Advertisement

வெற்றி, மமதை தரக்கூடாது!

1994ல் தமிழகத்தின் பெரும்பாலான வீடுகளில் இந்தச் சிறுவன் தான் ஹீரோ. தமிழ்நாடு அரசு, இந்தச் சிறுவனின் சாதனைகளை பாடநூலிலேயே சேர்த்தது. தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் இந்தச் சிறுவனின் பெயர் மிகவும் பிரபலம். அந்தச் சிறுவன் தான் குற்றாலீஸ்வரன்.
1990களில், விரல்விட்டு எண்ணும் அளவில் தான் நீச்சல் வீரர்கள் இருந்தார்கள். அதைவிட பெருங்கடலில் நீச்சலடிப்பவர்களே அப்போது கிடையாது. அந்தச் சூழலில், 12 வயது நிரம்பிய குற்றாலீஸ்வரன் உலகை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தான். இங்கிலீஷ் கால்வாயை நீந்திக் கடந்து, கின்னஸ் சாதனை படைத்தான்.
இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்காகக் கொடுக்கப்படும் உயரிய அர்ஜுனா விருதை, மிகச்சிறு வயதில் பெற்ற முதல் நபர் குற்றாலீஸ்வரன். அவர் என்ன செய்தார், என்ன செய்கிறார் என்பதைப் பற்றி நேர்காணல் மூலம் தெரிந்து கொள்வோம்.

1. நீச்சலுக்கு எப்படி வந்தீர்கள்?
“நான் படித்து, வளர்ந்தது சென்னையில் தான். ஒவ்வொரு விடுமுறைக்கும் சொந்த ஊரான ஈரோட்டிற்குக் குடும்பத்தோடு போவேன். அங்கு கிணற்றிலும் குளத்திலும் அப்பா, சித்தப்பா, மாமா என எல்லாரும் நீந்துவார்கள். என்னைப் போன்ற சிறுவர்களுக்கு ட்யூப் கட்டிவிட்டு கிணற்றில் இறக்கி விட்டுவிடுவார்கள். மற்ற குழந்தைகள் அழுது மேலே ஓடிவிடுவார்கள். நான் ரொம்ப நேரம் தண்ணீரிலேயே விளையாடுவேன். எனக்கு 7 வயதாகும் போது, சென்னையில் கோடை நீச்சல் பயிற்சி முகாம் நடந்தது. அப்பா அதில் என்னைச் சேர்த்து விட்டார். அப்படித்தான் நான் நீச்சலுக்கு வந்தேன். அப்பா வேறு ஏதாவது விளையாடில் சேர்த்துவிட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று தெரியவில்லை.”

2. முழுநேரம் நீச்சல் பயிற்சி எடுத்துக் கொள்ள ஆரம்பித்தது எப்போது?
“நீச்சல் பயிற்சியில் ஒரே வாரத்தில் நான் பெரும்பாலான ஸ்ட்ரோக்ஸை கற்றுக்கொண்டேன். என் வேகத்தைப் பார்த்த பயிற்சியாளர் அசந்து போனார். இயற்கையாகவே ஏதோ ஒரு திறன் என்னிடம் இருப்பதாக அப்பாவிடம் சொன்னார். முறையான பயிற்சி செய்தால், போட்டிகளில் பங்கேற்கலாம் என்றார். அதன்பின் தீவிரமாய் நீச்சலைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். பள்ளியிலும் எனக்கு ஊக்கமளித்தார்கள். அப்போது என் பயிற்சியாளர் கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால், நான் இவ்வளவு பெரிய இடத்திற்கு வந்திருக்க முடியாது.”

3. நீச்சல் மாரத்தான் உங்களுடைய ஏரியா. அதைப் பற்றி?
“எனக்குமே அது புதியதாக இருந்தது. இந்தியாவில் பெரிய அளவில் நீச்சல் மாரத்தான் குறித்த விழிப்புணர்வு அப்போது இல்லை. ஒருமுறை சென்னை மெரீனா கடலில் நீச்சல் போட்டி நடந்தது. கடலில் ஐந்து கி.மீ. தூரம் நீந்த வேண்டும். அந்தப் போட்டியில் நான் கலந்துகொண்டேன். எங்களோடு பாதுகாப்புக்காக ஆட்கள் படகில் வழிகாட்டினார்கள். கடலில் நீந்துவது புதிய அனுபவம். அதிலும், நான் மிகச் சிறியவன். அலைகளை எதிர்த்து நீச்சல் அடித்த அனுபவம் குதூகலமாக இருந்தது. அந்தப் போட்டியில் 4 வது இடத்தைப் பிடித்தேன். போட்டி முடிந்ததும் எல்லாரும் சோர்வானார்கள். நான் உற்சாகமாய் மணலில் விளையாடினேன். அங்கிருந்தவர்கள் என்னைப் பார்த்து வியந்தார்கள்.
கடலில் நீச்சல் அடிக்க வேண்டும் என்ற ஆசையை அப்பாவிடம் சொன்னேன். அப்போது தான் நீச்சல் மாரத்தான் பற்றி கேள்விப்பட்டு, அதில் கவனம் செலுத்தினேன். பல சர்வதேசப் போட்டிகளில் பங்கெடுத்து, பதக்கங்கள் பெற்றேன்.”

4. படிப்பு, நீச்சல் இரண்டில் எது பிடித்தது?
“அப்படி என்னால் பிரித்துப் பார்க்க முடியாது. பெரும்பாலான சமயம், நான் நீச்சல் பயிற்சியில் தான் இருப்பேன். மாவட்ட, மாநிலப் போட்டிகளில் கலந்துகொள்வேன். அதைத் தொடர்ந்து, தேசிய அளவு, சர்வதேச அளவுகளில் நீச்சல் போட்டிகள் என் இலக்காக இருந்தன. அதற்கெல்லாம் பலமணி நேர பயிற்சி தேவைப்படும். அதேசமயம், பாடங்களைப் படித்து, நல்ல மதிப்பெண்களையும் எடுத்து விடுவேன்.”

5. சிறுவயதில் பிரபலமாக இருப்பது பலமா? பலவீனமா?
“பலம், பலவீனம் என்று எதையுமே உணரவில்லை. பள்ளியில் படிக்கும்போது, என்னைப் பற்றிய பாடம் இருந்தது. என் ஜூனியர்ஸ் யாராவது வந்து என்னிடம் விசாரிப்பார்கள், கூச்சமாக இருக்கும். வெற்றியை தலைக்குக் கொண்டு செல்லக் கூடாது என்பது, எனக்கு நீச்சல் கற்றுக் கொடுத்த பாடம்.”

6. ஒன்பது வயதில் பாக் நீரிணை, இங்கிலீஷ் கால்வாய் என கடலில் நீச்சலடித்தது பெரிய சாதனை தானே?
“சிறுவயது முதலே இதை நான் பெரிய சாதனையாகப் பார்க்கவில்லை. எல்லோரும் திறமையானவர்கள் தான். அதை வெளிப்படுத்தவும், வளர்த்துக் கொள்ளவும் சிலருக்குத் தான் வாய்ப்புக் கிடைக்கிறது, சிலருக்கு கிடைப்பதில்லை. இன்னும் நம்மூரில் பெரிய பெரிய விஷயங்களைச் செய்ய பலரால் முடியும். ஆனால், அவர்களை அடையாளம் காண்பதிலும், வாய்ப்புக் கொடுப்பதிலும் தான் பிரச்னை.”

7. சிறு வயதில் உங்களுக்குக் கிடைத்த அறிவுரை ஏதாவது நினைவில் இருக்கிறதா?
“இதை நான் அறிவுரை என்று சொல்ல மாட்டேன். அக்கறை என்று தான் நினைக்கிறேன். என் சாதனையைப் பாராட்டி, அன்றைய முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா என்னை அழைத்தார். 'விளையாட்டில் எவ்வளவு சாதனைகள் வேண்டுமானலும் செய்யலாம், ஆனால், படிப்பை மட்டும் எக்காரணத்தைக் கொண்டும் விட்டுவிடக்கூடாது' என்று கூறினார். அவர் சொன்னது இப்போதும் என் நினைவில் இருக்கிறது. படிப்பை விடாமல் நான் பிடித்துக்கொண்டதற்கு அவர் தான் காரணம்.”

8. இப்போது என்ன செய்கிறீர்கள்?
“நீச்சலில் ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் தொடர முடியவில்லை. அதற்கு நிறைய ஸ்பான்ஸர்ஷிப், பண உதவி தேவைப்பட்டது. அது கிடைக்கவில்லை. முழுநேரமாக நீச்சலைத் தொடர முடியவில்லை. மேற்படிப்பு படிக்க அமெரிக்கா சென்றேன். அங்கு சில ஆண்டுகள் வேலை பார்த்தேன். இந்தியா திரும்பி விட்டேன், பிசினஸ் செய்கிறேன்.”

9. வரும்காலம்?
“என் சிறிய வயதில் நீச்சல் தான் வாழ்க்கை, எதிர்காலம் என்று நான் தீர்மானிக்கவில்லை. கிரிக்கெட் மாதிரி நீச்சலுக்கான முக்கியத்துவம் நம்மூரில் இல்லை. வெளிநாடுகளில் இருப்பது போல பெரிய அளவில் நீச்சல் பயிற்சிப் பள்ளியை உருவாக்க வேண்டும். சர்வதேச அளவில் இந்தியாவிலிருந்து பல போட்டியாளர்களைத் தயார் செய்ய வேண்டும். நீச்சல் என்பது அனைவருக்கும் தேவையான ஒரு திறன், அதனால் பலரிடம் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.”

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement