Advertisement

இளஸ்-மனஸ்! (73)

அன்புள்ள ஆன்டிக்கு, கடந்த, 30 ஆண்டுகளாக, 'தினமலர்' குடும்பத்தை சேர்ந்தவள். என் வயது ௨௩. சிறுவயதில் இருந்தே, 'சிறுவர்மலர்' இதழை படித்து வருகிறேன்; திருமணம் ஆகிவிட்ட படியால் தற்போது, ஆன் - லைனில் படிப்பேன்.
கார்ப்ரெட் அலுவலகத்தில், நானும், என் கணவரும் பணிபுரிகிறோம். இரண்டு மாதத்திற்கு முன், திருமணம் நடந்தது; இருவரும் விரும்பி திருமணம் செய்துகொண்டோம். என் கணவர், என்னை மிகவும் நேசிக்கிறார்; பிரச்னை என்னவென்றால், 'உன்னுடைய சம்பளத்தை கணவரிடம் கொடுக்காதே... நீ தனியாக, வங்கியில் போட்டு வை... ' என்றார் என் அம்மா.
நானும், அப்படியே செய்து வருகிறேன். இது, என் கணவருக்கு பிடிக்கவில்லை. சம்பள பணத்தை அவரிடம் கொடுப்பேன் என்று எதிர்ப்பார்தார் போலும்; முகமே சரியில்லை. இதனால், இருவருக்கும் மனஸ்தாபம். 'நாம் இருவரும் சேர்ந்து, நம் வாழ்க்கையை பற்றி யோசிக்கலாம்; நீ எதற்காக, என் பேச்சை கேட்காமல், உன் அம்மா பேச்சை கேட்கிறாய்...' என்கிறார்.
'அம்மா நல்லது தானே சொல்றாங்க... இதுல என்ன தப்பு...' என்றேன். 'என்னை விட, உனக்கு, உன் பெற்றோர் தான் முக்கியமா... நான் என்ன சொன்னாலும், உன் பெற்றோர் கிட்ட கேட்ட பின் தான் முடிவு எடுக்குற... நீ என்னை ரொம்ப அவமானப்படுத்துற...' என்று கூறி, சண்டை போடுறார் ஆன்டி... இருவருமே வீட்டிற்கு ஒரே பிள்ளைகள். என் பெற்றோர், என் மீது உயிரையே வைத்துள்ளனர்.
என் பெற்றோர், எனக்கு, அடிக்கடி போன் செய்து, 'நீ இல்லாமல், நம் வீடே நல்லா இல்லை...' என்று கூறுவர். அதுவும், அவருக்கு பிடிக்கல. நாங்க ரெண்டு பேருமே, கை நிறைய சம்பாதிக்கிறோம்; அவருக்கு என்னுடைய பணம் தேவை இல்லை; என் பெற்றோருக்கும், என்னுடைய பணம் தேவையில்லை.
இதற்கு முன், நான் என்ன சொன்னாலும் கேட்பார். இப்போ இவ்விஷயங்களுக் கெல்லாம், சண்டை போடுவது, எனக்கு, எரிச்சலை தருகிறது.
இப்போ நான் என்ன செய்வது... யார் சொல்வதை கேட்பது... பதில் சொல்லுங்க ஆன்டி!

ஹாய் ஸ்வீட்டி... நல்லா படிச்சு, கை நிறைய சம்பளம் வாங்குற உனக்கு, இந்த சிம்பிள் விஷயம் கூடவா தெரியாது மகளே...
உன் வீட்டில், 'ஓவர்' செல்லமா உன்னை வளர்ந்தது உண்மை தான். உன்னை பிரிய மனம் இல்லாதவர்கள், எதற்காக, உனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். உன்னை வீட்டிலேயே வைத்துக் கொள்ள வேண்டியது தானே... தன் மகளுக்கு நல்ல பதவி, அந்தஸ்து, அழகுள்ள மணமகனுக்கு, ஊரே வியக்கும் வண்ணம் ஆடம்பரமா திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தால் போதாது... உன் வீட்டு விஷயங்களில், உன் பெற்றோர் தலையிட கூடாது.
திருமணம் ஆன பின், உன் சம்பளத்தை கணவரிடம் கொடுத்து, உங்கள் இருவருடைய சம்பளத்தையும் என்ன செய்யலாம் என்பதை, 'டிஸ்கஸ்' செய்யுங்கள்; உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உரிமை, உங்க இரண்டு பேருக்கு மட்டும் தான் உண்டு.
ஒரு நாளைக்கு, ஆயிரம் போன்பேசி மகளோட குடும்ப விஷயங்களில் தலையிடுவது இன்றைய பெற்றோரின், 'பேஷனாகி' விட்டது. இது, ரொம்ப ரொம்ப தவறு. ஒருவேளை, குடிகார கணவர், ஊதாரி தனம் செய்பவர் மற்றும் போதை பழக்கம் உள்ளவர் என்றால் கொடுக்க வேண்டாம்.
சில பெண்களின் பெற்றோர், கஷ்டப்படுகிறவர்களாக இருப்பர். அப்படிப்பட்ட சமயங்களில், திருமணத்திற்கு முன், 'சம்பாதிக்கிற பணத்தில், சிறிது பணத்தை என் பெற்றோருக்கு கொடுப்பேன்...' என்று சொல்லி, சில பெண்கள், அனுமதிகேட்டிருப்பர்; இது ஒருவகை. ஆனால், உன் விஷயத்தில், உன் பெற்றோரும் வசதியாக உள்ளனர். எனவே, கணவரிடம் கொடுத்து, இருவரும் திட்டமிட்டுச் செய்வது தான் மிக மிக நல்லது.
யாருக்கு உதவி செய்வதாக இருந்தாலும், சேமிப்பாக இருக்கட்டும், கணவன், மனைவிக்கு இடையே ஒளிவு மறைவு இருக்கக்கூடாது. நல்ல கணவர் என்னும் போது, அவர் பேச்சை கேட்டு நட.
திருமணத்திற்கு பின், நீ, உன் கணவருக்கு தான் முதலிடம் கொடுக்க வேண்டும்; அப்போது தான், உன் குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
உன் கணவருக்கு எது பிடிக்கலையோ, அதை முடிந்த வரையில் செய்யாதே; பெற்றோருக்கு அடிக்கடி போன் செய்வதை கொஞ்சம் குறைத்துக் கொள்.
உன் கணவருக்காக, விட்டுக் கொடுப்பதில் தவறு ஒன்றும் இல்லை. உன் அன்பான, 'அட்ஜஸ்ட்மென்ட்ஸ்' தான், கணவர் மனதில், உன் மீது, மிகுந்த அன்பை ஏற்படுத்தும்.
திருமணத்திற்கு முன் இருந்த அன்பு மற்றும் சூழ்நிலை வேறு; ஆனால், திருமணத்திற்கு பின் அதை தக்க வைத்துக் கொள்வதில் தான் இருக்கிறது உன்னோட திறமையே...
- என்றும் அன்புடன்,
ஜெனிபர் பிரேம்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement