Advertisement

இதுவரை விடை தெரியவில்லை!

ஐரோப்பா கண்டத்திலுள்ள, லாப்லாண்ட் போன்ற பனிமூடிய, வடக்கு பிரதேசங்களில், லெமிங் என்று ஒரு பிராணி வாழ்கிறது. அணில், கினியா பிக் - சீமை எலி போன்ற சின்னஞ்சிறு பிராணி இந்த லெமிங்.
இவற்றிடம், ஒரு விநோத பழக்கம் உள்ளது. கூட்டங் கூட்டமாக கடலில் அல்லது மலையுச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்கின்றன. ஏன், எதற்காக என்பது இன்று வரை ஆராய்ச்சியாளர்களுக்கு, புரியாத புதிராக இருக்கிறது.
இது, பட்டு போன்ற ரோமமுடைய பிராணி. ஆர்ட்டிக் பிரதேசத்தின் மழைக்காலம் முழுவதும், பூமியில் வளை தோண்டி வாழ்கிறது. காய்ந்த இலை சருகு, சுள்ளிகள் இவற்றை, தன் வளைக்குள் சேமிக்கிறது.
கதகதப்புக்கு வளை தோண்டவும், வளையை மூடும் உறை பனியை அகற்றவும், மழை காலத்தில் இவற்றின் கூர்மையான நகங்கள், தட்டையாகி விடுகின்றன. பனி மூட ஆரம்பித்தும் லெமிங்குகள், தங்கள் கால்களின் நகங்களை, துடுப்பு போல பயன்படுத்தி, உறை பனியை வெளியேற்றுகின்றன.
இவற்றின் வளைகள், சில இடங்களில், ஆயிரம் மைல்கள் வரை நீண்டதாக இருக்கும். பயணம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் வந்தால், ஒரு வளையிலிருந்து மற்றொரு வளைக்கு கிளம்பிவிடும். வீட்டுக்கு திரும்ப வேண்டுமானால், மூக்கை உபயோகித்து, தான் வந்த வழியை மோப்பம் பிடித்து திரும்பி விடும்.
மழைகாலம் முடிந்து வேனில் ஆரம்பமானால், குட்டி லெமிங்குகளுக்கு குஷி தான். தரையில் புல் பூண்டுகள் தலை நீட்டி, பூக்களோடு புன்னகை பூக்கும் போது, லெமிங்குகள் தங்கள் வளையிலிருந்து, வெளியே வருகின்றன.
புல்லை வெட்டி எடுத்து போய் வீட்டுக்குள் சேமிக்கின்றன. அது, காய்ந்து, அடுத்த மழைக்காலத்துக்கு கதகதப்பை கொடுக்கும். வசந்த காலம் லெமிங்குகளுக்கு புது வாழ்வளிக்க வருவதில்லை. பயங்கரமான மரணத்துக்கு, தற்கொலைக்கு அவற்றை அழைத்து செல்லவே வருகிறது.
நீண்ட மழை காலத்தில் ஏராளமான லெமிங்குகள் உற்பத்தியாகி விடுகின்றன. வளைக்குள் இருக்க இடமில்லாத அளவுக்கு ஒன்றோடோன்று சண்டையிடவே நேரம் சரியாக இருக்கும்.
சாப்பிட கூட நேரமிருக்காது. வளையிலிருந்து வெளிப்பட்டதும், வெறி பிடித்ததுபோல, தறிகெட்டு ஓடுகின்றன. அதன் பின், களைப்பில் தூங்கி விடுகின்றன. இவற்றில் சில, அந்த தூக்கத்திலிருந்து விழிப்பதே இல்லை; மரண தூக்கம் தான்.
பனிமண்டல ஆந்தை, நரி, ஓநாய் போன்றவை குளிர் காலத்தூக்கத்திலிருந்து விழித்து, உணவு தேடி வெளியே வரும் போது சுடச்சுட ஆகாரமாகின்றன இந்த லெமிங்குகள். துருவக் கரடிகளும், லெமிங்குகளை விட்டு வைப்பதில்லை. இப்படி ஆண்டுதோறும் ஆயிரக் கணக்கில் லெமிங்குகள், பிற பிராணிகளுக்கு உணவாகி மடிகின்றன.
தங்களை காத்துக் கொள்ள வளைக்குள் ஓடி ஒளிவதும் இல்லை. எல்லா லெமிங்குகளும் பெரும் படையாக திரண்டு, தற்கொலை செய்து கொள்ள, ஊர்வலமாக கிளம்புகின்றன.
வயதான லெமிங்குகள் வழி நடத்தி செல்ல, வாலிப, குட்டி, குமரி, கன்னி லெமிங்குகள் சாரைசாரையாக பின்பற்றி செல்கின்றன. தங்களை உணவாக்கி கொள்ள விரோதிகள் காத்திருக்குமே, பின் தொடருமே என்ற கவலை கொஞ்சமும் இல்லாமல், ஏதோ ஒரு வெறியோடு மந்தை மந்தையாக முட்டி மோதி முன்னேறுகின்றன.
இந்த நீண்ட பயணத்தை சில நோஞ்சான்களால் தாக்குப் பிடிக்க முடியாததால், இவற்றை பிற மிருகங்கள் உணவாக்கிக் கொள்ளுகின்றன.
ஆரம்பத்தில் லெமிங்குகளின் பெருங்கூட்ட அணிவகுப்பில், ஏதோ குறிக்கோள், கட்டுப்பாடு, ஒழுங்கு இருப்பதாக தோன்றுகிறது. இரவு வேளையில் தான், இந்த மாபெரும் அணி பயணம் செய்கின்றன. பகலில் உஷ்ணம் காரணமாக வழி நடப்பதில்லை.
நிழல் படிந்த மறைவிடங்களில் தூங்குகின்றன. ஆனால், இந்த லெமிங்குகள் கடலை நெருங்கும்போது, இந்த கட்டுப் பாடெல்லாம் போய் விடுவதுமல்லாமல், முன்னேறி ஓடுகின்றன. சாப்பிடுவது கூட இல்லை; ஓடி கொண்டே இருக்கும்.
சமுத்திரத்தை அடைந்ததும் தங்கள் பயணத்தை முடித்து விடுவது இல்லை. பொங்கிச் சீறும் கடலுக்குள் பேரலைகளை நோக்கி சிறிதும் தயங்காமல் போகின்றன. வேறு ஒரு கூட்டம் கடலை ஒட்டியுள்ள பாறைகள் மீது ஏறுகின்றன.
உடலை மரக்க செய்யும் ஐஸ் தண்ணீருக்குள் குதிக்கின்றன. ஒரு சில, உடனே மூழ்கிச் சாகின்றன. ஆனால், பெரும்பாலானவை அவற்றின் ரோமங்களுக்கிடையே உள்ள காற்று கொப்புளங்களால், கடலில் அப்படியே மிதக்கின்றன.
எல்லையில்லாத கடலில், பல மைல்கள் மிதந்தபடி செல்கின்றன. ஆனால், நேரமாக ஆக, காற்று கொப்புளங்கள் மறைய - ஆரம்பித்ததும்,கடலுக்கடியில் போய் ஜல சமாதியாகின்றன. மாபெரும் கூட்டமாக புறப்பட்ட லெமிங்குகள், இருக்கும் இடம் தெரியாமல் மறைகின்றன.
இப்படி, இந்த அப்பாவி சாது பிராணிகள் ஏன் கூட்டங் கூட்டமாக தற்கொலை செய்கின்றன... பொட்டல் வெளியில் மரணத்தை நோக்கி சென்ற இவற்றிற்கு, ஏதேனும் தூண்டுதல், துடிப்பு ஏற்படுகிறதா அல்லது கடலின் மறுகரையை அடைந்து விட்டால் பத்திரமாக வாழலாம் என்ற நம்பிக்கையில் இப்படி கடலில் குதித்து இறந்து விடுகின்றனவா...
இந்த வினாக்களுக்கு இதுவரை எந்த ஆராய்ச்சியாளரும் விடை அளிக்கவில்லை... ஒவ்வொரு ஆண்டும், கோடிக் கணக்கில், 'லெமிங்குகள்' இப்படி கூட்டமாக போய் கடலில் குதித்து தற்கொலை செய்கின்றன. இதன் மர்மம், புரியாத புதிராகவே உள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement