம் என் வேலையா... நான் ஓடி ஓடி உழைச்சது போதும்; இனிமே, நீங்க பார்த்துக்க வேண்டியது தானே...' என்று, வறட்டு தத்துவம் பேசினால், அது எடுபடாது; இயன்ற உடலுழைப்பு நல்குவது, முதியவர்களுக்குத் தான் நல்லது.
பேரன், பேத்திகளை பள்ளியில் விடுவது; கொரியர் தபால்களை வாங்கி வைப்பது; வீட்டிற்கு வருகிற, தொழில்நுட்ப ஆசாமிகளுடன் உடன் இருந்து, வேலை வாங்குவது போன்ற, கூடுதல் பணிகளை செய்கிற போது, இக்குற்றச்சாட்டு எழாது.
சும்மாவே உட்கார்ந்து, அதைக் கொண்டா, இதைக் கொண்டா என்பது; கூட்டம் கூடி, வெட்டிக் கதை பேசுவது போன்றவை பெரியவர்கள் செய்யும் மூன்றாவது தவறு. வீட்டினருக்கு எந்த வகையிலெல்லாம் உபயோகமாக இருக்கலாம் என்று, சிந்தித்து செயல்படுவது நல்லது!
'இந்த வீட்டில் இன்னமும் நான் வைத்ததே சட்டம்...' என்று, ஆதிக்கம் செய்யும் பெரியவர்கள், இருக்கிற கொஞ்ச நஞ்ச மரியாதையையும் இழப்பது உறுதி.
முட்டி மோதி தெரிந்து கொள்ளட்டும் என, விட்டு விடுங்கள்.
எந்த யோசனையையும், அதிகார தொனியாக இன்றி, ஆலோசனையாக சொன்னால் போதும். நன்மை, தீமை இரண்டையும் எடுத்துச் சொல்லி, 'உனக்கு, எது சரின்னு படுதோ, அதைச் செய்...' என்று, தராசு தட்டை அவர்களிடமே நீட்டி விடுவது பாதுகாப்பு!
அடுத்த தவறு முக்கியமானது; இருக்கிறதை யெல்லாம் வழித்து துடைத்து, 'இந்தா
எல்லாம் உனக்கு தான்...' என்று, வாரிசுகளிடம் கொடுத்து, கும்பிட்டு விழக்கூடாது.
தங்களுடைய கடைசி காலத்திற்கு என, போதுமானதை வைத்து, மற்றவற்றை நீட்ட வேண்டும். பிற்காலத்தில், ஏதேனும் எதிர்பாராத மருத்துவ தேவை ஏற்பட்டால், மகன், 'எதுக்குப்பா, 'ரிஸ்க்' எடுக்குறே... இயற்கை வைத்தியம் போதும்பா...' என்று சொல்வான்.
பெரும்பாலும் முதியோர் இல்லத்தில் தள்ளப்பட்டவர்கள், தங்களுக்கென்று எதுவும் ஒதுக்கி வைத்துக் கொள்ளாமல் போனவர்களே!
கையில் காசு வைத்துக் கொண்டால், ராஜ மரியாதை கிடைக்கும்; 'நைனியப்பன்' என்ற பெயர் வராது. 'நீங்க சொன்ன சரிப்பா அல்லது சரிம்மா...' என்கிற வாக்குமூலம் வரும்.
இறுதியான தவறுக்கு வருகிறேன்... பேரன், பேத்திகளை கெடுத்து, குட்டிச்சுவராக்குகிற பெரியவர்கள் இன்று அதிகம்.
பிள்ளைகளை கண்டிப்பாக வளர்க்க நினைக்கும் பெற்றோர், மூத்த தலைமுறையின் தலையீடுகளால், பெரிதும் துன்பத்திற்கு உள்ளாகின்றனர்.
'மாமா... அவனுக்கு சாக்லெட் வாங்கி தராதீங்க...' என்று மருமகள் சொல்ல, ரகசியமாக பேரனை அழைத்துப் போய், சாக்லெட் வாங்கிக் கொடுப்பதோடு, 'அம்மாகிட்ட சொல்லாதே... ரெண்டு பேருக்கும் திட்டு விழும்...' என்று, பொய் சொல்லவும் கற்றுத் தருகின்றனர்.
இதில் ஆரம்பித்து, 'படிச்சது போதும் நீ தூங்கு; 'டிவி' பாரு... அப்பாகிட்டே, நீ இப்ப தான் தூங்க போனேன்னு சொல்றேன்...' என்று, கூட்டு களவாணி வேடம் போடுகின்றனர்.
விடலை பயலுக்கு, சைக்கிள் வாங்கித் தரமாட்டேன் என்கிறார் அப்பா; தாத்தாவோ, வாங்கித் தருகிறார். இப்படி, தனி முடிவு எடுப்பது தவறு!
அதிக செல்லம் கொடுத்து, இளைய தலைமுறையை கெடுக்கிற தவறை, பெரியவர்கள் ஒருபோதும் செய்யக்கூடாது. பிள்ளைகளுக்கு, யாருடைய அச்சிற்குள் போய் உட்கார்ந்து கொள்வது என தெரியாமல், குளறுபடியாக வளர்வர்.
தவறு செய்கிறவர்களை திருத்த வேண்டிய பெரியவர்களே தவறு செய்தால், இவர்களை யார் திருத்துவது!

லேனா தமிழ்வாணன்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement