Advertisement

உன்னைப் போல் ஒருவன்! (வட்டார மொழி சிறுகதை)

தான் வேலை செய்யும் ஓட்டலுக்கு எதிரில் உள்ள, நவீன ரக சலூன் கடைக்கு, தினமும், நான்கைந்து முறையாவது வந்து போகிற, தன் ஊரை சேர்ந்த இளைஞன் சிவகொழுந்துவை பார்க்கும் போதெல்லாம், உதறலெடுத்தது, பூச்சி என்ற மகாராசனுக்கு!
'அடக் கடவுளே... ஏழ்ர நாட்டுச் சனி, காலச் சுத்தின கதையா, நம்ப ஊர்க்காரப்பய, இந்த ஊருக்கா வந்து தொலையணும்... நாம, வெட்டியான் வேல பாத்த சங்கதிய, ஓட்டல் ஓனருகிட்ட சொல்லி தொலைச்சிட்டான்னா... வேலைக்கு வேணாம்ன்னு தொரத்தி வுட்ருவாரே... இப்போ இருக்குற பொழப்பும், குப்புறவாக்குல கவுந்து, குடி முழுகிப் போயிருமே...' என்று எண்ணியவனுக்கு, திகில், நொடிக்கொருதரமாக, மனசை நாராய் கிழித்தது.
'எப்படியாவது இந்த மாசம் மட்டும் அந்தப்பய கண்ல படாம வேல பாத்துட்டு, வேற எடத்துல வேல வெசாரிச்சு போயிரணும்...' என்று, தீர்மானித்து, சமையல் வேலையில் தீவிரமானான்.
பூச்சியின் சொந்த ஊர், மதுரைக்கு பக்கத்தில் ஒரு கிராமம். ஊரில் இவன் தான் ஆஸ்தான வெட்டியான். அக்கம், பக்கத்து கிராமங்களில் யாராவது இறந்து போனால், சங்கு ஊதுவது, 'மயான ரதம்' என்றழைக்கப்படுகிற, பிண ஊர்தியை மயானத்துக்கு இழுத்துப் போவது, குழி தோண்டி, பிணத்தை புதைப்பது அல்லது எரிப்பது என, எல்லா விதமான மயான வேலைகளுக்கும் இவனைத் தான் அழைப்பர்.
மாதத்திற்கு, 4,000 ரூபாய்க்கு குறையாமல், வருமானம் வந்து விடும்; ஆனாலும், வசீகரமின்றி மூளியாய் கிடந்தது, அவனது வாழ்க்கை. ஒரே மகளை மேலூரில் வெட்டியான் வேலை பார்க்கும் உறவுக்காரனுக்கு கல்யாணம் செய்து கொடுத்திருந்தான்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரை, பூச்சியின் வாழ்க்கை, சகஜமாகத் தான் கழிந்தது. ஆனால், சில மாதங்களுக்கு முன், பக்கத்து ஊரில் மின்சார தகன மையம் துவங்க, இவனது தொழில் ஆட்டங்கண்டது. 'செல்லாயி... எங்க எழவு வுழுந்தாலும், நா போயி, சங்கு ஊதுன நெலம மாறி, இப்ப கரென்ட் சுடுகாட கொணாந்து, ஏந்தொழிலுக்கே சங்கூதிட்டாய்ங்க...' என, மனைவியிடம் புலம்பினான்.
'ஏந்தான் இப்டி பயந்து சாவுற... நோவுக்கும், சாவுக்கும் பஞ்சமில்லாத இந்த ஒலகத்துல, எம்புட்டு கரென்ட் மிஷினு வந்தாலும், ஒந் தொழிலுக்கு எந்தக் கேடும் வராது; கெத்தா இரு...' என்றாள், செல்லாயி.
ஆனாலும் தொழிலும், வருமானமும் குறைந்து தான் போனது. முன்னை போல, உடல் நிலையும் ஒத்துழைக்கவில்லை; பிரேதத்தை எரிக்கும் போது, குடலை புரட்டும் அதன் நாற்றம் தெரியாமலிருக்க, மட்டமான, 'சரக்கை' குடித்ததால், அவ்வப்போது வயிற்றுவலி வந்து வேதனைப்படுத்தியது.
'யோவ்... இந்த வேல போனாப் போவுது; ஏதாவது ஒரு ஓட்டல்ல, டேபிளு தொடைக்கிற வேல இருந்தா கேட்டுப் பாருய்யா...' என்றாள், செல்லாயி.
அவள் கூறிய யோசனை சரியாகப்பட்டதால், உள்ளூரில் சில ஓட்டல்களுக்கு வேலை கேட்டுப் போனான்.
'ஒன்ன கொண்டாந்து வேலக்கி வெச்சா, எவெஞ் சாப்பிட வருவான்... இது ஒண்ணும் மயானமில்ல; ஓட்டலு. ஒன்ன வேலக்கி வெச்சு, எனக்கு நானே சூனியம் வெச்சிக்கவா...' என்ற வார்த்தைகளே, பதிலாய் வந்தன.
ஒரு முடிவுக்கு வந்த பூச்சி, 'இந்த ஊர்ல இருந்தா, ஒருத்தரும் நமக்கு வேல குடுக்க மாட்டாங்க; வெளியூருக்கு போயி, வேல தேடலாம்...' என்று, மனைவியுடன் மூன்று மாதங்களுக்கு முன் தான் நகரத்துக்கு வந்து சேர்ந்தான்.
இங்கு வந்ததும், பூச்சி என்ற தன் பெயரை, மகாராசன் என்று மாற்றி, ஓட்டல்களில் வேலை தேடத் துவங்கினான்.
நகரத்தில் உள்ள பெரிய ஓட்டல்களில், ஓட்டல் சங்கர விலாசும் ஒன்று! அதன் உரிமையாளர் சங்கரதாசை சந்தித்து, 'ஐயா... ஏம்பேரு மகாராசன்ங்க; உங்க ஓட்டல்ல, ஏதாச்சும் வேல இருந்தா குடுங்கைய்யா; நல்லாச் செய்வேன்...' என்று, கெஞ்சலாக கேட்க, 'இதுக்கு முன் எந்த ஓட்டல்ல வேல பாத்தே...' என்று கேட்டார், சங்கரதாஸ்.
'நா எந்த ஓட்டல்லயும் வேல பாக்கலீங்க... சொந்தமா பூ கட்டி, தெருத் தெருவாப் போயி, ஏவாரம் பாத்துக்கிட்டிருந்தேன். வயசானதால, அலைஞ்சு ஏவாரம் செய்ய முடியல; எங்க ஊர்ல வேல வாய்ப்பும் கம்மி. அதான், இந்த ஊருக்கு கிளம்பி வந்துட்டேன்...' என்றான்.
சிறிது நேரம் மவுனமாயிருந்த சங்கரதாஸ், 'டேபிள் துடைக்கிற வேலதான் இருக்கு; இப்போதைக்கி, இந்த வேலைய நீ செஞ்சிட்டிருந்தீயின்னா, கொஞ்ச நாள் கழிச்சு, சப்ளையரா பிரமோசன் குடுத்துருவேன்; சம்மதம்ன்னா செய்யி...' என்றார்.
தன் முதல் முயற்சியே, வெற்றியாய் கனிந்ததில், மனசுக்குள் பரவசம் தொற்றிக் கொண்டது. வறுமையில் துருப்பிடித்துக் கிடந்த தன் வாழ்வை, புதுப்பிக்க கிடைத்த வரமாக நினைத்து, மகிழ்ந்து போனான்.
தினமும், இருநூறு ரூபாய் கூலி; மூன்று வேளையும் சாப்பாடு; மீந்து விடும் உணவுப் பொருட்களை வீட்டுக்கு எடுத்துப் போகலாம் என்ற கூடுதல் சலுகை என, பல்வேறு வகையிலும், இந்த வேலை திருப்தி தரக் கூடியதாகவே இருந்தது.
அவன் மனைவி கூட, 'நெசமாவே இப்பத்தேன் நம்ப ஜென்மம் விடிய ஆரம்பிச்சிருக்குறாப்ல இருக்குதுய்யா...' என்றாள், நிம்மதியுடன்!
ஓட்டலுக்கு அருகில், பிரசித்த பெற்ற கோவில் இருப்பதால், கோவிலுக்கு வரும் பெரும்பாலானோர், இந்த ஓட்டலில் தான் சாப்பிடுவர். அதனால், சர்வர் முதற்கொண்டு, சமையற்காரர் வரை, நெற்றி நிறைய விபூதியும், நடுவில் சந்தனமும் வைத்துக் கொள்ள வேண்டும்
என்பது, சங்கரதாசின் கட்டளை. மறந்து போய் வெறும் நெற்றியுடன் வந்தால், சங்கரதாசுக்கு கோபம்
வந்து விடும்.
முதன் முதலில், நெற்றியில் விபூதிப்பட்டையும், குங்குமமும் பூசி வந்த பூச்சியைப் பார்த்து, 'எலேய்... கருவாயா... அச்சு அசலா அந்த அய்யனாரு சாமி கணக்கா அம்புட்டு அம்சமா இருக்கப்பா...' என்று நையாண்டி செய்தார், சங்கரதாஸ்.
சங்கரதாஸ் எப்போதும் நெற்றி நிறைய விபூதியும், குங்குமமும், கழுத்தில் நான்கைந்து ருத்திராட்ச மாலைகளுமாகத் தான் காட்சியளிப்பார். பொய் பேசுவது அவருக்கு பிடிக்காது.
'இம்புட்டு ஆச்சாரமாக இருக்கிற முதலாளிகிட்ட, நாம வெட்டியான் வேலை பார்த்த விஷயத்த சிவகொழுந்து சொல்லிடுவானோ... அதக்கேட்டு, 'பஞ்சம் பொழைக்க வந்த நாறப்பய, நம்பள ஏமாத்திட்டானே'ன்ற கோவத்துல, கண்டமேனிக்கு வஞ்சு, வேலையவுட்டு தூக்கிருவாரோ...' என்று, பயந்தான், பூச்சி.
அதனால், சிவகொழுந்துவின் பார்வையில் சிக்கி விடக் கூடாது என்பதற்காக, 'மொதலாளி... ரெண்டு நாளா கால்ல நகச் சுத்து வந்து, வலி உசிரெடுக்குது; நடக்க முடியல. சமையக்கட்டுல ஏதாவது வேலை இருந்தா குடுங்க...' என்று சொல்லி, டேபிள் துடைக்கும் வேலையிலிருந்து, சமையற்கட்டு வேலைக்கு போனான்.
அதன்பின், சமையல் கட்டே கதியாகி, பெரும்பாலும், வெளியில் வருவதே இல்லை. சப்ளையர் முனியன் கூட, 'என்னப்பா மகாராசா... என்னமோ சமைஞ்ச கொமரிப்புள்ள கணக்கா, சமையக் கட்டுக்குள்ளாரவே இருக்குற...' என்று, நக்கலாய் கேட்டான்.
இரண்டு வாரத்திலேயே, காய்கறிகள் நறுக்குவதில் ஆரம்பித்து, சோறு, சாம்பார், பொரியல், கூட்டு என, எல்லா விதமான ஐட்டங்களையும் சமைக்க கற்றுக் கொண்டான், பூச்சி. சங்கரதாஸ் கூட,'பரவாயில்லயே... நாங்கூட உனக்கு காலு வலி தீந்ததும், சப்ளையர ஆக்கிரலாம்ன்னு நெனச்சேன்; நீ நல்லாச் சமைக்கிறதால, அதையே கவனிச்சுக்கப்பா...' என்றார்.
இது, அவனுக்கு நிம்மதியை தந்தது.
சிவகொழுந்துவின் கண்களில் பட்டு விடாதபடி, சமையற் கட்டில் தலைமறைவாக இருந்த பூச்சி, மாலையில், தற்செயலாக வாடிக்கையாளர்கள் சாப்பிடும் இடத்திற்கு வந்தான்.
அப்போது, இட்லி பார்சல் வாங்குவதற்காக, ஓட்டலுக்கு வந்திருந்தான், சிவகொழுந்து. அவனைப் பார்த்ததும், தோளில் கிடந்த டவலால், முகத்தை மறைத்தபடி, சட்டென்று பக்கவாட்டில் இருந்த, பாத்ரூமுக்குள் நுழைந்து கொண்டான்.
பத்து நிமிடங்களுக்குப் பின், பதற்றத்தில் முகமெல்லாம் வியர்த்துக் கொட்ட, வெளியில் வந்த பூச்சியிடம், சங்கரதாஸ், 'என்னப்பா மகாராசா... சமையற்கட்ல வேல பாத்தா, வேற ஒண்ணுஞ் செய்யக் கூடாதா... யாராவது பார்சல் கேட்டு வரும் போது தான் ஒனக்கு பாத்ரூம் வருமா... பார்சல கட்டிக் குடுத்துட்டு போறதுக்குள்ளார, அப்டியா முட்டிக்கிட்டு வருது...' என்றார், வெடுக்கென!
பதில் சொல்லாமல், தலையை கவிழ்ந்து, நகர்ந்தான், பூச்சி.
மனதுக்குள், 'இப்படியே எத்தன நாளைக்கு பயந்து, பம்மிட்டு கிடக்குறது... நாம மயானத்துல வேல பாத்த விஷயம் மொதலாளிக்கு தெரிஞ்சு, அவர் நம்மள கண்டமேனிக்கு வஞ்சு, தொரத்தியடிக்கிறதுக்குள்ள, நாமளாவே இங்கேர்ந்து போயிரணும்...' என்று நினைத்தான்.
வேலை முடிந்து, வீட்டுக்குப் போன பூச்சி, மனைவியிடம் விஷயத்தை சொல்லி, சிறிது நேரம் புலம்பினான். பின், பாயை விரித்து உறங்க ஆயத்தமாக, வாசலில் யாரோ, 'மகாராசா... மகாராசா...' என கூப்பிட, கதவை திறந்தான், பூச்சி.
வாசலில், சங்கரதாசும், அவருக்கு அருகில் சிவகொழுந்துவும் நின்றிருப்பது, தெருவிளக்கின் மங்கலான வெளிச்சத்திலும், 'பளிச்'சென தெரிந்தது.
இதயம் படபடக்க, 'அடக் கொடுமையே... எவென் கண்ணுலப் படக் கூடாதுன்னு சமையக்கட்ல மறஞ்சு கெடந்தேனோ, அவனே வீட்டக் கண்டுபுடிச்சு, முதலாளியோட வந்துட்டானே...' என்று நினைத்தவன், ''ஐயா... நீங்க எதுக்கு இந்த ராத்திரியில என்னைத் தேடி...'' என்று இழுத்தான்.
''ஒன்னோட உண்மையான பேரு பூச்சி தானே... இதுக்கு முன், மயான வேல தான பாத்துக்கிட்டிருந்த...'' என்றார், சங்கரதாஸ்.
உடலும், மனசும் கிடுகிடுக்க, 'ஆமா...' என்பது போல் தலையாட்டி, ''வயித்துப் பொழப்புக்காக, பொய் சொன்னது தப்புத்தானுங்கய்யா; என்னை மன்னிச்சிருங்க,'' என்றான், பயத்துடன்!
''அட நீ எதுக்குப்பா, எங்கிட்ட மன்னிப்பு கேக்குற... அப்டி, என்ன தப்பு செய்துட்ட... நீ, என் ஓட்டல்ல வேலைக்கு சேர்ந்த மறுநாளே, ஒன்ன பத்தின, எல்லா விவரங்களையும், சிவகொழுந்து எங்கிட்ட சொல்லிட்டாப்ல... எங்க உண்மை தெரிஞ்சு, உன்னை வேலையவுட்டு நிறுத்திருவேனோன்னு பயந்து, சிவகொழுந்து கண்ல பட்ராம, மறைஞ்சு மறைஞ்சு வேல பாத்தத கவனிச்சிட்டுத்தான் இருந்தேன்.
''எதுக்கு பயப்படணும்... நீ ஒழைச்சி தானே வாழ்ற; என்னை, ஏமாத்தி சம்பளம் வாங்கலையே...'' என்றவர், அருகில் நின்றிருந்த சிவகொழுந்துவை சுட்டிக்காட்டி, ''இதோ சிவகொழுந்து கூட, படிச்சிட்டு, வேல எதுவும் கெடைக்காததால, அவரோட பிரெண்ட்சுங்களோட சேர்ந்து, சலூன் கடை வெச்சுருக்கார். ஒரு கம்பெனில ஆபீசரா வேல பாக்குறதா பொய் சொல்லி, வீட்டுக்கு பணம் அனுப்பிட்டு இருக்காரு. அதுக்காக அவர் தீண்டத்தகாதவர் ஆயிடுவாரா... நீ, இத நெனச்சு, மனம் சங்கடப்படக் கூடாதுன்னு சொல்லத் தான் சிவகொழுந்த கூட்டிட்டு இந்நேரத்துக்கு உன் வீட்டுக்கு வந்தேன். நாளைக்கு வேலைக்கு வந்திரு,'' என்று கூறி, சிவகொழுந்துடன் அங்கிருந்து நகர்ந்தார்.
இன்ப அதிர்ச்சியுடன், அவர் செல்வதையே பார்த்தான், பூச்சி. பயத்தில் படபடத்த இதயத்திற்கு, அவர் சொன்னது, சொடக்கெடுத்தது போல் சுகமாயிருந்தது.

அல்லிநகரம் தாமோதரன்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement