Advertisement

மாத்தி யோசி

பாலு, வாலு மீது கோபமாக இருந்தான். அடிக்கடி அவனுக்கு இப்படிக் கோபம் வரும். பெரும்பாலும், பாலு ஒரு தகவல் சொல்வான். வாலு அதை மறுத்து இன்னொன்று சொல்லும். எது சரி என்று பார்த்தால், சமயத்தில் வாலுவுடையதுதான் சரியாக இருக்கும். அப்போதெல்லாம், பாலுவுக்கு கோபம் வந்துவிடும்.
இந்த முறை வாலுவைப் பற்றியே இருவருக்கும் கருத்து மோதல். பாலு ஏதோ பேச்சில் வாலுவை, “நீ ஒரு எலி” என்றானாம். வாலு அதை மறுத்து, “நான் ஒரு கம்ப்யூட்டர் மவுஸ்.” என்றிருக்கிறது. “மவுஸ்னாலும் எலிதான்.” என்றான் பாலு. “rat தான் எலி. mouse என்றால் சுண்டெலி. நான் கம்ப்யூட்டர் சுட்டெலி.” என்றது வாலு. “ரேட், மவுஸ் எல்லாமே எலிதான்.” என்று வாதாடியிருக்கிறான் பாலு.
ரேட்டுக்கும் மவுசுக்கும் எத்தனை வித்தியாசம் என்று எடுத்து அடுக்கியிருக்கிறது வாலு.
சுண்டெலி ஓராண்டு வரை வாழும். அதற்குள் 60 குட்டி போட்டுவிடும். பிடித்த உணவு, தானியங்கள்தான். சுண்டெலி நீச்சலடிக்கும். எத்தனை உயரம் வேண்டுமானாலும் ஏறும். பின்னங்கால்களுடன் வாலையும் முக்காலி மாதிரி வைத்து உட்காரும். இரவெல்லாம் விழித்திருக்கும்.
எலி எனப்படும் ரேட், இரண்டு ஆண்டு வாழும். அதற்குள் 70 குட்டி போடும். மாமிசம் சாப்பிடும். எலிகளும் நீந்தும். இரவில் விழித்திருக்கும்.
எலி பெரிதாக இருக்கும். சுண்டெலி குட்டியாக இருக்கும். எலிக்கு தோலில் அடர்த்தியான ரோமம் இருக்கும். சுண்டெலிக்கு அப்படி இருக்காது.
எல்லாவற்றையும்விட முக்கியம், எலி வழக்கமாக போகிற வழியில் புதிய பொருள் ஏதாவது இருந்தால் தவிர்த்துவிடும். அதனால்தான் அது எளிதில் எலிப் பொறியில் சிக்காது. ஆனால் சுண்டெலிகள் வழக்கமாக போகிற வழியில் புதிதாக ஏதாவது இருந்தால், அதை ஆராய்ந்து பார்க்க விரும்பும். எனவே, பொறி வைத்தால் எளிதில் சிக்கிக்கொள்ளும். சுண்டெலிகளுக்கு எலிகளைப் பிடிக்காது. ஏனென்றால், எலிகள் குட்டி சுண்டெலிகளைப் பிடித்து சாப்பிட்டுவிடும்.
எலி வேறு, சுண்டெலி வேறு என்று வாலு நிரூபித்ததுதான் பாலுவுக்குப் பிடிக்கவில்லை. “ஹேம்லின் நகரத்து பைய்ட் பைப்பர் மாதிரி நான் மகுடி வாசித்து, எல்லா வாலுகளையும் ஆற்றில் கொண்டு போய் மூழ்கடிக்கப் போகிறேன்.” என்றான் பாலு. “ஒய் திஸ் கொலைவெறி பாலு” என்றார் ஞாநி மாமா.
ஹேம்லினின் பைய்ட் பைப்பர், பிளேக் நோயை ஏற்படுத்தி, ஊரை நாசம் செய்துகொண்டிருந்த எலிகளைத்தான் அழித்ததாக கதை இருக்கிறது என்றார் மாமா. “அது உண்மையிலேயே நடந்த கதையா?” என்று கேட்டேன்.
ஜெர்மனியில் இருக்கும் ஹேம்லின் நகர மக்கள், இன்றும் அது ஒரு காலத்தில் நடந்ததாகத்தான் நம்புகிறார்கள் என்றார் மாமா. ஹேம்லினில் இருக்கும் ஒரு தேவாலயத்தில், 1300ம் ஆண்டு தீட்டப்பட்ட ஓவியத்தில் பைப்பர் கதை சொல்லப்பட்டிருக்கிறது. பைப்பர் கதை, 1284 ஜூன் 26 அன்று நடந்ததாக ஒரு வரலாறு சொல்கிறது. ராபர்ட் பிரவுனிங் என்ற கவிஞர், இந்தக் கதையை கவிதையாக்கியிருக்கிறார். அவர் சொல்லும் தேதி 1376 ஜூலை 22.
“இந்தக் கதை நிஜமாகவே நடந்ததா? அப்படியானால், எவ்வளவு கொடுமையானது? பாட்டு வாசித்து எலிகளை அழைத்துப் போய் ஆற்றில் இறக்கி ஒழித்ததற்காக, சொன்னபடி தனக்குப் பணம் கொடுக்கவில்லை என்பதற்காக, அந்த மகுடிக்காரன் அடுத்து அந்த ஊர் குழந்தைகளையெல்லாம் அழைத்துப் போய் ஆற்றில் இறக்கியது தப்பு இல்லையா?” என்றேன்.
“அப்படி செய்தால் தப்புதான். ஆனால், இந்தக் கதைக்கு பல விதமான பிரதிகள் இருக்கின்றன. அந்த மகுடிக்காரன் நல்லவனா கெட்டவனா என்பது கதைக்குக் கதை மாறுகிறது. ஒரு கதையில், அவன் குழந்தைகளையும் அழிக்கிறான்; இன்னொரு கதையில், ஒரு குகைக்குள் அடைத்து மூடிவிடுகிறான். வேறொரு கதையில், அவன் அந்தக் குழந்தைகளை மோசமான ஹாம்லின் நகரிலிருந்து காப்பாற்றி, ஒரு லட்சிய நாட்டுக்கு அழைத்துப் போய்விடுகிறான், இப்படி பல கதைகள் இருக்கின்றன. நான்கூட ஒரு நாடகம் எழுதியிருக்கிறேன்” என்றார் மாமா.
“உங்கள் மகுடிக்காரன் என்ன செய்கிறான்?” என்று கேட்டான் பாலு.
“என் மகுடிக்காரனும் குழந்தைகளை ஆற்றுக்கு அழைத்துப் போகிறான். ஆனால், குழந்தைகள் ஆற்றில் இறங்கவில்லை. முதலில் நிற்கும் குழந்தை மகுடிக்காரனிடம் கேட்கிறாள். எங்கள் அப்பா அம்மா உனக்கு பரிசு தராமல் ஏமாற்றியதற்கு, எங்களை ஏன் தண்டிக்க வேண்டும்? நாங்கள் பெரியவர்களானதும் உனக்கு பரிசைக் கொடுப்போம் என்கிறாள். இதைக் கேட்டதும், மகுடிக்காரன் நெகிழ்ந்து போகிறான். தன் தவறை உணர்கிறான். குழந்தைகளுக்கு மகுடி வாசிக்கக் கற்றுக் கொடுக்கிறான். இதுதான் என் கதை.” என்றார் மாமா.
”சூப்பர்.” என்ற பாலு, “இந்த மாதிரி எல்லா பழைய கதைகளையும், நாம் மாற்றி எழுதலாம்தானே” என்றான். “ஏற்கெனவே பல எழுத்தாளர்கள் பல கதைகளை அப்படி மாற்றி எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். புகழ்பெற்ற பாட்டி, வடை, காக்கா, நரி கதையை பல விதமாக மாற்றி எழுதியிருக்கிறார்கள். பொதுவாக, நரியை கெட்ட குணம் உடையதாக ஏன் காட்ட வேண்டும்?” என்றார் மாமா.
“அது நல்ல நரிதான். பாட்டியை ஏமாற்றிய காக்காவை, நரி ஏமாற்றியது சரிதானே?” என்றேன்.“வடையைப் பாட்டியிடம் திருப்பிக் கொடுத்திருந்தால், அது நல்ல நரி.” என்றார் மாமா. “என்னைக் கேட்டிருந்தால், நானே வடை கொடுத்திருப்பேனே' என்று, காக்காவிடம் பாட்டி சொன்னால் அது நல்ல பாட்டி.” என்றான் பாலு. “நல்லது. உங்களுக்குத் தெரிந்த பழம் கதைகளையெல்லாம் எப்படி மாற்றலாம் என்று ஹோம் ஒர்க் செய்யுங்கள்' என்று சொல்லிவிட்டு புறப்பட்டார் மாமா.
நாங்கள் மூவரும் தேர்ந்தெடுப்பதற்காக கதைகள் படிக்க ஆரம்பித்தோம்.

வாலுபீடியா 1: அமெரிக்காவில் இரு வகை எலிகள் இருக்கின்றன. ஒன்று நார்வே எலி. இன்னொன்று கூரை எலி. இரண்டுக்கும் ஆகாது. சந்தித்தால் கடுமையாகச் சண்டை ஆரம்பித்துவிடும்.

வாலுபீடியா 2: பைய்ட் பைப்பர் கதை, உண்மையில் மக்களின் இடப்பெயர்ச்சி பற்றியது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். பிளேக் நோயினாலோ, வேலையில்லா பிரச்னையினாலோ கூட்டம் கூட்டமாக ஊரை காலிசெய்து போவது நடந்த காலத்தில், இந்தக் கதை எழுதப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement