Advertisement

மாண்புமிகு மாணவி

யார் இவர்?
பெயர் : க.ரோஷினி பெனாசிர்
வகுப்பு : 10
பள்ளி : தி வெஸ்டர்ன் கேட்ஸ் இன்டர்நேஷனல் ஸ்கூல், எட்டிமடை, கோவை.
பெற்றோர் : கலீம் - சுமையா பானு
கனவு : ஆட்சியர் பணி

'படிக்கிற இடத்துல மாணவ, மாணவியர்கிட்டே பாலின பேதம் பார்க்கவே கூடாது. ஏன்னா, பாலின சமத்துவத்தை புரிஞ்சுக்க சரியான இடமே கல்விக்கூடம் தான்! ஆணுக்கும், பெண்ணுக்குமான பரஸ்பர புரிதல்களை இங்கே தான் நாம உருவாக்க முடியும். இது நடந்தா தான், எதிர்காலத்துல வேலைக்கு போற இடங்கள்ல சங்கோஜம் இல்லாம ஆணும் பெண்ணும் ஓர் அணியா இயங்க முடியும். ஜெயிக்க முடியும்!' தொலைநோக்கு சிந்தனையுடன் பேசுகிறார் ரோஷினி பெனாசிர்.

ரோஷினியின் கனவு உலகம்
'ஒருத்தருக்கொருத்தர் பாகுபாடு பார்க்காத மனிதர்கள்' - இதுதான் என் கனவு உலகத்துக்கு வேர். இந்த வேர் சரியா இருந்துட்டா, மரம், கிளைகள், பூ, காய், கனி எல்லாமே நல்லாயிருக்கும். வேரும் நிறைவா தன்னை உணரும். இதற்கடுத்து, என் உலகத்துல தண்ணீர் பிரச்னை இருக்காது. பின்னே, முறையான நீர் பாதுகாப்பு, நீர் சேமிப்பு திட்டங்கள் இருந்தா ஏன் தண்ணீர் பிரச்னை வரப்போகுது! இதைத்தவிர, என் உலகத்துல இயற்கை வளங்கள் பாதுகாப்பா இருக்கும். 'ஒரு மரத்தை வெட்டினா ரெண்டு மரம் நடணும்'ங்கிற சட்டம் யார் குறுக்கீடும் இல்லாம நல்லமுறையில இயங்கும்!

மனிதம் பேசலாமா?
ஒருதடவை எங்க பள்ளியில இருந்து ஒரு அரசுப் பள்ளிக்கு போயிருந்தோம். கழிப்பறை வசதி கூட சரிவர இல்லாம அங்க இருக்கிறவங்க எல்லாம் சிரமப்பட்டுட்டு இருந்தாங்க. எங்களுக்கு கிடைக்கிற வசதிகள்ல பாதி கூட அவங்களுக்கு கிடைக்கிறது இல்ல. வெளிநாடுகள்ல தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகள் தான் நல்லா இருக்கும்னு படிச்சிருக்கேன். ஆனா, நம்ம நாட்டுல அரசு பள்ளிகளோட நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. நான் ஐ.ஏ.எஸ்., படிக்கணும்னு முடிவு பண்ணினது அந்த தருணத்துல தான். என்னால முடிஞ்சவரைக்கும் அரசு பள்ளிகளோட தரத்தை உயர்த்தணும். இது தான் என் கனவு, லட்சியம்!

உன் தோழியைப் பற்றிச் சொல்; உன்னைப் பற்றி அறிகிறேன்!
இன்னைக்கு நான் ஸ்கூல் லீடரா இருக்க என் தோழி ரிதன்யா தான் காரணம். அவ, எனக்குள்ளே இருக்குற தலைமைப் பண்பை எனக்கு அடையாளம் காட்டினா! 'எந்த ஒரு விஷயத்தையும் ஆழமா யோசிக்கிற குணம் உன்கிட்டே இருக்கு. நீ ஸ்கூல் லீடரா வந்தா நல்லாயிருக்கும்'னு என்னை உற்சாகப்படுத்தினா. ஒவ்வொரு வகுப்பா போய் நான் பிரசாரம் பண்ணும் போதெல்லாம் என் கூடவே வந்து பலமா இருந்தா! தோள் கொடுப்பான் தோழன்னு படிச்சிருக்கேன். தோள் கொடுப்பாள் தோழின்னு ரிதன்யா மூலம் தான் உணர்ந்தேன்.

எங்கள் ரோஷினி - ச.சரண்யா வகுப்பு ஆசிரியை
ரோஷினி இந்த ஸ்கூல்ல சேர்ந்து ரெண்டு வருஷம் தான் ஆகுது. ஆனா, கற்பனை பண்ண முடியாத வளர்ச்சி! பள்ளி விழாக்களை கச்சிதமா ஒருங்கிணைக்கிறது அவளோட பெரும் பலம். அதேமாதிரி, பாடங்களா இருந்தாலும் சரி, வேறு விஷயங்களா இருந்தாலும் சரி, அது சம்பந்தமா தனக்குள்ளே அவ கேட்டுக்கிற கேள்விகள் தான் அவளை வார்த்தெடுக்குது!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement