Advertisement

ஐயோ உயிர் போகுதே!

காட்டில் சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. ஒருநாள், சிங்கம் நொண்டியபடி வந்தது. அதன் காலில் ரத்தம் வடிந்து கொண்டிருந்தது.
இதை பார்த்த நரி, ஓடி வந்து, ''சிங்கராஜாவே! உங்களுக்கு என்ன நேர்ந்தது... ஏன் இப்படி நொண்டியபடி வருகிறீர்...'' என்று பதறியபடி கேட்டது.
''என் காலில், முள் ஒன்று பலமாக தைத்து விட்டது. நடக்க முடியவில்லை; வலி உயிர் போகுது. எனக்கு உடனடியாக வைத்தியம் செய்து, முள்ளை எடுக்க வேண்டும். என்னால் நெடுந்தொலைவு நடக்க முடியாது; நான் இங்கேயே இருக்கிறேன். நீ சென்று வைத்தியரை அழைத்து வருகிறாயா...'' என்று கேட்டது சிங்கம்.
“சிங்கராஜாவே... கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு சேவை செய்வது என்னுடைய பாக்கியமாகும். நம் கரடி வைத்தியர் அநேகமாக குகையில் தான் இருப்பார். நான் ஓடோடி சென்று அவரை அழைத்து வருகிறேன்,” என்று கூறியபடி ஓடியது நரி.
சிறிது நேரத்தில், கரடியை அழைத்து வந்தது நரி.
சிங்கத்தின் முள் தைத்த காலை, தன் மடியின் மீது தூக்கி வைத்து, மெல்ல மெல்ல முள்ளை வெளியே எடுத்தது கரடி.
நிம்மதி பெருமூச்சு விட்டது சிங்கம்.
“கரடியே தக்க நேரத்தில் எனக்கு வைத்தியம் செய்தாய். இதற்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை,” என்றது சிங்கம்.
“சிங்கராஜாவே நீங்கள் நன்றி சொல்ல விரும்பினால், அந்த நன்றியை நரிக்கு தெரியப்படுத்துங்கள். நரியார் மட்டும் என்னை வந்து அழைத்திருக்கா விட்டால், நான் இங்கே வந்திருக்க மாட்டேன். எனவே, நீங்கள் எனக்கு கூறுகிற நன்றியெல்லாம் நரியாரைத்தான் போய் சேரும்,” என்றது கரடி.
கனிவோடு நரியை பார்த்தது சிங்கம்.
“நரியே! அந்தக் கரடி கூறியது போன்று, நான் உனக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இந்த உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன்,” என்று உணர்ச்சி பெருக்கோடு கூறியது சிங்கம்.
“சிங்கராஜாவே! உங்களுக்கு உதவி செய்வது என் கடமை. நான் என் கடமையை தான் செய்தேன்,” என்றது நரி.
அதன் பின், நரியும், சிங்கமும் விடை பெற்றன.
சில நாட்களுக்கு பின் -
இரைக்காக காட்டில் எங்கெல்லாமோ அலைந்து திரிந்தது சிங்கம். நீண்ட நேரமாக அலைந்தும், இரை ஒன்றும் கிடைக்கவில்லை. பசியால் சிங்கத்திற்கு, மயக்கம் வந்துவிட்டது.
அப்போது, பாறையின் மீது ஏதோ ஒரு விலங்கு படுத்திருப்பதை கவனித்தது.
'அடடே! நமக்கு இன்று அதிர்ஷ்டம் தான். ஓடோடி சென்று இரையை பிடிக்க வேண்டாம். பாறை மீது படுத்திருக்கும் விலங்கை அப்படியே அமுக்கிப் பிடித்து இரையாக்கி விடலாம்' என்ற முடிவோடு, மெல்ல மெல்ல பாறையை நோக்கி, பதுங்கி சென்றது சிங்கம்.
உடனே, அப்படியே நிலை தடுமாறியபடி நின்றது.
பாறையின் மீது நரி படுத்திருந்தது; களைப்பின் காரணமாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது.
சிங்கமோ பசியால் மிகவும் துடித்தது.
'நமக்கு உதவி செய்த இந்த நரியை நாம் எப்படிக் கொல்வது... நன்மை செய்தவருக்கு தீமை செய்வது தவறல்லவா... ஆனால், பசியால் வாடிக் கொண்டிருக்கிறோமே! ஒரு நிமிடம் கூட பசியை நம்மால் பொறுக்க முடியவில்லையே...
'நம் கண் முன், இரை இருக்கிறது... இதை விட்டு விடுவது முட்டாள் தனம்... எது எப்படியிருந்தாலும் பரவாயில்லை. நமக்கு உணவு கிடைத்தால் போதும்' என்று எண்ணியபடி, நரி மீது பாய்வதற்கு குறி பார்த்தது சிங்கம்.
தூங்கிக் கொண்டிருந்த நரியின் முகத்தில், சிங்கத்தின் நிழல் படரவே, ஒரு நொடியில் புரண்டு படுத்தது நரி. அந்த நேரம், திடீரென, சிங்கத்தின் கால்களை பார்த்தது.
தன் மீது பாய்வதற்கு கால்களை தூக்கியபடி தயார் நிலையில் இருக்கும் சிங்கத்தை பார்த்ததும், வெகமாக பாறையின் பின் பக்கமாக உருண்டோடியது நரி.
சிங்கமோ, தன் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், நரியின் மீது பாய்ந்தது.
நரி விலகியதால், பாறையின் மீது பலமாக மோதியது சிங்கம். அதன் மண்டை உடைந்து ரத்தம் வடிந்தது.
“நரியே! என்னை காப்பாற்று... காப்பாற்று...” என்று குரல் கொடுத்தது சிங்கம்.
“சிங்கராஜாவே! சற்று நான் தாமதித்திருந்தால் நீங்கள் என்னை கொன்றிருப்பீர்களே... இனிமேல் நான் உங்களுக்கு வைத்தியம் செய்ய உதவ முடியாது. மறுபடியும் உங்களால் எனக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே, இந்த தண்டனையை நீங்கள் அனுபவிக்க தான் வேண்டும்!” என்று கூறியபடி சென்றது.
தன் தவறை நினைத்து வருந்தியபடி உயிரை விட்டது சிங்கம்.
குட்டீஸ்... எப்பவுமே நமக்கு நன்மை செய்தவர்களுக்கு ஒருபோதும் தீமை செய்ய கூடாது. சரியா..

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement