Advertisement

ஸ்வீட் போதாது! ட்ரீட்டும் தாங்க!

ஆகஸ்ட் 15ல், நம் பட்டு தேசம், அடிமை விலங்குகளிலிருந்து விடுபட்டு, விடுதலை அடைந்த மிக மிக முக்கியமான தினம். வாட்ஸ் ஆப், முகநுால் மற்றும் டுவிட்டர் இதிலெல்லாம், 'ஹேப்பி ஹேப்பி' சொல்வதோடு நிறுத்தாதீர்; பிறந்த நாள், புத்தாண்டு, பண்டிகை போன்றவற்றை கொண்டாடுவதை விட, சுதந்திர தினத்தை தான், மிகப் பெரியதாக, சீரும் சிறப்புடன் கொண்டாட வேண்டும். அது, தேசத்தின் பெருமையை கூறும் வகையிலோ, தேசத்தின் மேன்மையை சுட்டி காட்டும் வகையிலோ, தேசத்தை ஒருபடி முன்னேற்ற, ஒரு ஆரம்பம் என்கிற வகையிலோ, ஒரு செய்யுங்கள்.

நள்ளிரவு சுதந்திரம் ஏன் என்று தெரியுமா...
இந்தியாவுக்கு சுதந்திரம், ஆகஸ்ட் 15ம் தேதி என்று முடிவானது. உடனே, எந்நேரத்தில் விடுதலை பெற்றால், நாட்டுக்கு நல்லது என்ற கேள்வி எழுந்தது. நேரு உட்பட, பல தலைவர்களின் நீண்ட நேர விவாதத்திற்கு பின், கோல்கட்டாவில் இருந்த, சுவாமி மதனானந்த் என்பவரை அழைத்து கேட்க முடிவாயிற்று.
அதற்கு, அவர், 'ஆகஸ்ட் 15ல் இந்தியாவுக்கு சுதந்திரம் என்றால், அதனுடைய செல்வம், கீர்த்தி, புகழ் மற்றும் இயற்கை வளம் எல்லாம் பெருகும்; 'நள்ளிரவுக்கு மேல் சுதந்திரம் கிடைத்தது' என்று அறிவித்தால், நாட்டுக்கு நல்லது...' என்றார். அதன்படியே, நள்ளிரவில் விடுதலை பிரகடனம் செய்யப்பட்டது.

புத்திசாலித்தனமும், தியாகமும்!
வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி, ஊமைத்துரை. கட்டபொம்மனை தூக்கிலிட்ட பின், ஆங்கிலேய படை, ஊமைத்துரையை பொறி வைத்து பிடித்தது. அப்போது நடந்த போரில், குற்றுயிராக்கப்பட்டார் ஊமைத்துரை. அவரது வீரர்களும் படு காயமடைந்தனர். அதில், ஒரு வீரரின் தாய் முத்தம்மாள், போர் நடந்த இடத்துக்கு ஓடி சென்று, உயிருக்கு போராடி கொண்டிருந்த, தன் மகனை காப்பாற்ற முயற்சிக்க, அவரோ, 'நான் இனி பிழைக்க மாட்டேன்; என் சாமி, ஊமைத்துரையை காப்பாற்று தாயே...' என்றார்.
உடனே, ஊமைத்துரையை தன் வீட்டுக்கு தூக்கி சென்றார் முத்தம்மாள். அத்தகவல் தெரிந்து, ஆங்கிலேய தளபதி, கர்னல் அக்னியு படையுடன் அங்கு வந்தான். உடனே, ஊமைத்துரை உடல் முழுவதும், மஞ்சளை அரைத்து பூசி, வீட்டு வாசலில் வேப்பிலைகளை சொருகினார் முத்தம்மாள். தன் மகன், அம்மை நோயால் இறந்ததாக கூறி, ஒப்பாரி வைத்தார்.
அப்போது, வெள்ளையர்கள் பெரிதும் அஞ்சியது, அம்மை நோய்க்கு தான்; அதனால், அவர்கள் மிரண்டு, அவ்வூரில் இருந்து வெளியேறினர்.

என்ன ஒரு தியாகம்...
தன் உயிரை விட, தன் தலைவனை காக்க சொன்ன போர் வீரர்; தன் மகன் உயிரை விட, தன் நாட்டுக்காக போரிடும் வீரரின் உயிரை பெரிதாய் கருதிய தாயின் தியாகம். நமக்கு தெரிந்திராத எண்ணற்ற தியாக தீபங்களால் ஏற்றப்பட்டது தான் இந்த சுந்திர பொன் விழா.

உயிரற்ற உடலாக...!
விடுதலை போராட்டத்தில், மலபார் பகுதியை சேர்ந்த, இஸ்லாமியர்கள், ஒரு இயக்கத்தை நடத்தி வந்தனர்.
அந்த இயக்கத்திற்கு, 'மலபார் மாப்பிள்ளைமார் எழுச்சி இயக்கம்' என்று பெயர். மலபார் பகுதி, குறு நில மன்னர்களுக்கு ஆதரவாகவும், ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் நடத்திய எழுச்சி மிகு போராட்டம், வெள்ளைய ஆட்சியாளர்களை நிலை குலைய வைத்தது.
இதனால், ஆத்திரம் அடைந்த ஆங்கிலேய அரசு, அந்த இயக்கத்தை சேர்ந்த, 40 பேரை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
கைது செய்யப்பட்ட, 40 பேரையும், சரக்கு ரயிலில் ஏற்றி, திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நிலக்கரி, நீராவியின் இஞ்சினால் இயக்கப்பட்ட, அக்காலத்து சரக்கு ரயில் எப்படி இருக்கும் என்பதை கூற தேவை இல்லை.
பல மணி நேர பயணத்துக்கு பின், அந்த சரக்கு ரயில், திருச்சி குட்ஷெட் யார்டில் நின்றது. அவர்களை, ரயிலில் இருந்து இறக்கி, சிறைச்சாலையில் அடைப்பதற்கு, ஆங்கிலேய போலீசார் தயார் நிலையில் நின்றிருந்தனர்.
ரயில் பெட்டி வேகனின் கனமான கதவுகள் திறக்கப்பட்டன. லத்திகளுடன் வந்த போலீசார், உள்ளே சென்று பார்த்த போது, அவர்கள் அத்தனை பேரும் உயிரற்ற உடலாக கிடந்தனர்.
காற்று புகுவதற்கு வழி இல்லாத சரக்கு ரயில் பெட்டியில் அடைக்கப்பட்டு இருந்ததால், 40 பேருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டு, உண்ண உணவு, குடிக்க தண்ணீர் இன்றி, வரும் வழியிலேயே, தங்கள் இன்னுயிரை இழந்தனர். அவர்களின் தியாகத்தை போற்றுவோம்!
வாழ்க சுதந்திரம்: வெல்க இந்தியா!

நம்ம ராணுவம்!
இந்திய ராணுவம், மிகவும் பாரம்பரியமிக்க ராணுவம். உலக நாடுகளில் உள்ள, ராணுவப்படை வீரர்கள் எண்ணிக்கையில், இந்திய ராணுவப்படை, மூன்றாவது இடத்தில் உள்ளது. முதலாம் உலகப் போரில், மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட, இந்திய ராணுவ வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்; இதில், 74ஆயிரத்து, 187 வீரர்கள் உயிரிழந்தனர்.
இரண்டாம் உலகப் போரில், ஐந்து லட்சத்துக்கும் மேற்ப்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் இடம்பெற்றனர். இதில், 36 ஆயிரம் வீரர்கள் உயிரிழந்தனர்.
இரு போர்களிலும், பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். இது தவிர, பாகிஸ்தான் மற்றும் சீனா, போன்ற பல்வேறு நாடுகளுடன் நடந்த போர்களில், ஆயிரத்திற்கு மேற்பட்ட வீரர்கள் நாட்டுக்காக, தங்களது விலைமதிப்பற்ற உயிரை தந்துள்ளனர்.
இந்திய நாட்டின் சுதந்திர நிலையை, தக்க வைக்க மற்றும் பாதுகாக்க இந்திய ராணுவ வீரர்களின் தியாகம், அனுதினமும் நடந்தேறியபடியே தான் இருக்கிறது; அவர்களின், ஈடு இணையற்ற தியாகத்தை ஈடு செய்ய, நாம் ஒவ்வொருவரும் சிறந்த குடிமகன்களாக வாழ வேண்டும்.

கானா, ராப்புன்னு போடுங்கய்யா!
கிரிக்கெட், கால்பந்து மற்றும் கபடி இப்படி, ஒவ்வொரு விளையாட்டுக்கும், டிரென்டிங்கா பாட்டு தயார் செய்து, செம, 'ஹிட்' செய்றாங்க.
'யூ - டியூப்'ல் வித்தியாசமாக, நடப்பு விஷயங்களுக்கு பாட்டு இறக்கராங்க. ஒவ்வொரு ஆண்டும் தேச பக்தி பாடல்கள், புதிய வடிவத்தில், குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பும் வகையில், வடிவமைத்து, ஒலி பரப்ப வேண்டும். தேசபக்தி பாடல்கள் ஆல்பமாக, பெரும் இசையமைப்பாளர்கள் வாயிலாக, வெளிவரும் போது, சுலபமாய் மக்களை சென்றடையும்.
பழைய தேசபக்தி பாடல்களுடன், புதிய தேசபக்தி பாடல்கள் ஒன்றிணைந்து இசைக்கும் போது, குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் விரும்புவர்.
தேச நலன் பற்றிய குறும்படம் தயாரித்து, சுதந்திர தின கொண்டாட்ட, மேடைகளில் ஒலிபரப்பலாம்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement