Advertisement

பூனை வளர்ப்பதா? யானை வளர்ப்பதா?

எனக்குச் செல்லப் பிராணிகள் வளர்ப்பது பிடிக்காது. யார் வீட்டிலாவது நாய் இருந்தால் அந்த வீட்டுக்குப் போவதையே தவிர்த்துவிடுவேன். நாய் வளர்ப்பவர்களோ அந்த நாயைப் பற்றி ஓயாமல் பெருமையாகப் பேசிக்கொண்டே இருப்பார்கள். சில வீடுகளில் பூனை இருக்கும். பூனையை யாராவது வளர்ப்பார்களா, அது நாய் மாதிரி நன்றியெல்லாம் காட்டுமா என்று ஞாநி மாமாவிடம் கேட்டேன்.
“பூனையை யாரும் வளர்க்க முடியாது. அது பாட்டுக்கு நம் வீட்டில் இருக்கும். அதை எந்த வித்தையும் செய்ய எளிதில் நம்மால் பழக்க முடியாது. அது விரும்பினால் நம் மடியில் வந்து படுத்துக்கொள்ளும். நாமாக எடுத்து மடியில் வைத்துக்கொண்டால், அதற்குப் பிடிக்காவிட்டால் உடனே எழுந்து போய்விடும். ரொம்ப ரொம்ப சுயமரியாதை உள்ள பிராணி பூனைதான். அது நிற்பது, சோம்பல் முறிப்பது, நம்மைப் பார்ப்பது எல்லாவற்றிலும் ஒரு திமிர், அலட்சியம் தெரியும். பூனையைப் பற்றி கவிஞர் சுகுமாரன் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். மாடு, சேவல், எலி எல்லாம் பல இந்துக் கடவுள்களுக்கு வாகனமாக அமைந்திருக்கின்றன. ஆனா பூனை எந்தக் கடவுளுக்கும் வாகனமாகவில்லை என்பதை அதில் சொல்லியிருப்பார். ஓவியர்களுக்குக் கூட பூனையை ரொம்பப் பிடிக்கும். ஆர்.பி.பாஸ்கரன் பூனை சீரீஸ் என்று நிறைய பூனைப் படங்கள் வரைந்திருக்கிறார்.” என்றார் மாமா.
பூனைகள் வீட்டுப் பிராணியாக மாறி சுமார் 8,000 வருடங்களாகின்றன. பூனை ஒரு சோம்பேறி. தினமும் 20 மணி நேரம் கூட தூங்கும். ஒரு பூனை சராசரியாக 7, 8 வருடங்கள் வரை உயிரோடு இருக்கும். ஒரே ஒரு பூனை
38 வருடங்கள் வாழ்ந்து சாதனை படைத்திருக்கிறது. அமெரிக்காவில் டெக்ஸாசில் இருக்கும் 'பெரி' என்பவர் வளர்த்த இந்தப் பூனையின் பெயர் 'கிரோம் பஃப்'. பெரி வளர்த்த இன்னொரு பூனை 34 வருடங்கள் வாழ்ந்தது. பெரி இந்தப் பூனைகளுக்குக் கொடுத்த உணவினால் அவை நீண்டகாலம் வாழ்ந்தன என்று கருதப்படுகிறது. முட்டை, காபி, கீரை எல்லாம் கொடுத்து வளர்த்திருக்கிறார்.
மற்றபடி பூனைக்கு இறைச்சிதான் பிடித்த உணவு. எலியை, குருவியை துரத்திப் பிடித்து சாப்பிடும்.
பூனைகள் சிறு பறவைகளைச் சாப்பிடுவதால் சில பறவை இனங்கள் அழிந்தே போய்விட்டன. ஆனாலும் பூனையைக் கொஞ்சி விளையாட மனிதர்கள் விரும்புகிறார்கள். உலகத்தில் மொத்தம் 50 கோடி பூனைகள் வளர்ப்புப் பிராணிகளாக இருப்பதாக கணக்கிட்டிருக்கிறார்கள்.
பூனையோடு நேரில் கொஞ்சுவதைவிட இன்டர்நெட்டில் கொஞ்சுவதுதான் எளிது என்றது வாலு. “நீ எலியாயிற்றே. உனக்கும் பூனைக்கும் ஆகாதே.” என்றான் பாலு. “இல்லையில்லை. நான் கணினி சுட்டெலி. எனக்கும் பூனைகளுக்கும் ரொம்ப நெருக்கம் என்றது” வாலு. இணையத்தில் மிக அதிகமாக பார்க்கப்படும் படம் பூனைகளின் படம்தானாம். இன்டர்நெட்டின் சின்னம் என்றே பூனையைச் சொல்லலாம். பூனை விளையாட்டு வீடியோக்களை சராசரியாக ஒன்றரை கோடி பேர் பார்க்கிறார்கள். இணையத்தில் மொத்தமாக 20 லட்சம் பூனை வீடியோக்கள் இருக்கின்றன. இவை தவிர டாம் அண்ட் ஜெரி கார்ட்டூன் வீடியோக்கள்.
ஜெரி எலி. டாம் பூனை. எப்படி எப்போதும் பூனை, எலியைக் கொல்லப் பார்க்கிறது. ஆனால், எலி தப்பித்துக் கொண்டு பூனையையே சிக்கலில் மாட்டிவிடுகிறது என்பதுதான் எல்லா டாம் அண்ட் ஜெரி கார்ட்டூன்களிலும் கதை. “நிறைய டாம் அண்ட் ஜெரி பார்க்கும் குழந்தைகளும் பெரியவர்களும் வன்முறையை ரசித்துப் பழக கற்றுக்கொண்டு விடுவதாக” உளவியல் நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். “டாமும் ஜெரியும் ஒருத்தர் மீது மற்றவர் கடுமையான வன்முறையை எப்போதும் செய்கின்றன. அதை நாம் ரசித்துப் பார்த்துக் கொண்டே இருப்பதால், நமக்கு வன்முறை அதிர்ச்சியாக இல்லாமல் சகஜமானதாகப் பழகிப் போய்விடுகிறது.” என்றார் மாமா.
இந்த கார்ட்டூன்களில் இருந்து பெறுவதற்கு நல்ல அம்சங்களே கிடையாதா என்று கேட்டேன். “எல்லாம் கலந்துதான் இருக்கும். நண்பர்களுக்கு எப்படி நெருக்கடியான தருணத்தில் நாம் உதவி செய்யவேண்டும் என்றும் இதில் கற்றுக்கொள்ளலாம். நம்மை விட சைசில் பெரிதாக இருப்பவரைப் பார்த்து பயப்படத் தேவையில்லை என்று கற்றுக்கொள்ளலாம். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால், எந்த நெருக்கடியிலும் தப்பிக்க முடியும் என்று கற்றுக்கொள்ளலாம்” என்றார் மாமா.
“சொந்தமாக ஒரு யானை வைத்துக்கொண்டால் எந்த நெருக்கடியிலும் தப்பிக்கலாம். அதைப் பார்த்தாலே எல்லாரும் பயந்துகொண்டு ஓடிவிடுவார்கள். அதனால்தான் அந்தக் கால அரசர்கள் யானைப் படை வைத்திருந்தார்கள். நானும் பெரியவனான பிறகு செல்லப் பிராணியாக ஒரு யானை வளர்க்கப் போகிறேன். ஆனால் அதை தெருத்தெருவா பிச்சை எடுக்க அனுப்பமாட்டேன்.” என்றான் பாலு.
அதற்குத் தீனி போட்டே உனக்குக் கட்டுபடியாகாது என்றது வாலு. யானை ஒரு நாளில் உணவாக 170 கிலோ செடிகள், தழைகள், பழங்கள், பட்டைகள் எல்லாம் சாப்பிடும். 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். மண்ணைத் தோண்டி எடுத்து கொஞ்சம் மண்ணும் சாப்பிடுமாம். மண்ணிலிருந்துதான் உப்புச் சத்து, இரும்புச் சத்து எல்லாம் அதற்குக் கிடைக்கின்றன.
“காட்டுக்குள்ளேயே நானும் குடியேறிவிடுவேன். யானைக்கு உணவு கிடைப்பது எளிதாகிவிடும்.” என்றான் பாலு. “காட்டை நாம் வேகமாக அழித்துக்கொண்டிருக்கிறோம். அதனால்தான் யானைகள் உணவும் தண்ணீரும் கிடைக்காமல் காட்டோர கிராமங்களுக்கு வருகின்றன. அதன் இடத்தை அழித்துவிட்டு, யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் என்று அதைத் திட்டி செய்தி போடுகிறோம்.” என்றார் மாமா. காட்டை அழிப்பது மட்டுமல்ல. தங்கத்தைவிட விலை உயர்ந்ததான தந்தத்துக்காக நிறைய யானைகளைக் கொல்கிறோம். அதனால் யானைகள் வேகமாக அழிந்து வருகின்றன.
கடந்த 50 வருடங்களில் மட்டும் 70 சதவிகித யானைகள் அழிந்திருக்கின்றன. தாய்லாந்தில் சென்ற நூற்றாண்டில் ஒரு லட்சம் யானைகள் இருந்திருக்கின்றன. இப்போது இருப்பது வெறும் 4 ஆயிரம்தான். ஆப்பிரிக்க யானைகள் அதிகம் அழியாமல் 4 லட்சம் இன்னும் இருக்கின்றன. ஆனால் இந்தியா உட்பட ஆசியாவில் இருக்கும் ஆசிய வகை யானைகளில் எஞ்சியிருப்பது வெறும் 40 ஆயிரம்தான்.
“யானை, பூனை மாதிரி அற்ப ஆயுள் உள்ள மிருகம் அல்ல. நியாயமாக 65 வருடங்கள் வரை அது வாழும். தந்தத்துக்காக முன்கூட்டி கொல்கிறார்கள். வருடத்துக்கு 70 ஆயிரம் யானைகள் இப்படிக் கொல்லப்படுகின்றன.”என்றார் மாமா.
“தந்தத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று நாம் ஒவ்வொருவரும் முடிவெடுத்தால்தான் இதை நிறுத்த முடியும்.” என்றேன். உலகத்தில் நிறைய விஷயங்கள் பிளாஸ்டிக் முதல் தந்தம் வரை இப்படி ஒவ்வொருவரும் முடிவெடுத்தால்தான் மாறும் என்பது போல இருக்கின்றன.
இந்தப் பிரச்னைக்கெல்லாம் என்னதான் தீர்வு என்று மாமாவைக் கேட்டேன். பூனை, யானை எதுவானாலும் இயற்கையாக அது இருக்கும் இடத்தில் இருக்கவிட்டால் யாருக்கும் பிரச்னை இருக்காது என்றார் மாமா. என்னுடைய இடம் இந்தக் கணினிதான் என்றது வாலு. எனக்கான இடம் எது, பாலுவுக்கான இடம் எது என்று யோசிக்க ஆரம்பித்தோம்.

வாலுபீடியா 1: உலக பூனைகள் தினம் - ஆகஸ்ட் 8
உலக யானைகள் தினம் - ஆகஸ்ட் 12

வாலுபீடியா 2: ஒரு யானை சராசரியாக 1,800 முதல் 6,300 கிலோ வரை இருக்கும். யானையின் தும்பிக்கையில் ஒரு லட்சம் தசைநார்கள் உள்ளன. அதில் 8 லிட்டர் தண்ணீரை உறிஞ்சி வைத்துக்கொள்ள முடியும். சுமார் 20 கிலோமீட்டர் சுற்றளவில் எங்கே தண்ணீர் கிடைக்கும் என்பதை மோப்பம் பிடித்து உணரும் சக்தி யானைக்கு உண்டு. யானையின் தோல் ஒன்றரை அங்குலம் தடிமனானது. யானையின் குடல் நீளம் 100 அடி.

வாலுபீடியா 3: காட்டிலிருந்து பிடித்து வரும் யானையைப் பழக்க, ஏற்கனவே பழக்கிய யானையைப் பயன்படுத்துவார்கள். இதற்கு 'கும்கி' யானை என்று பெயர். தமிழ்நாட்டில் இருக்கும் கும்கிகளில் புகழ் பெற்றது ஆனைமலையில் இருக்கும் கலீம். இதுவரை 60 முறை காட்டு யானை மீட்பில் கலீம் செயற்பட்டிருக்கிறது. ஐந்தரை டன் எடையுள்ள கலீமுக்கு இப்போது வயது 55.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement