Advertisement

பாயாசம் தான்!

முகலாய மன்னர் அக்பரும், பீர்பலும் மாலை பொழுதில் மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுடைய உரையாடல் எங்கெங்கோ சென்று, கடைசியில் சாப்பாடு விஷயத்தில் வந்து முடிந்தது.
உடனே, பீர்பல், முன்தினம் நண்பர் ஒருவர் வீட்டில் சாப்பிட்டு வந்த விருந்தை பற்றி விமர்சனம் செய்தார். அக்பர் மிக சுவாரசியமாக அதை கேட்டு கொண்டிருந்தார். பீர்பல் விருந்தில் பரிமாறப்பட்ட ஒவ்வொரு பண்டங்களை பற்றியும், அவற்றின் சுவைகளை பற்றியும் விரிவாக சொல்லி கொண்டிருந்தார். அப்போது, சேவகன் ஒருவன், சக்கரவர்த்தியிடம் ஏதோ கூற, எழுந்து சென்று விட்டார் சக்கரவர்த்தி. சற்று நேரத்திற்கு பின், பீர்பலும் அவ்விடத்தை விட்டு சென்றார்.
பின், அரசவையில் பீர்பலை பார்த்ததும் தான், அக்பருக்கு தாம் விருந்து பற்றிய பேச்சை இடையில் நிறுத்திவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது. உடனே பீர்பலைப் பார்த்து,''அப்புறம் என்ன...'' என்று கேட்டார் அக்பர்.
''அப்புறம் என்ன... பாயாசம் தான்!'' என்றார் பீர்பல்.
உடனே அக்பர், தம் கழுத்தில் அணிந்திருந்த முத்துமாலை ஒன்றை கழற்றி, பீர்பலுக்கு பரிசாக அளித்தார்.
இதை பார்த்த பொறாமைக்காரர்களுக்கு வயிறு எரிந்தது.
'வெறும் பாயாசம் என்று கூறியதும் முத்து மாலையை பரிசாக கொடுத்து விட்டாரே... நாம் உண்மையாகவே பாயாசத்தை சக்கரவர்த்திக்கு கொடுத்தால், நமக்கும் நிறைய பரிசுகள் கிடைக்கும்' என்ற எண்ணத்துடன், அனைவரும் அன்றே தத்தம் மனைவிமாரிடம் பாயாசம் செய்து கொடுக்க சொல்லி, அதை அரசரிடம் எடுத்து சென்றனர்.
அனைவரிடமும் பாயாசம் இருப்பதை கண்டு, எரிச்சல் அடைந்து, ''ஏன் எல்லாரும் பாயாசம் கொண்டு வந்து இருக்கிறீர்கள்...'' என்றார் அக்பர்.
''அரசே, தங்களுக்கு பாயாசம் மிகவும் பிடிக்கும்... என்று தான்,'' ஒருவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அக்பரின் முகத்தில் கோபம் தெறித்தது.
''யார் சொன்னது...'' என்று கோபத்துடன் கேட்டார் அக்பர்.
''அன்று பீர்பல் பாயாசம் என்று சொன்னவுடனே, மகிழ்ச்சியுடன் முத்து மாலையை பரிசாக அளித்தீர்கள் அல்லவா... அதனால் தான் எடுத்து வந்தோம்,'' என்றார் ஒருவர்.
நிலைமையை புரிந்த அக்பர், ''அதற்காக பாயாசம் கொண்டு வந்து கொடுத்து நிறைய பரிசுகள் பெற்று செல்லலாம் என்று வந்தீர்களா... முட்டாள்களே... பீர்பலின் பேச்சு, பாயாசத்தை விட இனிப்பாக இருந்தது. அதற்கு தான் பரிசளித்தேன்.
''நீங்களும் பீர்பலை போல் சாதுர்யமாகப் பேசி, பரிசுகள் பெறலாம்... அதை விட்டுவிட்டு, இது என்ன வேலை... பாயாசம் கொண்டு வருவதும், வடை கொண்டு வருவதும்... முதலில், இவற்றை எடுத்து செல்லுங்கள். இல்லாவிட்டால், உங்கள் முகத்திலே தூக்கி ஊற்றுவேன்,'' என்று கோபத்துடன் கூறினார் அக்பர்.
அரசரின் கோபத்தை கண்டு, அனைவரும், பயந்து ஓடி போய் விட்டனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement