Advertisement

அதிமேதாவி அங்குராசு!

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

இந்த, 'படம்' ரொம்ப மோசமானது!
ஏதோ சினிமா படம் என நினைக்காதீர்! இந்த படம், நம் வயிற்றிலிருந்து வெளிவரும். நம்மை, ஆஸ்பிடல் கேஸாக்கி, பின் தேறாத கேஸாக மாற்றி, பூட்ட கேஸாக்கி விடும் ஜாக்கிரதை! அது வேறொன்றும் இல்லை. அது தான், 'கலப்படம்!'
கலப்படத்தை கண்டுபிடிக்க சில எளிய வழிமுறைகள்...
* மைதாவில், விலை மலிவான மரவள்ளிக் கிழங்கு மாவு சேர்க்கப் படுகிறது. மாவை பிசையும் போது, அதிக நீர் சேர்க்க வேண்டி இருந்தாலும், மாவு அதிகமாக விரிந்து கொடுக்காமல் இருந்தாலும், கலப்படம் செய்யப் பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ளலாம்
* ரவையில், இரும்பு துகள்கள் சேர்க்கப்படுகின்றன. காந்தத்தை ரவையினுள் செலுத்தினால், அவற்றை பிரித்தெடுக்கலாம்
* ஏற்கெனவே உபயோகப் படுத்தப்பட்ட தேயிலை, சாயம் கலந்த உளுந்து தோல் அல்லது கடலை பருப்பின் வெளிப்புற தோல் போன்றவை, தேயிலையில் சேர்க்கப்படுகின்றன. சிறிது தேயிலை தூளை, நனைக்கப் பட்ட வடிகட்டியில் தூவினால், நிறம் பிரியாமல் இருந்தால் மட்டுமே அது ஒரிஜினல். நிறம் பிரிந்தால், அது கலப்பட தேயிலை
* அதிக எடைக்காக செங்கல் தூளும், சிவப்பு நிறத்திற்காக வண்ணபொடியும், மிளகாய் தூளில் சேர்க்கப்படுகின்றன. மிளகாய் தூளுடன், சிறிது தண்ணீர் சேர்த்து குலுக்கினால், செங்கல் தூள் அடியில் படிந்துவிடும்
* பெருங்காயத்தில், பல்வேறு பிசின்கள் கலப்படம் செய்யப் படுகின்றன. ஒரிஜினல் பெருங்காயத்தை எரிய விட்டால், கற்பூரம் போன்று எரியும். பிசின் தவிர சலவைக்கல், மணல், மாவுப் பொருட்களும் பெருங்காயத்துடன் சேர்க்கப்படுகின்றன. பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டினால், இவற்றை கண்டுபிடிக்கலாம்
* கோதுமையில், ஊமத்தை விதைகளை கலந்து விடுவர். கருப்பு கலந்த காபி நிறத்தில் ஊமத்தை விதை காணப்படும்
* சர்க்கரையில், சாக்பீஸ் தூள் சேர்க்கப்படுகிறது. சர்க்கரையை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்தால், சர்க்கரை கரையும். ஆனால், சாக்பீஸ் தூள் கரையாது

மண் அள்ளி போடாதே!
பெரிய மூட்டையை சுமந்தபடி வந்த அவன், கரையோரம் தன் மூட்டையை இறக்கி வைத்துவிட்டு, ஆற்றில் இறங்கி தண்ணீர் குடிக்க போனான். ஏதோ வியாபாரம் செய்வதற்காகத்தான் வருகிறான் என நினைத்த ஆல்பர்ட, அந்த மூட்டையை பிரித்து பார்த்தான்.
அதில், 'அக்ரூட்' பருப்புகள் நிறைந்திருந்தன. ஏற்கெனவே உள்ளூரில் அக்ரூட் பருப்பு வியாபாரம் செய்துவரும் ஆல்பர்ட்டுக்கு, புதிதாக வந்தவன் போட்டியாளனாக தெரிந்தான்.
'அவனை இங்கே காலுான்ற விடக்கூடாது' என நினைத்த ஆல்பர்ட், அருகே இருந்த கல்லையும், மண்ணையும் வாரி, மூட்டையில் போட்டு பருப்புகளை பாழாக்கிவிட்டு, நேராக தன் கடையில் போய் உட்கார்ந்தான்.
சிறிது நேரத்தில், அந்த புதியவன், ஆல்பர்ட்டின் கடைக்கு வந்தான். மூட்டையை இறக்கி வைத்துவிட்டு, 'அக்ரூட் பருப்புக்கு ஆர்டர் பண்ணியிருந்தீங்க போல... இன்னிக்கு வண்டி ரிப்பேர். அதான், முதலாளி என்னை அனுப்பி வைத்தார்...' என்றான்.
அப்போது, ஆல்பர்ட்டின் முகம் எப்படி இருந்திருக்கும் என்பதை, உங்கள் மனக்கண்ணில் பாருங்கள்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement