Advertisement

திண்ணை!

அரசியல் கட்டுரை எழுத்தாளர், பரந்தாமன் எழுதிய, 'ராஜாஜி நூற்றுக்கு நூறு' நூலிலிருந்து: காங்கிரஸ் கட்சியின் சார்பாக, 1952ல், தமிழக முதல்வராக பதவியேற்றார், ராஜாஜி. அவரால் கொண்டு வரப்பட்ட, 'குலக்கல்வித் திட்டத்தை' எதிர்த்து, தி.மு.க., - தி.க., கட்சியினர் மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியினர் கூட, 'ராஜாஜி ஒழிக...' என்று கோஷமிட்டு, அவரை பதவி இறங்கச் செய்தனர்.
காங்கிரஸ்காரர்களுக்கு, இந்த அளவுக்கு, ராஜாஜி மீது ஆத்திரம் வருவதற்கு காரணம், எம்.எல்.ஏ.,க்களும், எம்.எல்.சி., மற்றும் காங்கிரஸ் தலைவர்களும், 'சென்னை, தலைமைச் செயலகத்திற்கு வரவோ, மாவட்டங்களில் கலெக்டர்களை சந்திக்கவோ கூடாது; அத்துடன், போலீஸ் ஸ்டேஷனுக்கு போகவோ, தாசில்தாரை பார்க்கவோ, எந்த சிபாரிசும் கேட்கவோ, எந்தப் பிரச்னைகளிலும் தலையிடவோ கூடாது...' என்று, ராஜாஜி கண்டிஷன் போட்டதே காரணம்.
ஏற்கனவே, காங்கிரஸ் ஆட்சி மூலம், செல்வாக்கு மற்றும் ஆதாயங்களை பெற்று வந்தவர்களுக்கு, அவை திடீரென நின்று போனால், எவ்வளவு கஷ்டமாக இருக்கும்!
அகில இந்திய காங்கிரசின் முடிவுப்படி, சிறை சென்ற காங்கிரஸ் தியாகிகள், தியாகி மானியமாக பெற்றிருந்த, ஐந்து ஏக்கர் நிலத்தை, 'தியாகத்திற்கு கூலி பெற்றது தவறு...' என்று குற்றம் சாட்டி, 'நல்ல காங்கிரஸ்காரர்கள், தியாகி மானியத்தை, திரும்பக் கொடுக்க வேண்டும்...' என்று, அறிக்கையும் விட்டார், ராஜாஜி. அப்படி, தியாகி மானியத்தை திரும்ப தந்தவர்கள் ஒரு சிலரே! பல காங்கிரசார், வேறு சிலரின் பெயரில், தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி, நில அபகரிப்பும் செய்திருந்தனர்.
அந்நாளில், கழகத்தினர் மற்றும் மாற்று கட்சியினரும், காங்கிரஸ்காரர்களை, 'அஞ்சு ஏக்கர் தியாகிகள், டபுள் பாக்கெட் ஜிப்பா, நாலரை அவுன்சு ரேஷன் அரிசி...' என்ற பட்டப் பெயர்களில் தான், பொதுக்கூட்டங்களில் அழைப்பர்; பத்திரிகைகளில் எழுதுவர்; சுவர்களிலும் எழுதி இருப்பர்.
அதேபோல, ராஜாஜியை இழிவுபடுத்தி பேசும் வார்த்தைகளுக்கு வரம்பே கிடையாது. 'உச்சிக்குடுமி மந்திரி சபை, அக்ரஹார மந்திரி சபை, பூணுால் ஆட்சி, தர்ப்பைப் புல் ஆட்சி மற்றும் குல்லுக பட்டர்....' என்றெல்லாம் சுவர்களில் எழுதியிருப்பர். இப்படி எல்லாரும் அவரை எதிர்க்கின்றனரே என்று, ராஜாஜியை ஆதரித்துவிடவில்லை, பிராமணர்கள். பெரும்பாலோர் அவரை எதிர்க்கவும், எதிர் அணியில் இருக்கவும் தான் செய்தனர்.
காங்கிரசில் இருந்த பிராமணர்களில் பெரும்பாலோர், காமராஜர் அணியில் தான் இருந்தனர். பிராமணர்களில், அய்யங்கார் அல்லாதவர்களில் நூற்றுக்கு எழுபது பேருக்கு அவரை பிடிக்காது என்றால், அய்யங்காரில், நூற்றுக்கு தொண்ணுாறு பேருக்கு, அவரை பிடிக்காது. ஆனால், பிராமணர்கள் அல்லாதவர்களின் ஒருமுகப்பட்ட கருத்தோ, 'ராஜாஜி, பிராமணர்களுக்கு சாதகமானவர்...' என்பதே ஆகும்.
இது, மிகப் பரிதாபகரமான நிலை. இந்த, இரு பக்கக் கொள்ளிகளின் நடுவில், அவர் தன் நிலையில் இருந்து கோணாமல், நிமிர்ந்து நின்றது, மாபெரும் துணிவாகும்.
சில காங்கிரஸ் தலைவர்கள், ராஜாஜியிடமிருந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக, ராஜாஜிக்கு எதிராக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களிடம் கையெழுத்து வேட்டைக்கு,
ஊர் ஊராகச் சென்றனர். இதையெல்லாம் எதிர்த்திருக்க வேண்டிய காமராஜர், எதிர்க்காதது மட்டுமல்ல, பின்னணியில், மாற்றுக் கட்சியினரிடம் கூட, தொடர்பு வைத்துள்ளார் என்பதை புரிந்து கொண்டார், ராஜாஜி.
நேருஜியுடன் தொடர்பு கொண்டு விளக்கினார். அவரோ, 'ஜனநாயகத்தில் இதெல்லாம் தவிர்க்க முடியாதது...' என்று கூறி விட்டார்.
ராஜாஜியோ, போட்டிக்கு ஆள் தேடாமல், பலப்பரீட்சையில் ஈடுபடாமல் ஒதுங்கியவர், 'மீண்டும் ஒருமுறை ராமாயணத்தை படிக்க வேண்டும் என்று அந்தக் காவியத்தை எடுத்து வைத்தேன். பட்டாபிஷேகத்திற்கு தயாராக இருந்த ராமர், வனவாசம் செல்ல நேர்ந்தது போல, நானும், படிக்க முடியாமல் முதலமைச்சர் பதவி ஏற்க நேர்ந்தது. விரித்து வைத்த புத்தகம் அப்படியே இருக்கிறது; அதை, உடனே தொடர இருக்கிறேன்...' என்றார்.
ஒன்றை பற்றும் போது பலமாக பற்றுவதும், விட்டு விடும்போது, சுவடு கூட தெரியாமல் விட்டுவிடுவதும், ஞானிகளின் இயல்பு!

நடுத்தெரு நாராயணன்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement