Advertisement

பெண்மை என் பெருமை

'நாமளும் இவங்களை மாதிரி சந்தோஷமா வாழ முடியாதாம்மா?' - இப்படி கேட்ட அந்த சிறுவனுக்கு வயது ஐந்து.
பதிலை எதிர்பார்த்து நிற்கும் அவனை தடவி அணைத்து கண்ணீர் உதிர்ப்பதைத் தவிர, பெற்றவளால் எதுவும் செய்ய முடியவில்லை. உணர்வுப்பூர்வமான இந்த தருணத்தில், அவள் தோளில் கிடக்கும் பெண் குழந்தை வேறு அழத் துவங்குகிறது. சிறுவனிடம் இருந்து படக்கென கையை விலக்கி, அழும் குழந்தையை ஆசுவாசப்படுத்தி தன் விற்பனையைத் தொடர்கிறாள் அவள். 'கடலை... கடலை... வேர்க்கடலை, இஞ்சிமரப்பா, சாக்லெட்டு...' அவள் குரல் தாலாட்டாக, மீண்டும் கண்ணயர்கிறது குழந்தை. தாயின் கைபிடித்து வழிகாட்டியபடி முன் நகர்கிறான் சிறுவன். மகனை பின்தொடர்கிறாள் விழி இழந்த தெய்வத்தாய் சுகுணா.
'என் கணவருக்கும் பார்வை கிடையாது. ரெண்டு பேருமா சேர்ந்து தான் விற்பனைக்கு போவோம். குழந்தைகளை பார்த்துக்க யாரும் கிடையாதுங்கிறதால, அவங்களையும் கூட கூட்டிட்டுப் போயிடுவோம்!' - தன் நினைவுகளை நம்மோடு பகிர்ந்து கொள்ளும் சுகுணா, கடந்த ஆண்டு வரை, தாம்பரம் - சென்னை கடற்கரை இடையிலான மின்சார ரயிலில், தின்பண்டங்கள் வியாபாரம் செய்தவர். இன்று...

தமிழ் ஆசிரியை சுகுணா
'நம்ம கஷ்டம் நம்மளோட முடிஞ்சிரட்டும். பிள்ளைங்களாவது நல்லபடியா இருக்கணும்னா நீ படிக்கணும்'னு சொல்லி, என் கணவர் என்னை பி.ஏ., படிக்க வைச்சார். சில நல்ல உள்ளங்களோட உதவியால படிப்பு நல்லபடியா முடிஞ்சது. அப்படியே பி.எட்., முடிச்சு, எம்.ஏ., படிச்சிட்டு இருந்தேன். வழக்கம்போல ஒருநாள், ரயில்ல விற்பனை பண்ணிக்கிட்டே என் பையனுக்கு பாடம் சொல்லி கொடுத்துட்டு இருந்தேன். அதைப் பார்த்த சந்தானம்ங்கிற ஒரு நல்ல மனிதர், 'மாற்றம் அறக்கட்டளை' சுஜித் சார்கிட்டே என்னை அறிமுகப்படுத்தினார். அவர் வழிகாட்டுதல்ல, இன்னைக்கு ஒரு தனியார் பள்ளியில தமிழ் ஆசிரியையா வேலை பார்த்துட்டு இருக்குறேன்.

உதவும் கரங்கள் இல்லாத உலகம் எப்படியிருக்கும்?
அது எப்படி இருக்கும்; இயங்கும்? பலபேர் சந்தோஷமா வாழ்றதுக்கும், பலபேர் இந்த உலகத்துல உயிரோட உலவுறதுக்கும் அந்த கரங்கள் தானே காரணம்! ஆனா, இதுல ஒரு பெரிய தவறு நடந்துட்டு இருக்கு. ஆமா, இன்னைக்கு உதவி செய்ற மனசோட நிறைய பேர் தயாரா இருந்தாலும், அந்த உதவியை சரியான முறையில பயன்படுத்திக்க யாரும் தயாரா இல்லை. உதவிங்கிறது கடவுள் நமக்கு தர்ற வாய்ப்பு. அந்த வாய்ப்புக்கு கைமாறு செய்ய வேண்டாம். ஆனா, அதுக்கு உண்மையா இருக்கணுமில்ல?

வலிகளின் சாட்சி தானே கண்ணீர்?
அப்படி பொதுவா சொல்லிட முடியாது. நான் ரயில்ல விற்பனை பண்ணிட்டு இருக்குறப்போ, சில பேர் என்கிட்டே தவறான எண்ணத்தோட நெருங்குவாங்க. சில காவலர்கள் என் பொருட்களை தூக்கி வீசுவாங்க. அந்தநேரங்கள்ல என் இயலாமையை நினைச்சு அழுவேன். அது வலி. ஒருதடவை என்கிட்டே தப்பா நடந்துக்க முயற்சி பண்ணின ஒருத்தனை, என் அஞ்சு வயசு மகன் தட்டிக் கேட்டான். அந்த சமயத்துலேயும் எனக்கு கண்ணீர் வந்தது. ஆனா, அது ஆனந்த கண்ணீர். அதுக்கு காரணம், என் மகன் தந்த நம்பிக்கை. சந்தோஷம்.

காஞ்சிபுரம் மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் வசித்து வரும், 34 வயது சுகுணாவிற்கு, ஒரு வயதிலேயே அம்மை நோயால் பார்வை பறிபோயிருக்கிறது. பள்ளிப்படிப்பை பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளியில் முடித்தவர், கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து இந்த உயரம் தொட்டிருக்கிறார். தனக்கு பிஎச்.டி., பட்டம், தன் மகனுக்கு ஐ.ஏ.எஸ்., கவுரவம், மகளுக்கு டாக்டர் அந்தஸ்து, இவை தான் சுகுணாவின் தற்போதைய கனவுகள். இன்னும் வேர்க்கடலை வியாபாரத்தை கைவிடாமல் இருக்கும் சுகுணாவின் கணவர் ஏழுமலைக்கு, தன் மனைவியின் கனவுகளை நிறைவேற்றி வைப்பது குறிக்கோள்!

இறைவன் கல்நெஞ்சக்காரன் - இப்படி சொல்லலாமா?
ஏன் அப்படி சொல்லணும்? தன்னம்பிக்கை இல்லா மனிதர்களுக்கு ஒரு பாடமா இருக்கிறதுக்காக; ஒரு பெண் நினைச்சா எதையும் சாதிக்கலாம்னு மற்ற பெண்களுக்கு உணர்த்துறதுக்காக; 'முயற்சி தோற்காது'ன்னு இந்த உலகத்துக்கு புரிய வைக்கிறதுக்காக, கடவுள் எங்களை மாதிரி மனிதர்களை படைச்சிருக்கார். ஒரு உயிர் மூலமா இன்னொரு உயிருக்கு வழிகாட்டுறதை கல் மனம்னு சொல்லக்கூடாது. அது, கருணை மனம்!

சரி, இத்தனை நாள் வாழ்க்கை என்ன கற்றுக் கொடுத்திருக்கு?
இருக்கிறதை வைச்சு சிறப்பா வாழ கத்துக் கொடுத்திருக்கு. நாம சாப்பிடுற சோறு நமக்கானதா இருக்கணும்னு சொல்லிக் கொடுத்திருக்கு. கையில பணமிருந்தா உதவுறதுக்கு யோசிக்கக் கூடாதுன்னு கத்துக் கொடுத்திருக்கு. பாவம், பரிதாபம்னு சொல்லி யாரையும் கோழையாக்கிடக் கூடாதுன்னு சொல்லிக் கொடுத்திருக்கு. உதவி செய்யலைன்னாலும் பரவாயில்லை, கை நீட்டுறவங்களை காயப்படுத்தக் கூடாதுன்னு கத்துக் கொடுத்திருக்கு. மாற்றுத் திறனாளிகளை உதாசீனப்படுத்தக் கூடாதுன்னு புரிய வைச்சிருக்கு. அவ்வளவு தான்!

இறுதியா ஒரு கேள்வி. எது ஊனம்?
உடலை இயங்க விடாம வைக்கிற சக்தி மனசுக்கு இருக்குறது உண்மைன்னா, அந்த மனசுல ஏற்படுற ஊனம் தான் உண்மையான ஊனம்.

சுகுணாவின் புதுப் புது அர்த்தங்கள்
இயலாமை: முயலாமை எனும் காயத்தில் வழியும் சீழ்
அழகு: அகக்கண்களால் உணர வேண்டிய அற்புதம்
நேரம்: மீண்டு வராத நிகழ்கால பொக்கிஷம்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement