Advertisement

கல்வி அளித்த விடுதலை!

சாதிப் பாகுபாடுகளால் பலரின் வாழ்க்கை திசைமாறியிருக்கிறது. ஆனால், கல்வியால் அதை வென்று, முன்னேறி இருக்கிறார் கெளஷல் பன்வர். இந்தியாவின் முன்னோடி கல்வி நிலையமான, டில்லி பல்கலைக்கழகத்தின் மோதிலால் நேரு கல்லூரியில் சமஸ்கிருத விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார் கெளஷல். இந்த வளர்ச்சி எப்படி சாத்தியமாயிற்று?
ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த கெளஷல், பால்மிக்கி என்னும் தாழ்த்தப்பட்ட சாதிப்பிரிவைச் சேர்ந்தவர். ஒருநாள், குளத்தில் இறங்கி கெளஷலும், மற்ற பால்மிக்கி சாதிக் குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த, முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த குழந்தைகள், தண்ணீர் அசுத்தமாகி விட்டது என்று கத்தினார்களாம். இதைக் கேட்டு பயந்து ஓடாமல், தண்ணீரில் நின்றுகொண்டு, “தண்ணீர் அசுத்தமாகிவிட்டது என்றால், இனிமேல் நீங்கள் யாரும் தண்ணீர் எடுக்க வரவேண்டாம்'' என்று தைரியமாகப் பதில் சொல்லியிருக்கிறார் கௌஷல்.
கௌஷல் பள்ளிக்குச் சென்றால், ஆசிரியர் “நீ ஏன் படிக்க வருகிறாய்” என்று திட்டுவாராம். இவர் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவதை, பள்ளி ஆசிரியர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வகுப்பில் கேள்விகளுக்கு கெளஷல் பதில் சொன்னால் ஆசிரியர் அடிப்பாராம். பல சமயம், “உங்க அப்பா என்ன வேலை செய்கிறாரோ அதையே செய்ய வேண்டியது தானே?” என்று கேட்டு மிகவும் மோசமாக ஆசிரியர் நடந்து கொள்வாராம்.
மனம் நொந்துபோய், ஒருமுறை தன் அப்பாவிடம், “நாம் எந்த சாதி? ஏன் இந்தப் பாகுபாடு” என்று பொருமியிருக்கிறார் கெளஷல். அதற்கு அவர், “மக்களிடையே இருக்கும் வேறுபாட்டை யார் உருவாக்கினார்கள் என்று தெரியாது; ஆனால், அதிலிருந்து விடுதலை அடைய கல்வி உனக்குக் கற்றுக்கொடுக்கும். நீ நன்றாகப் படி” என்று சொன்னார். மனஉளைச்சல், பணப் பற்றாக்குறை போன்றவை இருந்தும், படிப்பில் படுசுட்டியாய் இருந்தார் கெளஷல்.
பள்ளிப் படிப்பை முடித்ததும், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, சமஸ்கிருதத்தில் பட்டம்பெற வேண்டும் என்று கௌஷல் யோசித்தார். பள்ளியில், சமஸ்கிருத மொழி, உயர் சாதியினருக்கானது என அடிக்கடி சொல்லப்பட்டது, அவருடைய நினைவில் இருந்தது. அதைத் தலித்துகளும் பெண்களும் படிக்கக்கூடாது என்று மறுக்கப்பட்டதும் ஞாபகம் வந்தது. சமஸ்கிருத மொழியை வைத்துக் கொண்டு பல ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட மொழியை கற்றுக்கொண்டு, எதனால் ஒடுக்கப்படுகிறோம் என்பதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள விரும்பினார் கெளஷல்.
இந்த முடிவை அறிந்த பலரும், அவரை அவமானப்படுத்தினார்கள். ஆனால், அவருடைய அப்பா மட்டும், “சமஸ்கிருதத்தைக் கற்று, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வரவேண்டும்” என்று வாழ்த்தினார். சமஸ்கிருதத்தில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, முனைவருக்கான ஆய்வுகள் என, அனைத்தையும் மேற்கொண்டார். கௌஷல் இப்போது, டில்லி பல்கலைக்கழகத்தின் மோதிலால் நேரு கல்லூரியின் சமஸ்கிருத துறை விரிவுரையாளர்.
பள்ளியில் சாதி அடையாளத்தை வெளிப்படுத்தும், இளஞ்சிவப்பு (பிங்க்) நிற சீருடை அணிந்து பெரும் அவமானத்துக்கு ஆளான கௌஷல், இப்போது விரிவுரையாளர். எந்த மொழி அவருக்கு மறுக்கப்பட்டதோ, அதே மொழியில் புலமைபெற்று, அடக்குமுறையை வென்று காட்டியிருக்கிறார். கல்வியும், வைராக்கியமும் அவரை உயர்த்தியிருக்கின்றன.
இன்னும் பல கெளஷல்கள் நம்முடைய சமூகத்திற்குத் தேவை.

சீருடையிலேயே வித்தியாசம்?
ஹரியாணாவில், பள்ளி மாணவர்களுக்கு ஒரே வண்ண சீருடை கிடையாது. கெளஷல் மாதிரியான தலித் மாணவர்கள் பிங்க் சீருடை அணிந்திருப்பார்கள். மற்ற மாணவர்கள், நீல நிற சீருடை அணிந்திருப்பார்கள். சீருடையிலேயே பாரபட்சம் காட்டப்பட்டு, அவர்கள் எந்த சாதி என்று அடையாளம் காட்டப்படும். இதனால், மற்ற மாணவர்களின் கேலிக்கு ஆளாக நேரிடும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement